மத்திய அரசின் தனியார் மயத்திற்கு குதித்த திமுக, சென்னை மாநகர போக்குவரத்து தனியார் மயத்திற்கு அமைதியோ அமைதி!
By : Mohan Raj
மத்திய அரசு அனைத்தையும் தனியார் மயமாக்குகிறது என பேசி வந்த திமுக தற்பொழுது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளன.
பராமரிப்பு, லாபம், மக்கள் சேவை, செலவின கட்டுப்பாடு போன்றவற்றை கணக்கில் வைத்துக் கொண்டுதான் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனங்களை கையில் வைத்துக் கொள்வதும், தனியார் மையமாக்குவது குறித்து முடிவெடுக்கிறது. குறிப்பாக ஒரு பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் அதை தனியார் மையத்திற்கு விடும்பொழுது அதன் மூலம் அரசுக்கு லாபம் கிடைக்கும், பராமரிப்பு செலவு குறையும், அந்த துறை மக்களுக்கு தேவையான சேவையை செய்யும், தனியார் அந்த துறையை கையில் எடுக்கும் சமயம் தனியார் நிறுவனம் அதன் வருமானத்திற்காக சேவையை மேம்படுத்தும் மேலும் அதன் செலவினங்களை குறைத்து எவ்வாறு சிறப்பாக இயக்கலாம் என திட்டமிடும்.
இந்த நிலையில் தான் ஒரு அரசு தனியார் மயம் என்ற பேச்சுக்கே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உட்படுத்துகிறது. இதனை புரிந்து கொள்ளாமல் கடந்த காலங்களில் பாஜக அரசு செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், அந்த துறையை சிறப்பாக இயங்குவதற்காகவும் தனியார் மையத்தை அறிவிக்கும் போதெல்லாம் 'அய்யோ தனியார் மயம், தனியார் மையம்' என எதிர்ப்பு தெரிவித்து வந்து திமுக தற்பொழுது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியார் மையத்துக்கு விடுவது குறித்து விமர்சனம் கிளம்பியுள்ளது.
சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 625 வழித்தடங்களில் 29.5 லட்சம் பயணிகள் தினசரி பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி ஒப்பந்த அடிப்படையில் 1,000 பேருந்துகளை அறிமுகம் செய்ய தனியார் பேருந்து உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆலோசித்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவாக நடப்பாண்டு இறுதிக்குள் புதிதாக 500 தனியார் பேருந்துகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் GCC எனப்படும் மொத்த செலவின ஒப்பந்த மாடலின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இவர்கள் தங்களின் அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரை பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் பணம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வரலாற்றில் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுப் போக்குவரத்தை தனியார்மயமாக்க கூடாது என சிஐடியு' கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோல இன்று போக்குவரத்து பணிமனைகள் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து. அதன்படி இன்று அதிகாலை 6 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தின் வெளியே சிஐடியு சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்று தொடங்கிய இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும் என தொழிற்சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் சிஐடியு மட்டுமல்லாது தொமுச மற்றும் அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தினரும் நாளை போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இப்படி சென்னை பேருந்து தனியார்மயம் ஆவதற்கு கிளம்பும் எதிர்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதுவரைக்கும் எந்த விளக்கம் அளிக்கவில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் 'மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயம்', எல்.ஐ.சி தனியார் மயம்' போன்றவை இந்த அரசுக்கு தொலை நோக்கு பார்வையும் இல்லை! தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வேறு வழியும் தெரியவில்லை என 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். ஆனால் இப்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகர போக்குவரத்தை தனியார் மயம் ஆவதற்கு அறிவித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.