நோட்டா'வை விட கீழே போய்டீங்களேப்பா? - காம்ரேடு பரிதாபங்கள்!
By : G Pradeep
கம்யூனிஸ்ட்கள் vs நோட்டா
மே 13, 2023 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டசபை தேர்தல்களுக்கான முடிவுகளை அறிவித்தது.
இம்முடிவுகள் அம்மாநிலத்தின் அரசியல் நிலைமையை குறிப்பிடத் தகுந்த வகையில் மாற்றி அமைத்தது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் அக்கட்சியின் உட்கட்சி சவால்களையும் அதிகாரப் போட்டிகளையும் வெளிப்படுத்தியது. அம்மாநிலத்தின் முதல்வர் பதவிக்கானப் போர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி. கே சிவக்குமாருக்கும், முன்னாள் முதல்வர் சித்தார்த்தமையாவிற்கும் இடையே ஒரு அதிகாரப் போராட்டத்தை உருவாக்கியது. அது இன்னும் தீர்க்கப்படவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பொழுது, காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை சட்டசபையில் பெற்று, முன்னணி கட்சியாக இவ்வெற்றியை கொண்டாடி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி, 66 இடங்களை வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், மதசார்பற்ற ஜனதா தளம் (JD - S) 19 இடங்களை பெற்று, போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையை கடந்து, அவர்கள் பெற்றுள்ள வாக்கு சதவிகிதத்தை நாம் ஆராயும் பொழுது, ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள ஆதரவை குறித்து சில முடிவுகளை நாம் எட்ட முடிகிறது.
காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட 42.88 சதவீதம் ஓட்டுப் பங்களிப்பை பெற்று மக்களிடையே பிரபலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி மொத்த ஓட்டுகளில் 36 சதவிகிதத்தை பெற்று தன்னுடைய குறிப்பிடத் தகுந்த
வாக்காளர் அடித்தளத்தை நிரூபித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 13.29 ஓட்டு சதவிகிதத்தை பெற்று சில பகுதிகளில் தங்களுடைய ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
ஆனால் இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI- M) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) ஒன்று சேர்ந்து மொத்தமாகவே 1% சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையேப் பெற்றுள்ளன. இது அவர்களுக்கு கிடைத்து வந்த ஆதரவில் மிகப்பெரிய சரிவை குறிக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் கடைசியாக கணிக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.6% ஓட்டு விகிதத்தைப் (அதாவது 24,000 ஓட்டுகள்) பெற்றுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 0.02% ஓட்டு வீதத்தை (அதாவது 8000 ஓட்டுகளை) மட்டுமே பெற்றுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள மொத்த ஓட்டுகளை கூட்டினாலும், நோட்டா (NOTA) பெற்றுள்ள ஓட்டுகளில் எட்டில் ஒரு பங்கு கூட இல்லை. இந்தத் தேர்தலில் நோட்டா 2.69 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. இது மொத்த ஓட்டு சதவிகிதத்தில் 0.69% சதவிகிதமாகும்,
இம்முடிவுகளைக் குறித்து சற்றும் ஆராயாமல், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பா.ஜ.கவை தோற்கடித்ததற்காக காங்கிரஸ் கட்சியை பாராட்டுவதில் மும்மரமாக உள்ளனர். பா.ஜ.க, 36% ஓட்டுகளை பெற்று, (அதாவது கிட்டத்தட்ட 1.4 கோடி ஓட்டுகள்) இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், 2018 சட்ட சபைத் தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது, பா,ஜ.க இம்முறை 7 லட்சம் ஓட்டுகளை அதிகம் பெற்றுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, குறிப்பிடத்தகுந்த வாக்குகளை இழந்து, ஓட்டு விகிதத்தில் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமல் ஆகி இருக்கிறார்கள். 2018ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே 4,871 மற்றும் 81,191 ஓட்டுகளை பெற்றனர். அது மொத்த ஓட்டுகளில் 0.01% மற்றும் 0.22% ஆகும். இந்தத் தரவுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய ஆதரவையும், வாக்குகளையும் பெருமளவு இழந்து வருவதை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டுகின்றன.