Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசியல் வரலாற்றில், ஆட்சியில் பறையர் சமூகத்தின் அரசியல் அதிகாரம் ஒரு பார்வை!

தி.மு.க அரசியல் வரலாற்றில், ஆட்சியில் பறையர் சமூகத்தின் அரசியல் அதிகாரம் ஒரு பார்வை!

Yuvaraj RamalingamBy : Yuvaraj Ramalingam

  |  2 Jan 2022 2:17 PM GMT

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில் ஒருவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.C.V கணேசன் மட்டுமே பறையர் சமூகத்தை சார்ந்தவர்.

தமிழக மக்கள் தொகையில் பறையர் சமூக மக்கள் குறைந்தது 10 முதல் 12 சதவீதம் இருப்பார்கள். ஆக, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 34 பேர் கொண்ட அமைச்சரவையில் குறைந்தது மூன்றாவது இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் ஒன்று.

அந்த ஒரு துறையும் பலம் வாய்ந்த உள்துறை, மின்சாரம் அல்லது போக்குவரத்து என்று இல்லாமல் பெயரளவுக்கு இருக்க கூடிய தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகார பகிர்வு என்பதையும் அதிகாரத்தை நோக்கிய பயணம் என்பதும் தான் இங்கு சமூக நீதியை நிலைநிறுத்தும். அந்த அடிப்படையில் பறையர் சமூக மக்களுக்கான குறைந்த பட்ச அதிகார பகிர்வே நடக்காத போது அச்சமூக மக்களோ அல்லது அவர்கள் இருக்கும் பட்டியலின மக்களோ இங்கு ஆட்சி அதிகாரத்தின் தலைமை பொறுப்பான முதலமைச்சராவது எப்பொழுது?

உத்தர பிரதேசத்தில், பஞ்சாபில் ஒரு தலித் முதல்வராகும் போது பூரித்து பெரியார் கண்ட கனவு என்று வாழ்த்து மடல் வாசிக்கும் கீ.வீரமணி வகையறாக்கள் சமூக நீதி மண் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழகத்தில் அவ்வதிகார பகிர்வு நடப்பது எப்பொழுது?

அதற்கான குரலை பெரியாரிய வாதிகளோ இல்லை அம்பேத்கரை பெயரளவில் மட்டும் தூக்கி கொண்டாடும் அரசியல்வாதிகளோ கேட்டதுண்டா?. இது தான் திராவிடத்தின் சமூக நீதியா?

ஆனால், பறையர் சமூகம் தமிழக அரசியல் வரலாற்றில் அதிகாரத்தின் உச்சாணிக்கொம்பில் அமராத சமூகமா? இல்லை. அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருந்த மிகப்பெரிய சமூகம் அவர்கள். அதற்கான நான்கு எடுத்துக்காட்டுக்கள்.

1. B.பரமேஸ்வரன் - 1949 முதல் 1952 வரை தமிழக காதி, சிறுதொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், 1954 முதல் 1957 வரை தமிழக போக்குவரத்துத்துறை, அறநிலையத்துறை அமைச்சர்.

2. ஜோதி வெங்கடாச்சலம் - தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் அதுவும் பறையர் சமூகத்தில் இருந்தே வந்தார். 1953 முதல் 1954 வரை காவல்த்துறை, மது ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை அமைச்சர், 1962 முதல் 1967 வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்.

3. ஜெகநாதன் சிவசண்முகம் - 1937 முதல் 1938 வரை சென்னை மேயர் , 1952 முதல் 1955 வரை தமிழக சட்டமன்ற சபாநாயகர்.

4. கக்கன் - 1957 முதல் 1962 வரை தமிழக பொதுபணித்துறை அமைச்சர், 1962 முதல் 1963 வரை தமிழக உணவு மற்றும் வேளாண்த்துறை அமைச்சர், 1963 முதல் 1967 வரை உள்த்துறை அமைச்சர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 1950 முதல் 1967 வரை அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே அமைச்சர் உட்பட அதிகாரம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். அதில் குறைந்தது 2 பேர் பறையர் சமூகத்திலிருந்து இருப்பர். அதுவும் தற்பொழுது போல் இல்லாமல் கக்கன் அவர்கள் கையாண்டதை போல உள்துறை அமைச்சர், ஜோதி வெங்கடாசலத்தை போல சுகாதாரத்துறை, ஜெகநாதனை போல முதல் சட்டசபை சபாநாயகர், பரமேஸ்வர அவர்களை போல இந்து அறநிலைத்துறை என்று வலுவான துறைகளை கையாண்டனர். என்றைக்கு தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு திமுக வந்ததோ அன்றைக்கு வீழத்துவங்கியது பறையர் சமூகம்.

நான் சொன்ன அனைத்து தலைவர்களும் பறையர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் மட்டுமே அவர்களுக்கு அந்த பதவிகள் கொடுக்கப்படவில்லை அவர்களது திறமைகள் முக்கிய காரணம்.

ஆக அதிகாரத்தின் உச்சத்தில் ஏற்கனவே இருந்த சமூகம் இன்றைக்கு "நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா?" என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அச்சமூகத்தை தலைமை தாங்குபவர்கள் ஆளும் அரசுக்கு அடிமையாய் இருப்பதை விடுத்து கோட் போடுவது, அதை வைத்து போட்டோஷூட் நடத்துவது தான் சமூக அங்கீகாரம் என்று நினைக்காமல் கோட்டைக்கு போவது தான் சமூக அங்கீகாரம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இங்கு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கேட்கும் பெரியாரியவாதிகள் அமைச்சரவையில் எங்கே சமூகநீதி என்று கேட்க வேண்டும். கேட்பார்களா?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News