கேரளாவிற்கு கொள்ளை போகும் தமிழகத்தின் கனிம வளங்கள்..
By : Bharathi Latha
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகமான கனிம வளங்கள் கொள்ளை போவதாக லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், குண்டு கற்கள், சிறிய அளவிலான பாறைகள் நாள்தோறும் வெட்டி எடுக்கப் படுகின்றன. இந்த கனிம வளங்களும், இங்கு உற்பத்தி செய்யப்படும் செயற்கை மணல் என்று அழைக்கப்படும் எம்-சான்ட் பெரும்பாலும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மலைகளால் சூழப்பட்ட கேரளத்தில் கற்கள், செயற்கை மணலுக்கான மூலப்பொருள்கள் அதிகளவில் இருந்தும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மலைகளை உடைத்து எடுக்கவோ, கனிம வளங்களை எடுக்கவோ கேரள அரசு அனுமதிப்பதில்லை. ஏனெனில் கேரளா அரசு இது தொடர்பாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. யாராவது கேரளாவின் கனிம வளங்களை கொள்ளை அடிக்க நினைத்தால் உடனடியான கடுமையான சட்டம் அங்கு அமல்படுத்தப்படும்.
ஆனால், தமிழகத்திலிருந்து குறிப்பாக, கல்குவாரிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், பாறைகள், எம்-சான்ட் உள்ளிட்டவை பெரும்பாலும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படுவதாலும், அதிக விலைக்கு வாங்கிச் செல்வதாலும் குவாரி உரிமையாளர்கள் கேரளத்துக்கு விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும், மூன்று மடங்கு வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது லாரி ஓட்டுனர்கள் குறிப்பாக தமிழகத்திற்குள் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் தேவைகளுக்கு இந்த கனிம வளங்கள் பூர்த்தி செய்யாமல் கேரளாவிற்கு அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள்.
கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக அதிக திறன்கொண்ட வெடிபொருள்கள் மூலம் அதிக ஆழத்தில் பாறைகள் உடைக்கப்படுவதால் பூமியின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் டிம்பர் லாரி உரிமையாளர்கள் தங்களுடைய குறைகளை பதிவு செய்து இருக்கிறார்கள். தமிழகத்திற்குள் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளில், அனுமதி சீட்டு இல்லை என, அதிகாரிகள் பிடிக்கின்றனர். ஆனால், கல்குவாரிகளில், தமிழகத்திற்குள் இயக்கும் லாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில்லை.
ஆனால் கேரளாவில் இருந்து கனிம வளம் எடுத்துச் செல்ல வரும் வாகனங்க ளுக்கு, அனுமதி சீட்டு தாராளமாக வழங்குகின்றனர். கோவையில் இருந்து தினமும் 800க்கும் மேற்பட்ட லாரிகள் கேரளாவை நோக்கி பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக அனைத்து ராதிககளும் இங்கிருக்கும் கனிம வளங்களை எடுத்துக்கொண்டு கேரள செல்கிறது.
ஆனால் இங்கு இருக்கும் உள்ளூர் மக்களின் தேவைகளை பற்றி அரசாங்க அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. கரூர், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிகளவு கனிமவளங்கள் கேரளாவுக்கு செல்கிறது. இதை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
தமிழகத்திற்கு உள்ளே கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகள் என்றாலும் அல்லது கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் லாரிகள் என்றாலும் அனைவருமே அனுமதி சீட்டுடன் தான் பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை.தமிழகம், கேரளா என, அனைத்து லாரிகளுக்கும் சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளம் செல்கிறதா? என கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள்.
இப்படி தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கும் தமிழக அரசு கனிம வள சுரண்டலுக்கு மறைமுகமாக உதவுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது.