Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : சமூக நீதியை சீரழித்த சோஷியலிசம்!

சிறப்பு கட்டுரை : சமூக நீதியை சீரழித்த சோஷியலிசம்!

Cosmic BlinkerBy : Cosmic Blinker

  |  27 Feb 2022 11:32 AM GMT

இன்றைய அரசியல் களத்தில், ஏதோ ஒரு விவாதத்தில் நேரு திட்டங்களால் பிரச்சனை ஏற்பட்டது என்று வலதுசாரி சிந்தனையாளர்களும் இல்லை நேருதான் நவீன இந்தியாவின் சிற்பி என்று இடதுசாரி சிந்தனையாளர்களும் கருத்து மோதல் செய்வதை நாம் தினமும் காண்கிறோம். தி.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என்று பல அரசியல் கட்சிகள் காங்கிரசை விட அதிகமாக நேருவின் பெருமையை ஊடக விவாதங்களில் பேசுவதை பார்க்கலாம்.

மீடியாக்களும் மோடி vs நேரு போன்ற விவாத கட்டமைப்பை வைத்து இந்த நிகழ்ச்சியை காரசாரமாக மாற்றுவது மக்களை உணர்வுகளை தொடவும் செய்கின்றது. வலதுசாரி சங்கிகள் மாட்டு மூத்திரத்தை தாண்டி எதுவும் செய்யமாட்டார்கள், ஆனால் இடதுசாரி நேருவோ ஐ.ஐ.டி கட்டி கல்வி கொடுத்தார். பெரும் பொது நிறுவனங்களை தொடங்கி வேலை கொடுத்தார் என்று கூறும் போது, சரிதான், ஆங்கிலேயர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட இந்தியாவிற்கு நேரு கொடுத்த ஐ.ஐ.டி, பொது துறை நிறுவனங்கள் தவிர வேற என்ன செய்திருக்க முடியும் என்று மக்கள் நினைப்பது நியாயமே. இன்றய ஐ.ஐ.டி-யை மனதில் வைத்து கொண்டு அன்றே அதை நேரு உருவாக்கினார் என்பது பிரமிக்கவைக்க செய்வதும் நியாயமே.

ஐ.ஐ,டி ஆரம்பித்து கல்வி புரட்சியை ஏற்படுத்தி, விடுதலை அடைந்த இந்தியாவில் சாமானிய மக்களும் கல்வி பெற வழிவகுத்த நேரு சமூக நீதியை வித்திட்டு வளர்த்தார் என்ற கருத்துருவாக்கமும் வலிமையாக நடக்கிறது. பெரிய பொதுதுறை நிறுவனங்களை நிறுவி பல தொழிலாளர்களை உருவாக்கிய நேரு சமூக நீதி காத்த பெரும் தலைவர் என்றும் தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகள் ஆணித்தரமாக கூறுவதை கேட்கிறோம். இதை கேட்ட அடுத்த வினாடி , ஆமாம் இது உண்மை தானே என்று நினைக்கவும் செய்கிறது.

நேரு, மோடி போன்ற தனி நபர்களை மையப்படுத்துவதை புறம் தள்ளி, சுதந்திர இந்தியாவில் நேருவின் இடதுசாரி சோஷியலிச கொள்கைகள் செய்தது என்ன? அதன் தாக்கம் என்ன? என்பதை பார்த்தால் தெளிவு ஏற்படும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 36 கோடி. அனைத்து தொழில்களும் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்தது ஏழை விவசாயிகளும், ஆங்கிலேய கம்பெனிகளின் எச்சமுமே. கிட்டத்தட்ட 36 கோடி மக்களின் வாழ்வாதாரம் விவசாயமே. அதாவது மக்கள் அனைவரும் விவசாயத்தில் தான் வேலை. குடும்பத்திற்கு தேவையான விளை பொருட்களை வைத்துக் கொண்டு மீதியை விற்றுவிட்டு அந்த விற்ற காசில் மற்ற தானியங்கள், உணவு பொருட்கள் வாங்குவது. மக்களின் வாழ்க்கை. இவ்வளவே! ஆங்கிலேயர்களின் "மில்" துணி வாங்க கொஞ்சம் காசு இருந்தால், அதுவே ஒரு பெரிய விஷயம்.

