Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திர இந்தியாவிற்கு தன் பங்களிப்பால் புரட்சி விதை விதைத்த பூலித்தேவனார் வரலாறு!

சுதந்திர இந்தியாவிற்கு தன் பங்களிப்பால் புரட்சி விதை விதைத்த பூலித்தேவனார் வரலாறு!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  9 Aug 2022 4:25 AM GMT

புலி தேவர் அல்லது பூலித்தேவர் தமிழகம் தந்த வீரமிகு மறவர்களில் முதன்மையானவர். அவரின் வீரமும், நெஞ்சுரமும் பல தலைமுறைகள் கடந்து இன்று படித்தாலும், தெரிந்து கொண்டாலும் அவர் தம் வரலாறை கேட்பவர்களுக்குள் வீரம் சுரக்கும்.

இந்திய சுதந்திர போரட்டத்தில் தமிழகம் வழங்கிய பங்களிப்பை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. "நெற்கட்டான் செவ்வலை " தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்தவர் பூலித்தேவன். இவர் வாழ்ந்த காலம் (1715 முதல் 1767 வரை). ஆங்கிலேயர்கள் இவரை ஆங்கிலத்தில் தமிழ் பொலிகர் என்று அழைப்பதுண்டு. திருநெல்வேலியை சார்ந்த தென்காசி பகுதியில் சங்கரன் கோவில் தாலுக்காவில் அமைந்திருந்தது இவரின் தலைமையிடம்.

கிழக்கு இந்தியா கம்பெனியை எதிர்த்து குரல் கொடுத்த முதல் வீரர் இவர். இன்றளவும் இந்தியாவின் முதல் விடுதலை போராக கருதப்படுவது சிப்பாய் கலகம் ஆகும். இந்த கலகத்திறும் முன்னோடியாக கருதப்படுபவர் பூலித்தேவனார். இவர் எழுப்பிய "வெள்ளையனே வெளியேறு " என்கிற முழக்கம் இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் பிள்ளையார் சுழியாக அமைந்தது எனலாம்.

பூலித்தேவனின் வாழ்கை என்பது அரசன் என்பதற்காக ஆடம்பரமாக இருந்ததல்ல, கரடு முரடான பாதையில், விடுதலையே வேட்கையாக நெருப்பாற்றில் நீந்தி தன் வாழ்வை கடந்தார் என்பதற்கு சான்றாக இந்த நாட்டுப்புற பாடல் வரிகளை நாம் நினைவு கூறலாம்.

"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?

நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே "

ஆதியில் இவரின் ஊரின் பெயர் ஆவுடையாபுரம் என்றே அழைக்கப்பட்டது . ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் தன் மீது ஆதிக்கம் செலுத்தும் யாருக்கும் வரியின் பெயரால் ஒரு நெல் மணியை கூட கொடுக்கமாட்டார் என்பதால் இவரின் ஊர் பெயர் நெற்கட்டுஞ் செவ்வல் என்றானதாக சொல்லப்படுகிறது.

பூலித்தேவரின் ஆட்சி காலம் என்பது பாண்டியராட்சியின் முடிவுக்காலமாக, நாயக்கராட்சியின் சரிவு காலமாக, ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்களுடன், ஆங்கிலேயரின் வருகையும் சேர்ந்திருந்த மிகந்த கடுமையான காலம். பூலித்தேவர் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து கப்பம் கட்டுவதை தடுத்ததால் , ஆர்காடு நவாப் ஆங்கிலேயரின் உதவியை நாடினான். வரி வசூலிக்கும் பொறுப்பை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.

பூலித்தேவர் செய்து வரும் கூட்டணி முயற்சி குறித்து அறித ஆங்கிலேயர்களல் மற்ற பாளையகாரர்களுக்கு பதவி ஆசை காட்டவே, அவர்களில் சிலர் இந்த கூட்டணியிலிருந்து விலகினர். 1755 முதல் 1767 வரை பூலித்தேவன் கடுமையான போராட்டங்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக சந்திக்க நேர்ந்தது . பரப்பளவில் சிறிய நாட்டின் தலைவனாக இருந்தாலும், வீரத்திலும், தீரத்திலும் அவனை எதிர்க்க ஆங்கிலேயர்கள் திண்டாடினர் என்பதே உண்மை.

பத்தாண்டுகளுக்கும் மேல் போரில் நீடித்து நின்ற இன்றியமையா வீரன் பூலித்தேவனின் வீரத்தை எதிர்க்க ஆங்கிலேயர்கள் பீரங்கிகளுடன் களம் இறங்கினர். 1767 இல் காம்பெல் தலைமையில் நடைபெற்ற போரில் பூலித்தேவரின் கோட்டை தரைமட்டமானது. பெரும் பீரங்கிகளுடன் களம் கண்ட அவர்களின் முன்பு வாளும் வேளும் சுருண்டு விழுந்தன. கோட்டை சுவர்களில் வெள்ளையர்கள் எய்த ஆயுதத்தால் ஓட்டை விழுந்த போது தங்களின் உடல் கொண்டு அந்த ஓட்டையை மூட எத்தனித்தனர் பூலித்தேவன் படையினர்.

ஒருவாரம் நிகழ்ந்த போரின் முடிவில் பூலித்தேவனுக்கு நிகழ்ந்த முடிவாக பலவாறாக வரலாறுகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரரின் கருத்துப்படி தப்பி ஓடிய பூலித்தேவனை ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாரயணின் மாளிகைக்கு வரசெய்து ஆங்கிலேயர்கள் கைது செய்தனர் என்பது ஒரு முடிவு. மற்ற சில நாட்டுப்புற பாடல்களின் வரிகள் படி பூலித்தேவனார் தீவிர சிவபக்தர், அவர் சிவனுடன் இரண்டறகலந்து பூலிசிவஞானம் ஆனால் என்றும் சொல்கின்றனர். மற்றோரு சாரர், அவரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு விட்டனர். என்கின்றனர்.

முடிவு எதுவாகினும் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு விதையிட்டவர் பூலித்தேவன். நிலப்பரப்பின் அடிப்படையில் பெரும் பேரரசாக இல்லாமல் போகலாம், ஆனால் ஆங்கிலேயர்களின் பிரமாண்ட படைகளை எதிர்த்து நின்ற அவரின் தீரமும், வீரமும், உறுதியும் என்னாளும் போற்றப்பட வேண்டியவை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News