தமிழகம் கண்ட வீரபுருஷர்களில் முதன்மையான பூலித்தேவன்
By : Mohan Raj
சுதந்திர போரட்டத்தின் ஆகப்பெரிய கிளர்ச்சி சிப்பாய் கலகம் என்போம்.அதற்கும் முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடங்கிவிட்டது.இந்திய விடுதலை போரில் தமிழ்நிலத்திற்கு என்று பெருமைமிக்க வரலாறுகள் உண்டு.அதில் குறிப்பிடத்தக்க துவக்கத்தில் ஒன்று நெற்கட்டான்செவ்வல் மன்னர் பூலித்தேவரின் சுதந்திரப் போர்.
"வரகுணராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவன்" வழி வந்த பத்தாவது தலைமுறையான சித்திரபுத்திர தேவரின் புதல்வர்தான் ஆங்கிலேயரையும் நவாபையும் எதிர்த்த 4ம் காத்தப்ப பூலித்தேவர்.பாண்டிய மன்னரால் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் முன்னோருக்கு வழங்கப்பட்ட பாண்டிய அக நாடே 'பூழிநாடு'.அதன் பின் நாயக்கர் காலத்தில் பிரித்த 18 மறவர் பாளையங்களில் ஒன்றுதான் பூலித்தேவரின் பாளையம்.
1726 ல் முடிசூடிக் கொண்ட பூலித்தேவர் நவாபுகளுக்கும்,ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்து எதிர்த்து நின்று கிளர்ச்சி செய்தார்.1750 தொடங்கி 1766 வரை ஆங்கிலேயே-நவாப் படைகளுக்கு எதிராக ஒரு போரிலும் தோற்காமல் வென்றவர் பூலித்தேவர்.கடைசியாக வீரம் துரோகத்திடம் வீழும் துன்பவியல் இங்கேயும் நடந்தது.
அதன் பின்பும் சரணடையாமல் மறைந்திருந்து ஆங்கில அரசை எதிர்த்து நின்றார் அதற்காக பிரெஞ்ச்,டச்சு படைகளின் உதவி தானாகவே தர முன் வந்தும் மறுத்தார் பூலித்தேவர்.நெற்கட்டும் செவல் கோட்டை உடைக்கப்பட்டு பீரங்கிக்கு முன் சுதந்திர முழக்கத்திற்கு வீரர்கள் பலியாயினர்.
கடைசியாக ஆங்கிலேயர் பூலித்தேவரை கைது செய்தனர்.ஆரணி கோட்டை அனந்தநாராயணன் உதவியால் அது நிறைவேறியது என்கிறார்கள்.அப்போது அவர் கடைசியாக சங்கரன்கோவில் கோமதி அம்மனை வழிபட்டுக் கொள்வதாக சொல்லி மனமுருகி வழிபட்டவர் அப்படியே ஜோதியுடன் ஐக்கியமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அவர் மறைந்ததாக சொல்லப்படும் அறை இன்றும் சங்கரன் கோவிலில் உள்ளது.பூலி சிவஞானம் அடைந்தார் என்று அவர் மேல் பாடப்பட்ட சிந்து பாடல்கள் சொல்கின்றன.ஆனால் அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி மக்களிடையே தெரிந்தால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என்பதை அறிந்து அதை ரகஸ்யமாகவே ஆங்கிலேய படைகள் செய்து முடித்தன என்பதே ஏற்கத்தக்கதாக உள்ளது..
தமிழகம் கண்ட வீரபுருஷர்களில் ஒருவர் பூலித்தேவர்.மண்டியிடாத மாவீரனின் சுதந்திர வேகம் எப்படிப்பட்டது என்பதை அவர் சந்தித்த ஒவ்வொரு போர்களும் சொன்னது.
இந்த பண்பாட்டை காக்கவும்,சுதந்திரத்தை பேணவும் பல்லாயிரம் வீரமரணத்தை அநாயசமாக இந்த பாரத மண் கொடுத்துள்ளது.தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா? என்பதாக அது கண்ணீரினாலும்,அவிந்து அடங்காத இரத்த சூட்டினாலும் பெற்றுள்ளோம்.இதை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.