அன்று இந்திய ஏழை விவசாயிகள் நம்பி இருந்தது மழை, உழுவதற்கு எருது மற்றும் சேமிக்கப்பட்ட விதைகள். இந்த சமுதாய பொருளாதார சூழ்நிலையில், சமுதாயத்தில் மக்கள் அனைவரும் விவசாயத்தில் இருந்தால் மட்டுமே அவர்கள் அனைவருக்கும் எதோ ஓரளவிற்கு உண்ண உணவு கிடைக்கும் நிலை. அன்று சிறு சிறு விவசாய தானியங்கி கருவிகள் கொண்டு வந்திருந்தால் அது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும். உதாரணத்திற்கு இந்த தானியங்கி கருவிகள் வந்த பிறகு ஒரு நாட்டின் 10% குறைவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு மற்ற 90% மக்களுக்கு உணவு இட முடியும். நல்ல வருமானம் வாழ்க்கை முறையும் இருக்கும். 90% மக்கள் மற்ற துறைகள் வாகனம், ஆடைகள், என்று கோடிக்கணக்கான வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த அமைப்பில் மனித ஆற்றல் நாட்டின் பெரும் முன்னேற்றத்திற்கு பயன்படும். இதை நாம் வளர்ந்த அனைத்து நாடுகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் புரியும்.

ஆனால் நேருவின் சோஷியலிச கொள்கைகள் இதை வேறு விதமாக பார்த்தது. விவசாயிகள் இருக்கும் அதே முறையில் விவசாயம் செய்து வாழ்வது விவசாயத்தை காப்பாற்றும் முறை என்று நம்பியது. சாமானிய விவசாயிகளின் வாழ்க்கையை, மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் கருவிகளின் தேவையை நேரு துளியும் பார்க்கவில்லை. சோஷலிச ரஷ்யாவின் பெரும் கனரக தொழிற்ச்சாலைகளே நேருவின் கனவாகியது, அதுவே இந்தியாவின் எதிர்காலம் என்றும் முடிவெடுத்தார். ரஷ்யாவில் இருந்த அந்த கனரக தொழிற்சாலைகள், அங்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த சமுதாய சிறு குறு தொழில் புரட்சியின் மீது வந்த கட்டமைப்பு என்ற விஷயத்தை பார்க்க தவறிய நேரு, இந்தியாவில் சில கனரக தொழிற்சாலைகள், அதற்கு பணிபுரிய பொறியாளர்கள் இதை செய்து விட்டால் தாமும் வரலாற்றில் இடம் பிடிக்கலாம் என்று நம்பினார். அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். அதில் முக்கியமான ஒன்று ஐ.ஐ.டி.

1950 முதல் 1961 வரை 5 ஐஐடிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அவை முறையே கரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி. ஒவ்வொரு ஐ.ஐ.டி-யும் தொடக்கத்தில் 100 இடங்களை கொண்டன. மொத்தத்தில் 500 லிருந்து 700 பொறியாளர்களை வருடா வருடம் இவை கொடுத்தன. சரி அன்றைய இந்திய மக்கள் தொகை எவ்வளவு ? 46 கோடி (1960 கணக்குப்படி) ! 46 கோடி மக்கள் தொகைக்கு வருடத்திற்கு 700 பொறியாளர்கள, இந்தியா முழுமைக்கும். அதாவது ஒரு கோடி மக்களுக்கு 15 பொறியாளர்கள். இன்றைய கணக்கில் 130 கோடி மக்களுக்கு வெறும் சொற்ப 2000 பொறியாளர்கள் இந்தியா முழுமைக்கும் என்று எண்ணிப்பார்த்தால் இதன் விபரம், விபரீதம் இன்று புரியும்.

