Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நாடு ஒரே தேர்தல்: பிரிவினைவாதிகளுக்கு கடிவாளம் - பின்னணி ஓர் அலசல்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: பிரிவினைவாதிகளுக்கு கடிவாளம் -  பின்னணி ஓர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Sep 2023 1:13 AM GMT

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் இணைந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்களை நடத்துகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்பது மிக அதிகம். மிகப்பெரிய திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை விட தேர்தலுக்கு அதிகம் செலவாகும். இதனை உணர்ந்த மத்திய அரசு இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை சாத்தியப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட உள்ளது. அடுத்து என்னென்ன மாற்றம் நடக்கும் என்பதை யூகிப்பதற்கு முன்னர் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதையும் கொஞ்சம் புரட்டி பார்க்க வேண்டும்.

1967 வரை இருந்த முறை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த முதல் தேர்தல் மற்றும் 1957, 1962,1967 ஆம் ஆண்டுகளில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் சில சட்டப் பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இந்திரா காந்தி ஆட்சி அமைந்த பிறகு 105 முறை மாநில சட்ட சபைகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 விதியை பயன்படுத்தி கலைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை செயல்படுத்த முடியாமல் போனது. 1983ல் மீண்டும் தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தது. அப்போதும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். தேர்தல் ஆணையத்தின் கருத்து ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.

வாஜ்பாய் விரும்பிய தேர்தல் முறை

1990களின் பிற்பகுதியில் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சிக்கு புத்துயிர் அளித்தது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார். 1999ல் வாஜ்பாய் ஆட்சியின் போது சட்ட கமிஷன் அறிக்கை லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. பிபி ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையத்தால் 1999ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது. 2002 பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும் என கூறப்பட்டது. 2003ல், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இந்தப் பிரச்னை குறித்துப் பேசினார். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2014க்கு பிறகு வேகமெடுத்த நடவடிக்கைகள்

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார். 2015 இல் பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையும் இந்த யோசனையை ஆதரித்தது. 2017 ஆம் ஆண்டில் NITI ஆயோக் ஆய்வறிக்கையால் ஆதரிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், அதன் நடைமுறை என்ன என்பதை விளக்கும் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.

2018 வரைவு அறிக்கையில் சட்ட ஆணையம் என்ன பரிந்துரைத்தது?

2018ல் நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது என்று கூறியது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலமைப்பில் 5 சரத்துகளை திருத்த வேண்டும் என பரிந்துரைத்தது. பிரிவுகள் 83, 85, 172, 174, 356 ஆகிய ஐந்து அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்ய வேண்டும். 174-வது பிரிவு மாநிலச் சட்டசபைகளைக் கலைப்பது குறித்தும், முக்கியப் பிரிவு 356 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்தும் கூறுகிறது.

குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்கள் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைப்பது ஆகியவை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பெரும் தடையாக இருப்பதாக வரைவு குறிப்பிடுகிறது.

அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, "நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு" பதிலாக "ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு" நடத்தப்பட வேண்டும் என்று ஆணையம் கூறியது. இந்த சூழ்நிலையில், "மாற்று அரசாங்கம்" மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே அரசாங்கத்தை அகற்ற முடியும் என்று குழு தெரிவித்துள்ளது. இடைக்காலத் தேர்தல்கள் நடந்தால், புதிய லோக்சபா அல்லது மாநில சட்டசபை எஞ்சிய காலத்திற்கு மட்டுமே சேவை செய்யும் என்று ஆணையம் பரிந்துரைத்தது.

2023ல் பிறந்த நம்பிக்கை

இப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளது. ராம்நாத் கோவிந்த் மிகவும் சிக்கலான சட்ட நுணுக்கங்களைக் கையாளும் திறன் கொண்டவர். 2023 ஜூன் 9 மற்றும் ஆகஸ்ட் 29 க்கு இடையில், ராம்நாத் கோவிந்த் குறைந்தது 10 மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அவர்களில் சிலரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளார். இது மட்டுமல்லாமல், மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவரையும் அவர் சந்தித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தேர்தலின் நன்மை

தேர்தல் செலவுகள் மீதான கட்டுப்பாடு: இது தேர்தல் மற்றும் கட்சி செலவுகளை ஒழுங்குபடுத்த உதவும். 1951-52 முதல் மக்களவைத் தேர்தலில் 53 கட்சிகள் 11 கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்தன. இதற்கு நேர்மாறாக 2019 தேர்தலில் 610 அரசியல் கட்சிகள், சுமார் 9,000 வேட்பாளர்கள் மற்றும் 60,000 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும்.

