சிறப்பு கட்டுரை : நீலகிரியில் அருந்ததியர் சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை பறித்ததா தி.மு.க?
By : Yuvaraj Ramalingam
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகள்(பட்டியலின மக்கள் மட்டுமே போட்டி இட முடியும்). தமிழகத்தில் பிரதானமாக 3 பட்டியல் சமூகங்கள் உள்ளன.
அதில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் அருந்ததியர் சமூகம். அவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் 18% SC ஒதுக்கீட்டில் 3% உள் ஒதுக்கீடாக தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 7 லோக் சபா தனி தொகுதியில் குறைந்தது ஒன்று அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதை மனதில் கொண்டு அருந்ததியர் சமூகம் ஓரளவு கணிசமாக வாழும் கொங்கு மண்டலத்தில் எப்பொழுதும் ஒரு தொகுதி தனி தொகுதியாக ஒதுக்கப்படும். முன்னர் பொள்ளாச்சி தொகுதி, 2009-ல் இருந்து நீலகிரி தொகுதி அப்பகுதியில் தனி தொகுதிகளாக இருக்கின்றன. 2004 வரை பெரம்பலூர் தனி தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசா, 2009-ல் நீலகிரி தனி தொகுதியானவுடன் அங்கிருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் (கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடி கொண்டது போல்). 2009 முதல் பெரம்பலூர் பொது தொகுதியானது குறிப்பிடத்தக்கது.
இதனால் நியாயமாக ஒடுக்கப்பட்ட மக்களிலும் ஒடுக்கப்பட்டவர்காளான அருந்ததியர் சமூகத்தின் அரசியல் வாய்ப்பு படுகுழியில் தள்ளப்பட்டுகிறது. அவர்களுக்கான நியாமான அரசியல் பிரதிநிதித்துவம் களவாடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, அருந்ததியரின் ஒரே தொகுதியை பிடுங்கிய தி.மு.க வேறு தொகுதியில் ஒரு அருந்ததியரை வேட்பாளராக்கியதா?
18 பேர் கொண்ட ராஜ்ய சபையில் கூட அவர்களது எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு தொகுதி ஒதுக்கப்படவேண்டும். அது தவிர அனைத்து மக்களும் வாக்களித்து அனைவருக்குமான மக்கள் பிரதிநிதியாகும் லோக் சபாவில் ஒருவர் தேர்வாகும் போது தான் சமூகத்தில் கட்சியை ஏற்றுக்கொள்வார்கள். கட்சி MLA-க்கள் மட்டும் வாக்களித்து செல்லும் நியாமன பதிவியான ராஜ்ய சபா பதிவியால் பெரிய மாற்றம் வராது.
மக்கள் வாக்களித்துதானே ஆ.ராசா அவர்களை தேர்தெடுத்துள்ளனர்? அதுவும் 2019 தேர்தலில் ராசாவை எதிர்த்து போட்டியிட்ட ADMK வேட்பாளர் ஒரு அருந்ததியர் தானே?
அடிப்படையில் மிகவும் ஒடுக்கப்படுவதால் (பட்டியலில் உள்ள பறையர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டு சந்தையூர் தடுப்பு சுவர்) அம்மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு சற்று குறைவு.
அவர்கள் இம்மண்ணில் எவ்வளவு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்றால் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா பேசியதை பலரும் கேட்டு இருப்பீர்கள் "சக்கிலியன் கேரக்டருக்கு அழகான ஜெமினி கணேசனயா நடிக்க வைக்க முடியும்?" வேறு சமூகத்தினரை பாரதிராஜாவால் அப்படி கூப்பிட்டு விட முடியுமா? ஏன் அதே பட்டியலில் இருக்கும் வேறு சமூகத்தை கூப்பிட்டுவிட்டு உயிருடன் உலாவதான் முடியுமா?