இந்த ஐ.ஐ.டி-யில் அறிவியல், கணிதம் போன்றவை கற்று கொடுக்கப்பட்டன. இவை ஒரு ஆராய்ச்சி செய்யப்போகும் மாணவருக்கு உறுதுணையாக இருக்கும் அறிவியலின் அடிப்படையை வலுவாக்கும் பாடமாக அமைக்கப்பட்டது. மாணவர்களும் சேர்ந்தனர். வெளியே வந்தவுடன் பெரும்பாலும் நேரு உருவாக்கிய பெரிய பொது துறை நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்தனர். வேறு வழியில்லை. அங்கு என்ன வேலை செய்தனர் என்று அறிவதற்கு முன், இந்த தொழிற்ச்சாலைகள் எப்படி கட்டப்பட்டன என்பதை பார்ப்போம்.

நேரு தன் சோஷியலிச கனவை வேகமாக நிறைவேற்ற சுலபமான வழியை தேர்ந்தெடுத்தார். ரஷ்யாவிலிருந்து இந்த தொழிற்ச்சாலைகள் மொத்த உருவமாக, இந்தியாவின் பங்கு எதுவும் தேவையில்லா நிலையில், இங்கு வந்தன. முதலில் வந்த பல இரும்பு உருக்கு ஆலைகளில் கனமான பனிப்பொழிவை, பனிக்கட்டியை நீக்கும், உறைபனி குளிரில் இயங்க வைக்கும் பெரும் பகுதிகளுடன் இந்தியாவிற்கு வந்தன. பனியே விழாத இந்தியாவில் இவை வந்ததும் மட்டும் இல்லாமல், இதை பராமரிக்க ஆட்களும் தேவை பட்டனர். ரஷ்ய கையேடு என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக கொடுத்தது. உதாரணத்திற்கு இன்றய கார் தொழிற்ச்சாலைகளில் லட்சணக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்யும் ப்ரொடக்சன் லைன், அசெம்பிளி லைன் வேலையே அது.

இந்த வேலைகளை செய்யவே நேரு ஐ.ஐ.டி மாணவர்களை உருவாக்கினார். சுதந்திரம், ஆராய்ச்சிக்கான இடம் சிறிதும் இல்லாத இந்த நிறுவனங்களில், ஐ.ஐ.டி மாணவர்கள் வெறுப்புடன் வேறு வழி இல்லாமல் வேலை செய்தனர். இந்த நிலை வேகமாக மாறியது. ஐ.ஐ.டி-யில் அடிப்படை அறிவியலை கற்ற மாணவர்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பிற்கு சென்று அங்கு அதற்கு தகுந்த வேலையில் அமர்ந்தனர். இந்த நஷ்டத்தையும், இந்திய மூளை உலகத்திற்கு தேவை என்று கூறி புளகாங்கிதம் அடைந்தது நேருவின் காங்கிரஸ்.

இதற்கு இடையில் இந்த சில ஆயிரம் நபர்களை தவிர மற்ற 46 கோடி இந்தியர்கள் எந்த கருவிகளும் இல்லாமல் வளரும் மக்கள் தொகைக்கு பழங்கால முறையில் விவசாயம் செய்து உண்டு, உருளும் வாழ்க்கையை தொடர்ந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன் உலக உற்பத்திக்கு கிட்டத்தட்ட 40% பங்களித்த இந்தியா முகலாய படையெடுப்புக்கு பின் 22% ஆகி ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டு சுதந்திரத்தின் போது 4.5% வந்து நின்றது. நேருவின் சோஷியலிச கொள்கை இந்தியாவை மேலும் பின்னுக்கு தள்ளி 3.5% கொண்டு சென்றது. இதுவே ஆயிரக்கணக்கான வருட இந்திய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார தருணம் ஆகும்.

