'காகித ஓடம் கடல் அலை மீது..' - நீரோ மன்னன் போல் யூ ட்யூபில் ஜாலி பேட்டியில் மூழ்கிய முதல்வர் ஸ்டாலின்
By : Mohan Raj
'காகித ஓடம் கடல் அலை மீது' என முதல்வர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த இன்டர்வியூ தற்பொழுது அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன. மேலும் மக்கள் விலைவாசி உயர்வு, போராட்டம், விவசாயிகள் போராட்டம். கனிமவள கொள்ளை இது போன்ற பிரச்சனைகள் இருந்து வருகின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுவதும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிக்கும் மேல் இந்த பிப்ரவரி மாதத்தில் மூன்று முக்கிய குற்ற சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் முக்கிய முதல் சம்பவமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது இப்படி வெளிமாநில கும்பல் திட்டமிட்டு தமிழகத்தின் கிராம பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்தே காவல்துறை குற்றவாளிகளை நெருங்க முடிந்தது.
பிப்ரவரி மாதத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, பிப்ரவரி 12ம் தேதி சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 2 மாடிகள் கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் இவர் அதே முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்டு பேலஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், நகை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து இதுநாள் வரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை சம்பவம் நடந்து 15 நாட்களாகிறது.
மேலும் பிப்ரவரி மாதத்தின் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக கோவை நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் நுழைவாயில் அருகே திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட நடுரோட்டில் இருவரையும் ஓட ஓட சரமாரியாக வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் மூலம் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
மற்றொரு சம்பவமாக குரூப் 2 தேர்வில் நடைபெற்ற கோளாறின் காரணமாக தற்போது அதனை எழுதிய இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். குரூப் 2 தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் அந்த தேர்விற்க்காக கிட்டத்தட்ட 9 மாத காலம் தங்களை வருத்தி தேர்வுக்கு தயார் செய்த இளைஞர்களை நிலைகுலைய செய்துள்ளது, அடுத்தபடியாக மறுதேர்வு, பிழை மதிப்பெண்கள் போன்ற குரூப் 2 தேர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் திமுக அரசு இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை! தேர்வு கூட ஒழுங்காக நடத்த திராணியற்ற அரசாக திமுக அரசு இருந்து வருகிறது என்று இளைஞர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இப்படி சட்டம் ஒழுங்கு, குரூப் 2 தேர்வு குறித்த தெளிவு போன்ற எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் தனியார் யூ ட்யூப் சேனலுக்கு ஜாலியாக பேட்டியளித்த விவகாரம் அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இவ்வளவு போராட்டங்கள், மக்களின் அதிருப்திகள், அரசின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது என மக்கள் நினைக்கும் வேளையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பர்சனல் லைஃபை குறித்து பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு முதல்வருக்கு நேரம் இருக்கிறதா? இதுதான் முதல்வர் செய்ய வேண்டிய வேலையா?இதற்குத்தான் முதல்வர் ஸ்டாலின் பதவிக்கு வந்தாரா? என இப்பொழுதே விமர்சனங்கள் வரிசை கட்டி எழுந்துள்ளது.
PIC-Behindwoods