'இனி முதல்வரை நம்பி வேலைக்காகாது' - திமுக கூட்டணியை தகர்க்க திட்டத்தை துவங்கிய கம்யூனிஸ்ட்கள்
By : Mohan Raj
'இதெல்லாம் ஒரு ஆட்சியா, ஆளுங்கட்சி மிதப்பில் இப்படி செய்கிறீர்களா' என கூட்டணி கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிகளே குறை கூறும் அளவிற்கு நடந்து வருகிறது திமுக ஆட்சி.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளைத் துவங்கி வைத்ததோடு, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்த திட்டங்களைத் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார், இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் பெயர் இல்லை என்பதால் திருச்சி சிவாவின் ஆட்கள் கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக சிவாவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாத கோபத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் வாகனம் அவ்வழியாகச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டினர். இந்த கோபத்தில் இருந்த கே.என்.நேரு ஆதரவாளர்கள் திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சிவாவின் வீட்டிற்கு வந்த சிலர் அங்கிருந்த காரைத் தாக்கினர். அதற்குப் பிறகு, சிவாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை நடத்தும் சமயம் அங்கு வந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கினர். காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எலும்பு முறியும் அளவிற்கு அடித்துள்ளனர்.
இப்படி திமுக அமைச்சர், எம்.பியின் ஆட்கள் காவல் துறையை மதிக்காமல், மக்கள் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் அராஜகம் செய்த விவகாரம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுகவில் அதுவும் எம்பியாக இருக்கும் ஒருவருக்கே இப்படி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் நடந்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டது, ஒரு எம்பி அதுவும் ஆளுங்கட்சி எம்.பி'க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு என தமிழகம் முழுவதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் இந்த கலவரத்தில் ஒரு பெண் காவலரின் எலும்பு முறியும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, இந்த அராஜக சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளதாவது, 'திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள். இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது. மேலும் கூடுதலாக... இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு செயல்பட வேண்டும்' என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுளார்.
இப்படி கூட்டணி கட்சிகளே ஆளுங்கட்சி மிதப்பில் இருக்க வேண்டாம் என எச்சரிக்கும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என எதிர்கட்சிகள் இப்பொழுதே குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்களும் முதல்வர் ஸ்டாலின் கையில் எதுவுமே இல்லை, அவர் வெறும் பொம்மை முதல்வர் போல் செயல்படுகிறார் என குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இத்தனை நாள் வரை திமுகவுடன் கூட்டணியில் இருந்துவரும் கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுது திமுக அரசை விமர்சிக்க துவங்கியிருப்பது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.