உலக நாடுகள் இது தான் தருணம் என்று, இந்த இந்திய இறங்கு முகத்தை 'ஹிந்து ரேட் ஆப் குரோத்' என்று கிண்டல் செய்தன. அதற்கான காரணத்தை இந்திய வாழ்வியலின் மீது போட்டது. இது காங்கிரஸக்கும் வசதியாக இருந்தது. இப்படிப்பட்ட மோசமான இந்து வாழ்வியல் முறையை மாற்றி அமைக்கும் சிற்பியாக நேரு தன்னை காட்டி கொண்டார். பிரதமரான தன்னை காணவரும் வெளிநாட்டினருக்கு இந்த பின்தங்கிய மோசமான மக்களை, அவர்களின் ஏழ்மையை பார்த்து ரசிப்பதை ஒரு சுற்றுலாவாகவே மாற்றினார். இது போன்ற பிற்போக்கு மக்களை மேய்க்கும் மெய்ப்பானாக நேரு பார்க்கப்பட்டார். ஒரு பழமொழி உண்டு. உனக்கு இரண்டு கண்கள் உள்ளன. எனக்கு ஒரு கண் உள்ளது. வா நாம் இந்த குருடர்களை மேய்ப்போம். இதை நேரு செய்தார். மேற்கத்திய மோகத்தை, அடிமை தனத்தை, வெள்ளை காரர்களை இரண்டுகண்கள் கொண்டவராகவும், இந்த மேற்கத்திய வாழ்வியல் மோகத்தால், வெள்ளைக்கார முறையை பின்படுத்துவதால் தனக்கு ஒரு கண்கிடைத்ததாகவும், மற்ற அனைத்து இந்தியர்களையும் குருடர்களாகவே வெளிப்படுத்தினார் நேரு. அப்ரஹாமிய உலகம் இதை உவகையுடன் ஏற்றது.


இந்திய ஏழ்மையை சுற்றுலா பொருளாக்கினார் நேரு

மேதகு அப்துல் காலம் போன்றவர்கள் எந்த ஒரு துணையும், ஆதரவும், உபகரணங்களும் இல்லாமல் நாட்டின் மீது கொண்ட காதலால் தம் உடல் பொருள் ஆவியால் உருவாக்கம் செய்தனர் என்பதே உண்மை. அவர்கள் தாம் செய்த ராக்கெட்டை கொண்டு செல்ல ஒரு 3 சக்கர மீன் பாடி வண்டி கூட இல்லாத இந்தியாவின் பரிதாப நிலையில் தமது சைக்கிளில் கொண்டு சென்றதை பாராட்டியது இந்த சோஷியலிசம். இந்த பாராட்டுக்கள் அன்று இருந்த உண்மையான அவல நிலையை மறைத்தது. அன்று இருந்த மேதகு அப்துல் கலாம் போன்றோர்க்கு சரியான உபகரணங்கள், கருவிகள், அடிப்படை தேவைகளான சரக்கு ஊர்திகள் இருந்திருந்தால் இன்று இந்தியா எங்கு இருந்திருக்கும் என்று எண்ணி பார்க்க முடிகிறது.


வண்டிகள் இந்தியாவில் இல்லாததால் சைக்கிளில் ராக்கெட்

நேருவோ வருடத்திற்கு 700 இன்ஜினியர்கள், சில ஆயிரம் பேருக்கு பொது துறை நிறுவனங்களில் வேலை கொடுத்ததன் மூலம் 46 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சிற்பியாக காட்டி கொண்டார். அதற்கு தனக்கு தானே பாரத ரத்னாவும் கொடுத்து மகிழ்ந்தார்.

