Kathir News
Begin typing your search above and press return to search.

கான்சாகிப்பை தோற்கடித்து ஓடவிட்ட ஒண்டிவீரனை பற்றி தெரியுமா?

கான்சாகிப்பை தோற்கடித்து ஓடவிட்ட ஒண்டிவீரனை பற்றி தெரியுமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Aug 2023 6:41 AM GMT

இந்திய விடுதலையின் முதல் விடுதலைப் போராக அறியப்படும் 1857 இல் நடந்த ‘சிப்பாய் கலக’த்திற்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தலைவன் ஒண்டிவீரன் பகடை எனும் போராளியின் வீரமரணத்தின் 251வது ஆண்டை நினைவுகூர்கிறோம்.

ஒண்டிவீரனின் 250ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரை போற்றும் விதமாக, மோடிஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய தபால் துறை ஆகஸ்ட் 20, 2022 அன்று தபால் தலை ஒன்றை ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் தலைமையில் வெளியிட புதுவை ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

திருநெல்வேலிக்கு அருகில், சங்கரன்கோவிலில் இருந்து வடமேற்கில் பத்து கிலோமீட்டர் தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள, நல்ல விளைச்சல் நிலங்களை மிகுதியாகக் கொண்ட செழிப்பான ஜமீன் நெற்கட்டும் செவ்வயல்.

அந்த ஜமீன் பரம்பரையில் பொ.ஆ. (கி.பி.) 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர் ஒண்டிவீரன். இவர் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் வீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டுவந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது.

ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்திவந்தார்.

கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெதுவாக அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டம் அது. ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர்.

1755 ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். நெல்லை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்படலாயிற்று.

முதல் விடுதலைப் போர்

ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22ஆம் நாள் தோற்கடித்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும்.

மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நெல்லை நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார்.

மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் (கெட்டி பொம்மு) கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப்

பணிந்துபோனார்.

தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார் ஒண்டிவீரன்.

இதுவே ஆங்கிலேயருக்கு எதிரான நடந்த முதல் சுதந்திரப் போராகும்,

மீண்டும் 1756 மற்றும் 1757 ஆண்டுகளிலும் போர் தொடுத்த ஆங்கிலேயரை தோற்கடித்தவர் ஒண்டிவீரன். எட்டயபுரம் உள்ளிட்ட சில தெலுங்கு பாளையங்கள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாயின. அவற்றின் மீது போர்தொடுத்து, ஆங்கிலேயருக்கு எதிராக மற்ற பாளையங்களை அணிசேர்த்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும். நாயக்கர் காலத்தில் 16 தமிழ் பாளையங்களும், 56 தெலுங்கு பாளையங்களும் இருந்தன. ஆழ்வார்குறிச்சி அழகப்பன் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.

அழகப்பனுக்கு ஆதரவாக மருதநாயகம் என்ற கான்சாகிப் யூசுப்கான் களமிறங்கினான் . 1759 ஜுலை 2 ஆம் நாள் அவர் ஊத்துமலை, சுரண்டை பாளையங்களைக் கைப்பற்றினான். நவம்பர் 6-ஆம் நாள் ஒண்டிவீரன் அவற்றை மீட்டெடுத்தார். கோபம் கொண்ட மருதநாயகம், தொண்டமான் படையுடன் இணைந்து வாசுதேவ நல்லூரைத் தாக்கினான்.

இருபது நாள் நடந்த போரில் பூலித்தேவனும் ஒண்டிவீரனும் இரு படை களாகப் பிரிந்து போரிட்டு வென்றனர். மீண்டும் கான்சாகிப் 1760 டிசம்பர் 20 அன்று நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கினான். அப்போரில் ஒண்டிவீரனின் துணை தளபதி வெண்ணிக்காலாடி வீரமரணம் அடைந்தார். இவர் தேவேந்திரர் குலத்தைச் சார்ந்தவர். ஆனாலும் இப்போரிலும் கான்சாகிப் தோல்வியையே தழுவினான்.

இறுதிப்போர்கள்

1767 மே 13 அன்று ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் நெற்கட்டான் செவ்வயலின் இராணுவ தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன் தலைமையில் மிகக் கடுமையாக போரிட்டனர்.

திகைத்துப்போன காம்பெல் இது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு 1767 மே 28 அன்று எழுதிய கடிதம் இன்றும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. இருப்பினும், அவர்களின் பலம் வாய்ந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் முன் நம்மவர்களின் வாட்களும், வேல்களும் தோற்றுப்போயின.

அப்போது, சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன் மீண்டும் திரும்பவில்லை. எனவே, ஒண்டிவீரன் மீண்டும் பாளையப் பொறுப்பை ஏற்று, பூலித்தேவனின் மூன்று பிள்ளைகளையும் நான்கு ஆண்டுகள் காத்துவந்தார். மீண்டும் களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இறுதியாக, 1771 ஆகஸ்ட் 20 ந்தேதி நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் வீரமரணமடைந்தார்

ஒண்டிவீரன் வரலாற்றைக் கட்டமைக்க ‘ஒண்டிவீரன் கதைப்பாடல்’, ‘ஒண்டிவீரன் வில்லுப்பாட்டு’ மற்றும் ‘ஒண்டிவீரன் நாடகம்’ போன்ற வாய்மொழி இலக்கியங்களே சான்றாதாரங்கள் ஆகின்றன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ போன்ற நாட்டார் பாடல்களில் ஒண்டிவீரன் வரலாறு கிளைக்கதைகளாக சொல்லப் படுகிறது.

எழுத்து - திரு.கார்த்திகேயன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News