திருவாரூர் மாவட்டத்திலுள்ள 'சதுரங்க வல்லபநாதர்' பற்றி குறிப்பிட்ட பிரதமர் - அந்த கோவிலின் சிறப்பு என்ன?
By : Dhivakar
சென்னை: நேற்று(28-7-2022) நடந்த 44'வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி திருவாரூர் மாவட்டத்திலுள்ள 'சதுரங்க வல்லபநாதர்' என்ற சிவன் கோயிலுக்கும் சதுரங்க விளையாட்டிற்குமுள்ள தொடர்பு குறித்து பேசினார்.
அடுத்த கணமே அனைவரும் 'சதுரங்க வல்லபநாதர்' கோயிலைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாகினர்.
திருவாரூர் மாவட்டம் பூவனூர் என்னும் கிராமத்தில், 'சதுரங்க வல்லபநாதர்' என்ற சிவாலயம்வுள்ளது. காவிரி தென்கரையிலுள்ள 103வது சிவாலயமாகும்.
ஆலயத்தின் மூலவர் 'சதுரங்க வல்லபநாதர்' என்ற பரமசிவன். ஸ்தல வரலாறாக கூறப்படுவது, 'வசுசேனன்' என்ற உள்ளுர் மன்னருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உண்டு. ராஜேஸ்வரி சிறப்பாக சதுரங்கம் விளையாடுவதால், "தன் மகளை எவர் சதுரங்கப் போட்டியில் வெல்கிறானோ, அவனே என் மகளை திருமணம் செய்வார்" என்று மன்னர் கட்டளையிட்டார். பின் தன் மகளை யாரும் சதுரங்கப் போட்டியில் வெல்ல முடியாததால், மனமுடைந்த மன்னர் இறைவனிடம் வேண்டினார்.
பின் சிவபெருமான் சித்தர் வடிவில் தோன்றி, மன்னரின் மகளை சதுரங்க போட்டியில் வெற்றிக்கொன்டார். பின் இறைவன் தன் உண்மை ரூபத்தை மன்னருக்கும் மக்களுக்கும் காட்சி கொடுத்தார். பின் மன்னரின் மகளாய்த் தோன்றிய அம்பிகையை மணந்ததார். இதனால் இறைவனுக்கு 'சதுரங்க வல்லபேசுவரர்' என்ற பெயர் ஏற்பட்டது. சைவப்புலவர் திருநாவுக்கரசரால் தேவாரத்தில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.
"ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே" என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்தைப் பற்றிப் போற்றிப் பாடியிருக்கிறார்.
"இக்கோயிலின் மூலவர் கோபுரம் 13 அல்லது 14'ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் எழுப்பப்பட்டதாக இருக்கக்கூடும்" என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதி வருகின்றனர்.
"இத்தல வரலாறு சொல்லவருவது என்னவென்றால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு, சதுரங்க விளையாட்டு இங்கே விளையாடப்பட்டது. இந்தியாவில் தோன்றிய சதுரங்க விளையாட்டு மேற்கத்திய நாடுகளுக்கு சென்று சில மாற்றங்களை கண்டது." என்று ஜோதிமலை இறைபணி கூட்டத்தின் நிறுவனர் ஸ்ரீ திருவடிகுடி சுவாமிகள் கூறியுள்ளார்.
எங்கோ தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயத்தை பற்றி, நாட்டின் பிரதமர் உலக அரங்கில் பாராட்டி பேசியது, அனைத்து தமிழ் மக்களையும் நெஞ்சம் குளிர வைத்துள்ளது.