Kathir News
Begin typing your search above and press return to search.

யார் இந்த கிருபானந்த வாரியார்? - அறிவோம் வாரியாரை!

யார் இந்த கிருபானந்த வாரியார்? - அறிவோம் வாரியாரை!

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2022 8:06 AM GMT

1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் உள்ள காங்கேயநல்லூரில்,வீரசைவ செங்குந்த மரபில் சிவத்திரு மல்லையதாச பாகவதர் மற்றும் ஸ்ரீமதி கனகவல்லி அம்மையாருக்கும் நன்மகனாய் தோன்றினார் திருமுருக கிருபானந்த வாரியார்.

பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார்.

தன்னுடைய ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் உள்ள வீர சைவ பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டார்.அதே போல பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் ஏறத்தாழ 4 ஆண்டுகள் வீணை கற்றுக் கொண்டார்.

பிள்ளை பிராயத்திலேயே இவருடைய தந்தையே குருவாக நின்று தமிழ் இலக்கண,இலக்கியங்களையும், ஆன்மீக புராண இதிகாசங்களையும் கற்றுக் கொடுத்தார் வாரியார் சுவாமிகளுக்கு.தேவாரம், திருப்புகழ், திருவருட்பா,கந்தரனூபதி, கந்தபுராணம்,பெரியபுராணம்,ராமாயணம்,மகாபாரதம் என அனைத்தையும் கற்றார்.

வேதாகம மரபை,வைதிக சைவ மேன்மையை கிராமங்கள்தோறும் பிரச்சாரம் செய்தவர் வாரியார் சுவாமிகள்.கோவில் திருப்பணி,அமைப்பாய் திரளுதல்,உபந்யாசம் என்று மக்களை திரட்டினார்.ஒரு சினிமா நடிகருக்கு கூடும் கூட்டத்தை விட வாரியார் சுவாமிகளுக்கு உலகெங்கும் கூடிய தமிழ்மக்களின் கூட்டம் அளப்பறியது.

மலேசியா - சிங்கப்பூர் - இலங்கை என எங்கும் தமிழ் இந்துக்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதை வரலாறு தெளிவாக பதிவு செய்துள்ளது.எங்கே ஆன்மீக சிந்தனை அவமதிக்கப்பட்டாலும்,நமது மதம் இழிவு செய்யப்பட்டாலும் அங்கே வாரியார் சுவாமிகளின் கருத்துகள் கேடயமாக நின்றன..

சென்னை தமிழிசை மன்றத்தால் 1967 ல் இசை பேரறிஞர் விருது வாரியார் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது.திருப்பணி சக்கரவர்த்தி, சொற்பொழிவு வள்ளல், சரஸ்வதி கடாக்ஷாம்ருதம், பிரவசன சாம்ராட், திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் பல்வேறு பெயரால் அழைக்கப்பட்டார்.

மாயூரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்கிற MKT அவர்கள் தமிழ்த்திரையுலகின் மன்னனாக வீற்றிருந்தார்.அவர் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவின் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர்.பொதுமேடையில் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பெற்ற கதையே 'சிவகவி' என மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்..

துணைவன்,மிருதங்க சக்கரவர்த்தி, நவக்கிரக நாயகி, கந்தர் அலங்காரம், திருவருள்,போன்ற பல படங்களில் வாரியார் சுவாமிகள் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.அவருடைய சொற்பொழிவு இடம்பெறும்.பின்னாள் தமிழ் திரையுலகத்தின் சக்கரவர்த்திகளாக பயணப்பட்ட எம்ஜிஆர் - சிவாஜி - கண்ணதாசன் என அனைவரும் வாரியார் சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை செலுத்தினார்கள்.

வயலூர் முருகன் மீது அதீத ஈடுபாடு கொண்ட வாரியார் சுவாமிகள் அந்தக்கோவிலின் திருப்பணிக்கு எம்ஜிஆர் - சிவாஜியிடமிருந்து நிதியுதவி பெற்றார்.இன்றும் எம்ஜிஆரை தமிழக மக்கள் அன்போடு போற்றும்,'பொன்மனச்செம்மல்' என்ற பட்டம் வாரியார் சுவாமிகள் கொடுத்தது.சிவாஜியை 'நடிப்பு வாரிதி' என்று அழைத்ததும் அவரே..

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளென ஒரு 10 பேரை பட்டியலிட்டால் அதில் வாரியார் சுவாமிகள் உச்சியில் வைக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்தே இல்லை.

குதர்க்கமான கேள்விகளை,பரிகசிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் சுருங்கிவிடும் நன்னெஞ்சங்களுக்கு உணர்வளித்து,ராவாணாதிகளை எதிர்கொள்ளும் ராமபானம் உள்ளதென்ற நம்பிக்கை விதைத்தவர் வாரியார் சுவாமிகள்.

தமிழகத்தில் பரவிய நாத்திகவாத பிரச்சார அரசியலை எதிர்த்து வாரியார் சுவாமிகள் நடத்திய அறப்போர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.ஈவேராயிஸத்திற்கு உண்மையான மாற்று வாரியாரிஸம் என்று சொன்னால் கூட பிழையில்லை..

உலகெல்லாம் பல்கிப் பெருகி வாழும் தமிழ் இந்துக்கள் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டிய,நினைத்துப் பார்க்க வேண்டிய பெருமகன் வாரியார் சுவாமிகள்.தமிழ் நிலத்தின் ஆன்மீக அடையாளத்தை,நமது பண்பாட்டின் மரபார்ந்த ஞான விழுமியங்களை எளிய மொழியால்,இசையால் கொண்டு போய் சேர்த்தவர்.

1993-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் நாள் லண்டன் பயணமானார்.தமிழ் பண்பாட்டின் ஆன்மீகம் ஜோதியென மிளிர்வதற்குப் பாடுபட்ட வாரியார் சுவாமிகள்,1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தமது விமானப் பயணத்திலேயே அவர் அனுதினமும் போற்றிய கந்தபெருமானின் திருவடிகளிலேயே கலந்தார்.பூதேவரான அவரது ஆன்மா வானிலேயே முக்தி பெற்றதை மறக்க முடியாது..

வாரியார் சுவாமிகள் புகழ் ஓங்குக..வேதஞானம் பெருகுக!

-திரு. சுந்தர் ராஜ சோழன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News