சரி இந்த சோஷியலிச கொள்கையால் மக்கள் பசியில்லாமல் இருந்தார்களா என்றால், இல்லை என்பதை விட அது ஒரு கொடுமை என்றே சொல்லலாம். வளரும் மக்கள் தொகை, புறக்கணிக்கப்பட்ட 46கோடி மக்கள், மிகவும் மோசமான நிலையில் விவசாயிகள், முன்னேறாத விவசாய விளை முறைகள், விளைவு ? பெரும் பஞ்சம். ஆங்கிலேய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட 4 கோடி மக்களை கொன்ற பஞ்சத்தை விட கொடுமையானது இது. ஏனெனில், 1960களில் இந்தியா சுதந்திரமாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் கொள்ளை அடித்து யாரும் வெளியில் நம் பொருட்களை கொண்டு போகவில்லை. ஆனாலும் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் இறந்தனர். சிறு குழைந்தைகள் பெரும் பானை வயிற்றுடன், குச்சி கால்களுடன் இன்றும் நாம் சோமாலியா போன்ற நாடுகளில் காணும் நிலையில் இந்தியாவின் 95% இருந்தது.

நேருவின் சோஷியலிச இந்தியா, முதலாளித்துவ அமெரிக்காவிடம் கை ஏந்தி பிச்சை கேட்டது. இந்தியாவில் அரவை இயந்திரகள், அதை இயக்க மின்சாரம் என்று பல அடிப்படை விஷயங்கள் இல்லாததால், அமேரிக்கா கோதுமை மாவை அரைத்து அதை கடினமாக்கப்பட்ட பிஸ்கேட் வடிவில் அனுப்பியது. கோதுமையே பார்க்காத தென்னிந்திய மக்கள், இந்த வறண்ட கோதுமை பிஸ்கேட்டுகளை தண்ணியில் முக்கி உண்ணும் முறையை திணித்தது சோஷியலிச அரசு. இன்றளவும் உலகின் மிகப்பெரிய உணவு பொருள் நகர்வு என்பது இந்த இந்திய பஞ்ச காலத்தில் அமேரிக்கா நமக்கு கொண்டு சேர்த்த உணவின் அளவே என்றும் பார்க்கப்படுகிறது.


60களில் பஞ்சம், உலக நாடுகளில் இந்தியாவின் கையேந்தல், அன்றய செய்திகளில்

இதே காலங்களில் நேருவின் நண்பன் கொடுங்கோலன் மாவோ ஆண்ட சீனாவிலும் இதே போன்ற சோஷலிச கொள்கைகளால் பெரும்பஞ்சம். மாவோ பசியால் வாடிய சீன மக்களை எலி, பூச்சி, பாம்பு, தவளை, பூரான் என அனைத்தையும் உண்டு வாழும் கலாச்சாரத்திற்கு தள்ளி அதுவே பஞ்சத்திற்கு தீர்வு என்றான். நல்லவேளை நாம் கரப்பான் பூச்சி, பாம்பு சாப்பிடும் சோஷியலிச கலாச்சாரத்திற்கு மாறாமல் தப்பினோம் என்று மனதை சிறிது தேற்றி கொள்ளலாம் .

எங்கும் பஞ்சம், பசி, பட்டினி ஒரு பிடி அரசியே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தனது குடும்ப தேவைக்காக எப்படியாவது ஏதாவது பொருளை சேர்த்துவிடலாமா என்று வெறியுடன் திரிந்தனர், நிலைமை அந்த அளவிற்கு மோசம். 46 கோடி மக்கள், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்கள் மிக மிக குறைவு! விளைவு?, குறுக்கு வழியில் பொருள் சேர்ப்பது, மோசடி, அரசின் துணையோடு பொருள் கடத்தல் மற்றும் மிக முக்கியமாக சாதி போன்ற கட்டமைப்பை உபயோகித்து ஒரு குழு மற்ற குழுவை அடக்கி பொருளை தமதாக்கிக்கொள்ளும், அபகரிக்க முற்படும் போது ஏற்பட்ட சமுதாய உள் மோதல்!

