சுவாமி விவேகானந்தருடன் மிஷனரிகள் மோதல் - பகுதி 1!
By : Mission Kali
1863-1902 வரை வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான பிரமுகர். மிஷனரிகளின் அடுத்த குறிப்பிடத்தக்க மோதல் இவருடன் நிகழ்த்து. மற்ற மோதல்களுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. சுவாமி விவேகானந்தர் மிஷனரிகளை எதிர்கொண்டது பெரும்பாலும் அவர்களின் சொந்த நாடுகளில்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் மிஷனரிகளின் சொந்த பூமியிலேயே சுவாமி விவேகானந்தர் விவாதங்களை நிகழ்த்தினார். 1893-1897 மற்றும் 1899-1900 என்று இரு பகுதிகளாக சுவாமிஜி மேலை நாடுகளில் விஜயம் செய்தார். இந்த இரண்டு காலகட்டங்களிலும் இந்துமதத்தின் செய்தியை அந்நாடுகளுக்கு எடுத்துச் சென்றார். சுவாமிஜி விடுத்த சனாதன அறைகூவலின் விளைவாக மிஷனரி மதத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய அலை அவர்களின் சொந்த நாடுகளிலேயே உருவானது.
அதுவரை மிஷனரி மதம் என்றால் படித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று நினைத்துவந்த இந்தியாவின் உயர்மட்டங்களிலும் மாற்றம் நிகழ்ந்தது. மிஷனரிகளின் உண்மை குணம் ஸ்வாமி விவேகானந்தரை அவர்கள் எதிர்கொண்ட விதத்தில் இருந்து அனைவருக்கும் புரிந்தது. இதன் விளைவாக படித்த, உயர்மட்ட இந்துக்களை மதம் மாற்ற முடியாத நிலை மிஷனரிகளுக்கு உருவானது.
படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களிடமும், பஞ்ச காலங்களில் அடித்தட்டு மக்களிடமும் மட்டுமே மதமாற்றம் செய்ய முடியும் எனும் நிலைக்கு மிஷனரிகள் தள்ளப்பட்டனர். இந்த மதமாற்றங்களுக்கும் ஐரோப்பாவில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ நேரடியாகப் பணம் வரவில்லை. மேலை நாடுகளின் கனவான்கள் இந்திய மக்கள் சேவைக்காக அனுப்பும் பணம் மிஷனரிகள் கையில் கிடைத்தால், அதை வைத்து மத மாற்றம் செய்தனர். இத்தனை பின்னடைவுக்கும் காரணமாக அமைந்தது சுவாமி விவேகானந்தரின் ஆற்றல் மட்டுமல்ல. அவர் முன்னெடுத்த சனாதன தர்மத்தின் பலம் அவரது வாக்கில் ஒளிவிட்டுப் பிரகாசித்து அவரது ஆற்றலுக்கு அளப்பரும் வலிமை கூட்டியது.
விவேகானந்தர் ஆங்கிலக் கல்விமுறையில் பயின்றவர். இந்தக் கல்விமுறை சிலுவை மதத்தை முன்னிறுத்தி, இந்து மதத்தை இழிவாகப் பார்க்கவைக்கும் நோக்கத்தில் உருவானது. ஒரு மிஷனரி கல்லூரியில் படித்த நபர் இந்த சூழ்ச்சியில் இருந்து மீண்டது மட்டுமின்றி, அந்த சூழ்ச்சியின் ஆணி வேறாகிய சிலுவை மதத்தையே அசைத்துப் பார்த்தது சென்ற நூற்றாண்டின் ஒரு அசாத்தியமான நிகழ்ச்சி.
1813இல் கிழக்கிந்தியக் கம்பேனியன் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன்மூலம் நேரடியாக மிஷனரிகளுக்கு அரசு ஆதரவு கிடைத்தது என்று சென்ற பகுதிகளில் பார்த்தோம். இந்த திருத்தம் "மதம் மற்றும் ஒழுக்கத்தை முன்னேற்ற தகுந்த அறிவை கொடுக்க வேண்டும்" என்றும் கூறியது. இன்றுவரை இவ்விஷயத்தில் "எது இந்தியாவுக்குத் தேவையான கல்விமுறை? ஆங்கிலக் கல்வியின் ஒழுக்கம் மற்றும் அறநெறிகள் நம் நாட்டுக்குத் தேவையா?" எனும் விவாதம் தொடர்கிறது.
ஆங்கிலேய அரசில் சிலர் இந்தியாவின் பண்டைய கலாசாரத்தையே கல்விமுறையிலும் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதற்கு இந்தியாவின் கல்விமுறை மீது அவர்களுக்கு இருந்த மரியாதையோ, மதிப்போ காரணம் கிடையாது. மாறாக, "'உயர்ந்த' ஆங்கிலக் கல்வியை இந்தியர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் தங்களை ஆங்கிலேயர்களுக்குச் சமம் என்று நினைப்பார்கள். தங்களையும் ஆட்சி அதிகாரத்தில் சேர்த்துக் கொள்ள முயல்வார்கள்.
