சிறையில் பெற்றோர்.. காப்பகங்களில் குழந்தைகள்- தேசிய குழந்தைகள் ஆணையத்தின் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!
By : Yendhizhai Krishnan
சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் தங்க வைக்கப்படும் காப்பகங்களில் என்ன நடக்கிறது என்பதை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளிவந்தது. பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் தான் அது. அதில் பல இந்து விரோத காட்சிகள் அமைந்திருக்கும். ஏன் வில்லனையே நெற்றியில் குங்குமம், கையில் கயிறு, கழுத்தில் ருத்திராட்சம் என்று பக்திமான் போலத் தான் காட்டி இருப்பார்கள்.
ஆனால் உண்மை நிலை என்ன? இத்தகைய காப்பகங்களில் பெரும்பாலானவை, கிட்டத்தட்ட 90%த்துக்கும் மேல் கிறிஸ்தவர்களாலேயே நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கிறது, அது மதமாற்றம் போன்ற தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வேறென்ன நடக்கிறது என்பதை திரைப்படத்திலேயே பார்த்து இருப்பீர்கள்.
மாஸ்டர் படத்தை இயக்கியவரின் முந்தைய படமான கைதியிலும் சிறை சம்பந்தமான கதை தான். அந்தப் படத்திலும் காப்பகம் வரும். கதாநாயகன் குற்றம் செய்து விட்டு சிறையில் தண்டனை அனுபவித்த கால கட்டத்தில் அவரது குழந்தை ஒரு காப்பகத்தில் வளர்ந்து வருவது போல் காண்பிக்கப்பட்டு இருக்கும். இத்தகைய காப்பகங்கள் தான் இப்போது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கின்றன.
தண்டனை பெற்று சிறையில் வசிக்கும் தாய்மார்கள், சிறையில் குழந்தை பெற்றெடுத்தவர்கள், இரு பெற்றோர் இல்லாத குழந்தைகள், வேறு உறவினர்/குடும்பம் இல்லாத குழந்தைகள் என்று சிறைக் கைதிகளின் குழந்தைகள் சிறைக்குள்ளேயே அமைந்திருக்கும் காப்பகங்களில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறான லக்னோ, காஜியாபாத், ராஜமுந்திரி, கடப்பா, பாட்னா, மும்பை, முசாபர்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறைகளில் செயல்படும் காப்பகங்களில் அண்மையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு பைபிள் கற்பிக்கப்படும் அதிர்ச்சிகரமான விஷயம் தெரிய வந்துள்ளது. சில சிறைகளில் கைதிகளின் குழந்தைகள் சிறைக்கு வெளியே உள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், கல்வி அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும், பைபிள் கற்றுத் தரப்படுவதாகவும் ஆய்வின் முடிவில் குழந்தைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
காசியாபாத்தில் உள்ள Asha Deep Foundation அமைப்பின் காப்பகத்தில் வசிக்கும் கிறிஸ்தவரல்லாத குழந்தைகளின் லாக்கர்களில் 26 பைபிள்கள் இருந்ததாகவும் இந்த ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காப்பகம் நடத்தும் இத்தகைய அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கும் அமைப்புகளின் கொள்கையும் மதரீதியான பின்னணியுமே காரணம் என்று குழந்தைகள் ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் உண்மையான அடையாளத்தை மாற்றி அவர்களை மதம் மாற்ற முயல்வதும், அடிப்படை வசதிகள் செய்து தராததும் சிறார் நீதி சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் இத்தகைய காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இந்த அறிக்கை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மட்டுமே என்றும் இதைப்பற்றி இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல வெளிநாட்டு அமைப்புகளில் இருந்து நிதி பெற்று இத்தகைய காப்பகங்களை நடத்துவதால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகமும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.