பல திட்டங்களுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை - பின்னணி என்ன?
By : Mohan Raj
பரபரப்பான அரசியல் சூழலில் மிகப்பெரிய திட்டங்களுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லும் விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக பாஜக தற்பொழுதைய சூழலில் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது, குறிப்பாக தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக நடக்கும் சலசலப்புகள், சர்ச்சைகள் தமிழக பாஜகவை பற்றி பெரும் விமர்சனத்தை எழுப்பி வருகின்றன. குறிப்பாக பாஜகவில் உள்ள யாரேனும் கூறும் கருத்துக்கள் தமிழக அரசியலில் மையமாக சுழன்று பேசுபொருளாக மாறி வருகிறது. மேலும் தமிழக பாஜகவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைவரும் சிறு விஷயம் நடந்தாலே மிகப்பெரிய அளவில் பூதாகரமாக பெரிதாக்கும் வேலையையும் செய்து வருகின்றனர்.
அது மட்டும் அல்லாமல் சில நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவில் இருந்து வெளியேறியதும், வெளியேறியவர்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது விமர்சனங்களை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி அமைய வேண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜக வளராது, அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் தான் அடுத்தபடியாக நாம் கட்சி வளர்க்க முடியும் என பேசியதாகவும் வெளியில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை தொடர்ந்து அடுத்த நாள் பாஜக மாநில தலைவர் விளக்கம் அளிக்கும் விதமாக அண்ணாமலை கூறும் பொழுது, 'என்னுடைய கருத்து! என்னுடைய நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன். மேலும் நான் மாநில தலைவர், எனக்கு கொடுத்த வேலை கட்சியை வளர்ப்பது அதற்காகத்தான் நாம் முயன்று கொண்டிருக்கிறேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் முடிவெடுப்பார்கள் ஆனால் என்னுடைய முடிவு இதுதான்' எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அரவக்குறிச்சி தேர்தலில் நான் நின்று என்னுடைய சேமிப்பையெல்லாம் செலவழித்துவிட்டேன், இப்பொழுது கடனாளியாக நிற்கிறேன். அரசியல் என்பது பணத்தை முன்னிலைப்படுத்தி செய்யும் விஷயமாக மாறிவிட்டது. தற்பொழுது மக்கள் மாற்றத்தை நோக்கி வர துவங்கி விட்டனர்' என பேசினார். அண்ணாமலை இப்படி கூறியது எதிர்க்கட்சிகளுக்கு இன்னும் சுலபமாக போய்விட்டது, குறிப்பாக தமிழக பாஜகவை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்ட வேண்டும், பாஜக வளரவில்லை என அடிக்கடி பேச வேண்டும் என நினைக்கும் சிலருக்கு அண்ணாமலை இப்படி கூறியவுடன் பார்த்தீர்களா அண்ணாமலை பல்டி அடித்துவிட்டார் என பேச வைத்தது.
இப்படி பாஜகவை சுற்றி தமிழக அரசியல் சுழன்று வரும் நிலையில் அண்ணாமலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க செல்லவிருக்கிறார். வரும் 26 ஆம் தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார் டெல்லி செல்லும் அவர் ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்க்கட்சிகள் எந்த விதமான அஸ்திரத்தை பயன்படுத்துகின்றன, எது நமக்கு தேவை, எந்த திட்டம் நமக்கு தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும், எந்த திட்டம் நமக்கு கட்சியை வளர்ப்பதற்கு உதவும், எந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் தனித்து பாஜக வளரும், எந்த திட்டத்தை நாம் செயல்படுத்தக்கூடாது, கட்சியில் உள்ள நிலைப்பாடு என்ன, கட்சி நிர்வாகிகளின் மனநிலை என்ன, மேலும் தமிழக அரசியல் கள நிலவரம் என்ன, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் பாஜக என்ன செய்ய வேண்டும், பாஜகவுடன் வரவேற்கும் கூட்டணி கட்சிகள் என்ன என்ன, மேலும் பாஜகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் என்ன, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் திட்டம் என்ன இப்படி தமிழக அரசியலின் அனைத்து விதமான டேட்டாக்களை அண்ணாமலை அந்த சமயம் மூவரிடமும் விவரித்து உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியில் செய்ய வேண்டிய மாறுதல்கள், சில ரகசிய நடவடிக்கை பற்றிய தகவல்கள் அனைத்தையும் அண்ணாமலை பேச தயாராகிவிட்டார்.
மேலும் அண்ணாமலையின் சில திட்டங்களுக்கு டெல்லி பாஜக தலைமை அனுமதி கொடுக்கும் பட்சத்தில் தமிழக பாஜக மட்டும் இல்லாமல் தமிழக அரசியல் களத்தில் வரும் வாரங்களில் அடுத்த அதிரடிகள் கண்டிப்பாக நடைபெறும் என இப்பொழுது அடித்து கூறுகின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள்.