வரிப்பணம் மிச்சமாகும்: மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்கும். நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் சுமையை குறைக்கும். இது அரசாங்கக் கொள்கைகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதோடு, தேர்தல் தொடர்பான பணிகளைக் காட்டிலும் வளர்ச்சியில் கவனம் செலுத்த நிர்வாக இயந்திரத்தை செயல்படுத்தும். தேர்தல் எனும் பெயரில் பொதுமக்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் பல சேவைகள் தொடரும்.

வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வு: மாநில மற்றும் மத்திய அரசுகளின் கொள்கைகள் மற்றும் செயல்திறனை மிக திறம்பட மதிப்பிட வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை அவற்றின் உண்மையான நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை எளிதாக்கும்.

மேம்படுத்தப்பட்ட நிர்வாகம்: தேர்தல் ஆதாயங்களுக்காக அரசியல் கட்சிகள் குறுகிய கால முடிவுகளை எடுப்பது தடுக்கப்படும். தனிப்பட்ட பலனை எதிர்பார்த்து கொண்டுவரப்படும் திட்டங்கள் குறையும்.

நேர விரையம் : ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்களை நடத்துவது, அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையம், துணை ராணுவப் படைகள் மற்றும் பொதுமக்கள் உட்பட எல்லோருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும்.

சாத்தியமான தீர்வுகள் என்ன?

ஆட்சி வடிவம்: அமெரிக்காவைப் போலவே நிலையான தேர்தல் தேதிகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு கொண்டு வரப்படலாம். இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதாகும்

தேர்தல் தேதிகள்: எந்த அரசங்கமாக இருந்தாலும் பாராளுமன்றம் திட்டமிடப்பட்ட இடைவெளியில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யலாம்.

மாற்றுத் தலைமை: நாடாளுமன்ற அமைப்பில், ஆட்சிக்காலம் முடிவதற்குள் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நிலையில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது ஒரு தீர்வாகும். மாற்றாக, அத்தகைய சூழ்நிலையில் அதன் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை சபைக்கு வழங்கலாம்.

அரசியலமைப்புத் திருத்தம்: மக்களவைத் தேர்தலின் விதிமுறைகளுடன் மாநில சட்டப் பேரவைகளின் விதிமுறைகளை சீரமைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும்.

என்ன பாதகம் உள்ளது?

மாநிலத்தில் எந்த கட்சிக்கும், பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், பாதியில் கவிழும் சூழலும் ஏற்படலாம். அப்போது, இடையில் தேர்தல் நடத்த வேண்டி வரும். லோக்சபாவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி கட்சிகள், ஆட்சியை கவிழ்த்தால், மீண்டும் லோக்பசா தேர்தல் நடத்த வேண்டி வரும். அப்போது, மாநில சட்டசபைகளை கலைக்க இயலாது. அதன்பின், மீண்டும், தனித்தனியே நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இத்திட்டத்தை அமல்படுத்தும்போது, தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகும். இது, மாநில கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது காங்கிரஸ் காட்சியும் மாநில கட்சிகள் அளவுக்கு பலம் இழந்துவிட்டதால், இந்த தேர்தல் முறை மூலம் தங்களுடைய செல்வாக்கு குறையுமோ என அஞ்சுகிறது. மாநில வாரியாக மக்களிடம் பிரிவினை பேசி வளர்ந்த கட்சிகளின் ஆட்டம் இந்த தேர்தல் முறை மூலம் அடங்கும் என்பதாலேயே காங்கிரஸ் உட்பட சில எதிர்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News