Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் கிசான் உதவித்தொகை.. தமிழகத்தில் ரூ.1,000 கோடி ஊழல்?அண்ணாமலை குற்றச்சாட்டு..

பிரதமரின் கிசான் உதவித்தொகை.. தமிழகத்தில் ரூ.1,000 கோடி ஊழல்?அண்ணாமலை குற்றச்சாட்டு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 July 2024 2:58 PM GMT

தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கியது ரூ.10,435 கோடி:

பிரதமரின் கிசான் நிதி யோஜனா திட்டத்தில் தொகை விடுக்கப்பட்ட பின்னரும், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளை சேர்க்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் பல ஆண்டுகளாக ரூ.34,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.10,435 கோடி வழங்கியுள்ளது.


சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல்:

கடந்த 2015-16 விவசாயக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் இருப்பதாகவும், இவர்களில் சுமார் 39 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி பெற தகுதியுடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் போலி நபர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படாமல், கடந்த 2020-2021ஆம் ஆண்டில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் இந்தத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால், தகுதியான உண்மையான விவசாயிகளை இணைக்கும் பணி நடைபெறவில்லை. கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் சுமார் 44 லட்சம் பேர் பயனடைந்தனர், பயனாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் சுமார் 23 லட்சம் பயனாளிகள் விவசாயிகளுக்கு மானியம் பெறுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 23 லட்சம் பேர் விவசாயிகள் இல்லை என்றால், இந்த மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது? சுமார் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.


தகுதியான விவசாயிகளுக்கு தொகை மறுப்பு:

மேலும், 2015-16 விவசாயிகள் கணக்கெடுப்பின்படி, சுமார் 39 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். ஆனால், தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்றால், தமிழகத்தின் தகுதியான விவசாயிகளை இத்திட்டத்தில் இணைப்பதில் திமுக அரசு மெத்தனமாக உள்ளது என்று அர்த்தம். கிசான் சம்மன் நிதி திட்டத்துக்காக மத்திய அரசால் பராமரிக்கப்படும் இணையதளத்தில் தமிழக வேளாண் துறை உரிய தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தமிழக வேளாண் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால், மத்திய அரசின் விவசாய உதவி கிடைக்காமல் தகுதியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.


திமுக அரசின் கேவலமான வேலையா?

கிசான் சம்மன் நிதியில் இருந்து நீக்கப்பட்ட 23 லட்சம் பேர் உண்மையில் விவசாயிகள் இல்லையா? அல்லது மத்திய அரசை இழிவுபடுத்தும் வகையில் திமுக அரசின் கேவலமான வேலையா? என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதால், தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு வழியின்றி, கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தொடர்ந்து இணைக்காமல், தகுதியான விவசாயிகளை புறக்கணித்து வருகிறது. தமிழக வேளாண் துறை தனது மெத்தன போக்கை உடனடியாக கைவிட்டு, மத்திய அரசின் கிருஷி சம்மன் நிதிக்கு தகுதியான அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும், திமுக அரசு தொடர்ந்து உழவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே திமுக அரசின் இந்த மெத்தன போக்கின் காரணமாக, பல்வேறு தமிழக விவசாயிகள் மத்திய அரசின் பி.எம் கிஷான் திட்டத்தின் நன்மைகளை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

Input & Image courtesy:Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News