வேலை செய்ய துவங்கிய அண்ணாமலையின் மாஸ்டர் ப்ளான் - டிசம்பருக்குள் மாறும் தமிழக அரசியல் களம்!
By : Mohan Raj
அண்ணாமலை அசத்தல் திட்டம் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து வருகிறது.
தற்பொழுது உள்ள தமிழக அரசியல் களம் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரு பெரும் கட்சி கூட்டணிகளாக இருந்து வந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி என்ற மூன்றாவது கூட்டணியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக கூட்டணியில் எந்த விதமான கசப்பும் இல்லை என்றாலும் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து ஆகவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான விதையையும் போட்டார் அண்ணாமலை. 'எனக்கு கூட்டணி யுடன் செல்வதில் விருப்பமில்லை, நான் கூட்டணியில் இருந்து விலகி தனித்து செல்ல விரும்புகிறேன். அதுதான் பாஜகவிற்கு நல்லது எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அதுவாக தான் இருக்குமே தவிர கூட்டணியில் இருந்து கொண்டு நாம் அரசியல் செய்தால் இப்படியே இருக்க வேண்டியது தான்' என்பது ரீதியிலான அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சைகளை மட்டுமல்லாது, பல இடங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒரு மாபெரும் திட்டத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று வந்தார்.
டெல்லி சென்று வந்த அண்ணாமலை தமிழகத்தில் தான் செய்யப் போகும் அடுத்த கட்ட வேலைகளை பற்றி விவரித்து விட்டு அதற்கான ஒப்புதலையும் டெல்லி தலைமையிடம் வாங்கி வந்துள்ளார். அந்த வகையில் அண்ணாமலையின் அடுத்த திட்டமானது தமிழகத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலை எதிர்கொள்வதாகும். இந்த கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் கண்டிப்பாக இடம் பெறும். மேலும் டிடிவி தினகரனின் அமமுக, சசிகலா ஆகியோரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் அவர்களின் ஆதரவு அதிமுக கூட்டணியில் இருக்கும் எடப்பாடிக்கு இருப்பதைவிட அண்ணாமலைக்கு தான் அதிகமாக இருந்து வருகிறது. எனவே அதிமுக தரப்பிலிருந்து ஓபிஎஸ் பாஜக தலைமையிலான கூட்டணியை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார். இப்படி அமையும் பட்சத்தில் வெளியிருந்து ஒரு சில கட்சிகளும், கட்சி பிரமுகர்களும் பாஜகவில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் வெளி கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கிய ஒரு சில கட்சிகள் வரும் டிசம்பர் 2023 ஆம் மாதத்திற்குள் கண்டிப்பாக பாஜக கூட்டணியில் வந்து இணையும் அந்த கட்சிகளுக்கு ஒரு எம்பி தொகுதி, இரண்டு எம்பி தொகுதி போன்றவை வழங்கப்படும். அப்படி அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கூட வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.
எனவே எந்த கட்சி வந்தாலும் வரவேற்கிறோம் என அண்ணாமலை தரப்பு அரசியல் கணக்குகளை போட்டு வருகிறது. இது அந்த கட்சிகளுக்கும் தெரியும்! அந்த கட்சிகள் அதிமுக கூட்டணியிலும் இருக்கின்றன, திமுக கூட்டணிகளும் இருக்கின்றன. இப்படி திமுக அதிமுக அல்லாத மூன்றாவது ஒரு கட்சி தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைக்கிறது என்றால் அது அண்ணாமலை வழிநடத்தும் பாஜக தலைமையிலான மூன்றாவது அணி தான் என இப்பொழுதே அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 25 தொகுதிகளை எதிர்பார்த்து களமிறங்கும் பாஜக தலைமையிலான கூட்டணி எப்படியும் 15 தொகுதிகளாவது வென்றுவிடும் என்ற நினைப்பில் களம் இறங்குகிறது. அண்ணாமலை ஆணித்தரமாக நம்புகிறார் இந்த வரும் தேர்தல் இளைஞர்களுக்கான தேர்தல், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும்! அப்படி மோடி வரும் பட்சத்தில் தமிழகத்திலிருந்து ஐந்து மத்திய அமைச்சர்கள் பதவி வேண்டும்! அப்படி இருந்தால் மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அமைச்சர்களே தமிழகத்திற்கு இல்லாத நிலையில் பிரதமர் மோடி நிறைய சாலை வசதிகள், துறைமுக வசதிகள் இவற்றையெல்லாம் செய்து கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் இருக்கும் பட்சத்தில் பிரதமர் மோடி செய்யும் தமிழகத்திற்கான உதவிகள் இன்னும் அதிகமாக இருக்கும்! தமிழருக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு இங்கே நமக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவை அவர்கள் பாஜக அமைச்சரவையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை மக்களின் நிலைப்பாடு என்பதை அண்ணாமலை சரியாக கணக்கு போட்டு வைத்துள்ளார்.
அதன் காரணமாகத்தான் பாஜக தலைமையிலான கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என் என்ற கணக்குடன் காய்களை நகர்த்தி வருகிறார். இது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும் இருந்தாலும் எதிர்கட்சிகள் அண்ணாமலை அவசரத்தனமாக முடிவெடுக்கிறார், அண்ணாமலை மூத்த தலைவர்களை மதிப்பதில்லை என்பது போன்ற கருத்துக்களை கூறி வருவதற்கு காரணம் பாஜக தலைமையிலான கூட்டணி 2024 ஆம் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் பாஜக காலூன்றி விட்டது என அர்த்தம் அல்ல, பாஜக வேர் விட்டு விட்டது என்று அர்த்தம் என எதிர்கட்சிகள் நன்கு உணர்ந்துவிட்டன. அதன் காரணமாகத்தான் பாஜக ஏதாவது ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் அரசியல் நிகழ்வுகளை ஏற்படுத்திவருகின்றன என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ அண்ணாமலை முடிவெடுத்து விட்டார் 2024 ஆம் ஆண்டு அண்ணாமலை தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போகும் ஆண்டு என அண்ணாமலை ஆதரவாளர்கள் இப்பொழுதே முழு வீச்சியில் களமிறங்கி தங்கள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டனர்.