அதனால் இந்தியர்கள் இந்தியக் கல்வி முறையிலேயே பயில வேண்டும்" என்பது அவர்கள் வாதம். ஆனால் ஆங்கலிக்கப் பிரிவை சேர்ந்தவர்கள் [இவர்கள்தான் இங்கிலாந்தின் பெரும்பான்மை சிலுவை மதப் பிரிவு] "மேலைநாட்டு இலக்கியம், தத்துவம் விஞ்ஞானம் ஆகியவை இந்துக்களை அவர்களது பழைமையான மூட நம்பிக்கைகளில் இருந்து விலகச் செய்யும்" என்று வாதிட்டனர்.
அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மிஷனரிகளும் ஆங்கலிக்கர்களின் எண்ணத்தையே கொண்டிருந்தனர். அவர்களின் ஒரு மிஷனரி மேலைநாட்டுக் கல்வியின் மூலமாக, "தற்போது கேவலமான, அசுத்தம் நிறைந்த விக்ரகங்களை வழிபடும் இந்துக்கள் ஆண்டவராகிய ஏசு கிறிஸ்துவை உணர முடியும்" என்று 1822இல் எழுதினார். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரார் அலெக்ஸாண்டர் டஃப். இவர் மேலை நாட்டுக் கல்வியை கொண்டுவருவதில் உறுதியாக இருந்தார். 1830ஆம் ஆண்டு இவர் கல்கத்தா வந்தடைந்தபோது மிஷனரிகள் பலம் பன்மடங்காகக் கூடியது.
"வீழ்ச்சியடைந்த மனிதர்களின் மாசுபட்ட அறிவினால் உருவாக்கப்பட்ட போலி மதங்களில் மிகவும் கீழ்மை நிறைந்தது இந்து மதம்தான்" என்று நம்பினார் அலெக்ஸாண்டர் டஃப். "சாத்தானின் பூலோக சாம்ராஜ்ஜிய மையப்புள்ளி" என்று இந்து மதத்தை இவர் விவரிக்கிறார்.
இவர் கல்கத்தா வருவதற்கு பத்து ஆண்டுகள் முன் கல்கத்தா இந்து கல்லூரி போன்ற பல அமைப்புகள் பெங்காலில் உருவாயின. இவை இந்து இளைஞர்களுக்கு மேலைநாட்டுக் கல்விமுறையை அளித்து வந்தன. அங்கே பயின்ற இந்து மாணவர்களின் மனநிலையை டஃப் அருதியிட்டார். "ஆங்கிலக் கல்வி தங்கள் [இந்து] பண்பாட்டில், வாழ்க்கைமுறையில் சுத்தமாக நம்பிக்கை இழந்த [இந்திய] இளைங்கர்களை உருவாக்கும்" எனும் உறுதியான முடிவுக்கு வந்தார் டஃப்.
பொது சர்ச் கூட்டம் [அனைத்து மிஷனரி உட்பிரிவுகளின் மாநாடு] 1835ல் கல்கத்தாவில் நடந்தது. இக்கூட்டத்தில் "மேலைநாட்டு இலக்கியமும் விஞ்ஞானமும், விரிந்த ஆனால் அருவருப்பான இந்து மதத்தை செங்கல் செங்கலாக உதிரச்செய்து, பொடிப்பொடியாக அழிக்கும்" என்று பேசினார்.
இங்கே நம் வாசகர்கள் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்கவேண்டும். எந்த ஒரு அறிவயல் கண்டுபிடிப்பும் எந்த மதத்துக்கும் சொந்தமானது கிடையாது. சிலுவை மதத்துடன் மேற்கின் அறிவியல் கண்டுபிடிப்புகளை முடிச்சுப் போட்டால், அதேபோல், நம் நாட்டின் கட்டிடக்கலை முதல் வான சாத்திரம் வரை அனைத்தையும் இந்து தர்மத்துடன் சேர்க்க வேண்டும்.
"மேலை நாட்டின் அறிவயல் வளர்ச்சிக்கு அவர்களின் மூட நம்பிக்கை அற்ற மத அமைப்பு ஒரு முக்கியக் காரணம்" என்று சொல்லும் இந்து விரோத வாய்கள் அதே மூச்சில் "இந்தியாவின் பண்டைய கலைகளுக்கும் அறிவியலுக்கும் இந்துமதம் காரணம் அல்ல. அது மொத்த மனித இனத்துக்கும் சொந்தம்" என்று கூறுகின்றன.
இத்தகைய கபடமான வாதத்தைத்தான் காலம் காலமாக நம் நாட்டின் "அறிவுஜீவிகள்" என்று அழைக்கப்படும் மார்க்சிஸ்டுகளும், நாத்தீகவாதிகளும் முன்வைக்கின்றனர். அறிவியல் இலக்கியம் ஆகியவற்றுக்கும் மதத்துக்கும் இல்லாத முடிச்சைப் போட்டு, எவ்வாறு நமது தர்மம் அழிக்கப்பட்டது என்று அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.