ஆனால் பாரதிராஜா பேசிய பேச்சிற்கு தமிழகத்தின் எந்த பிரதான கட்சியும் கண்டனங்களை பதிவு செய்யவில்லை. ஏன்? 30 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் அருந்ததிய சமூகமே திரண்டு போராடவும் இல்லை. அவ்வளவு கொடுமையான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலையில் விழிப்புணர்வற்றவர்களாக உள்ளனர் அம்மக்கள்.
எனினும் அம்மக்கள் தங்கள் எதிர்ப்பை தேர்தலில் வெளிக்காட்டி உள்ளனர்.
அதோடு ஏனைய தனி தொகுதிகளை போல அல்லாமல் நீலகிரி பாராளுமன்றத்தை உள்ளடக்கிய ஆறு சட்டமன்றங்களில் மலைப்பகுதியில் அருந்ததியர்கள் குறைவு. மாறாக தரை பகுதியில் கணிசமாக உள்ளனர். மலைப்பகுதிகளில் தி.மு.க-வும் சில வருடங்கள் முன்பு வரை காங்கிரஸ் கட்சியும் வலுவானவை.
சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகளை பார்த்தால் அம்மக்கள் மனநிலை புரியும். அருந்ததியர்கள் கணிசமாக வாழும் தரை பகுதியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க-வின் செல்வாக்கு குறைந்துக் கொண்டே வருகிறது!
இதற்கு ஒரு மிகசிறந்த உதாரணம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவு
அ.தி.மு.க - 83,006
தி.மு.க - 69,902
இந்திய கம்யூனிஸ்ட் - 27,965
2021 சட்டமன்ற தேர்தல் முடிவு
அ.தி.மு.க - 99,181
இந்திய கம்யூனிஸ்ட் - 83,173
இத்தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதி. அதனால், 2016 தேர்தலில் மூன்றாம் அணியாக களம் கண்ட கம்யூனிஸ்ட் 27,965 வாக்குகளை பெற்றது. இம்முறை தி.மு.க-வோடு கூட்டணி. ஆட்சிக்கு எதிரான மனநிலை, அத்தொகுதியின் முன்னாள் அதிமுக MLA-க்கு எதிரான மனநிலை என்ற அனைத்தையும் தாண்டி அ.தி.மு.க 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடிக்கிறார்.
அதோடு 2019 பாராளுமன்ற தேர்தலில் இங்கு கட்டமைக்கப்பட்ட மோடி எதிர்ப்பு மனநிலையை பயன்படுத்தி நீலகிரியில் வென்றார் அ.ராசா.
ஆனால் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து நீலகிரி பாராளுமன்ற தொகுதி உள்ளடக்கிய ஆறு சட்டமன்றங்களின் (பவானிசாகர், உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி) வாக்குகளை கூட்டி பார்த்தால்
அ.தி.மு.க கூட்டணி - 5,04,089
தி.மு.க கூட்டணி - 4,42,231
அதாவது 2021 சட்டமன்ற தேர்தலோடு நீலகிரி பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் அ.ராசா 61,858 வாக்குகளில் அ.தி.மு.க வேட்பாளரிடம் தோற்று இருப்பார். எனவே மண்ணிற்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாத அ.ராசாவை கொண்டு வந்து புகுத்தி மிகப்பெரிய சமூக அநீதியை செய்துள்ளது தி.மு.க.
இதை எந்த சமூகநீதி காவலர்களும் கேட்க மாட்டார்கள். மாறாக பா.ஜ.க அருந்ததியர் சமூகத்தை சார்ந்த திறமையான தலைவர் எல்.முருகன் அவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளது பா.ஜ.க. (அருந்ததிய சமூகத்தின் முதல் மத்திய மந்திரி)
வரலாறு எழுதும், காலம் உணர்த்தும் தமிழகத்தில் யார் சமூக நீதியை நிலை நாட்டினர் என்று. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அருந்ததியர் மக்களுக்கு நடக்கும் அநீதியை உரக்க சொல்வோம்.