இந்தியாவின் சமூகநீதியின் இருண்ட காலம் அது. சாதிய மற்றும் மற்ற படிநிலைகளை வைத்து மிகவும் அரிதாக இருந்த வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வளங்களை அடைந்த அதே முறை 70, 80களிலும் தொடந்தது. தேவை அதிகம், ஆனால் கிடைக்கும் பொருட்கள் குறைவு. இந்த நிலையில் ஒரு குழு , பல சமுதாய படிநிலைகளை வைத்து , அடிப்படை பொருட்களை தான் அடையவேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற குழுக்களை அடக்கி வஞ்சித்துபெரும் முறை தொடர்ந்தது. இதுவே சமூக அநீதி என்பது புலனாகும். இந்த நிலையின் பழியை, அப்ரஹாமிய நாடுகளின் "இந்து வாழ்வியல் முறை தான் அனைத்து பிரச்சினைக்கும் காரணம்" என்ற பார்வையை வழி மொழிந்தது காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள். இந்த சமூக நீதி பிரச்சனைக்கு காரணம் இந்து – சனாதன வாழ்வியல் முறையே என்ற அரசியல் நன்றாக விற்பனையானது.

இந்த உண்மையை மறைத்து இன்றும் ஏழைகளை ஏழைகளாகவே வைத்தும், விவசாயிகள் சமுதாய படி நிலைகளில் கீழ்படியிலேயே இருக்க வைத்தும், மற்றும் பல கீழடுக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வாய்ப்புகள் வசதி பெருக்காமல் வெறும் சாதியை வைத்து முன்னெடுக்கப்படும் சமூக நீதி அவலம் இன்றும் திமுக போன்ற கட்சிகளால் தொடர்வதை, நேருவின் சோஷலிச எச்சமாக பார்க்கலாம். நமது பிழைப்பிற்கு மேற்கத்திய நாடுகளின் பொருள், கலாச்சாரம், மொழி இவற்றை கையேந்தி பிழைப்பதே சமூகத்திக்கான தீர்வு என்ற கருத்துருவாக்கம் இன்றும் உள்ளது, கோமணம் கட்டி வயிறு காய்ந்து உடைந்த பற்களுடன் இருக்கும் ஏழை விவசாயியின் படத்தை போட்டு, தனது ஏசி ரூமில் இருந்து, அமெரிக்க நிறுவனங்களுக்கு வேலை செய்ய கொடுக்கப்பட்ட லேப்டாப்பில் இருந்து ஏழ்மையை கொண்டாடும் "தமிழன்டா இந்த விவசாயி டா .. இவர்களை (ஏழ்மையை, பரிதாபநிலையை) பாதுகாப்போம்" என்று கீச்சும் நேருவின் "ஏழ்மை சுற்றுலா" மாடலை பின்பற்றும் திராவிட குஞ்சுகள் பல்லாயிரம், அதை நாம் தினமும் பார்க்கலாம் !

ஐ.ஐ.டி-க்கு வருவோம் ! இரண்டாம் உலகப்போர், மற்றும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்ற இந்த இரன்டு நிலைகளில் உலக நாடுகள் இருந்தன. இந்த உலகத்தில் அனைவருக்கும் பொதுவான தேவை அத்தியாவசியபொருட்கள், வளர்ச்சி, சுதந்திர உலக நாடுகளின் பட்டியியலில் தன் நாடு முன்னிலை பெறவேண்டும் என்ற நோக்கம். உதாரணத்திற்கு ஹிட்லரால் முழுவதும் சீரழிந்த ஜெர்மனியை எடுத்துக்கொள்வோம். அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் இருந்த ஜெர்மனியின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 5 கோடி. ஜெர்மனி எத்தனை ஐ.ஐ.டி போன்ற கல்விச்சாலைகளை திறந்தது ? பூஜ்யம் ! ஆனால், அதற்கு பதில் பத்தாம் வகுப்பு படித்த மாண்வர்கள், சிறு கருவிகள், வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பொருட்கள் தயாரிக்க டெக்கினிக்கல் பாலி டெக்கினிக்குகளை தொடங்கியது. பல நூற்றுக்கணக்கான பாலி டெக்கினிக்குகள், இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். இங்கு மாணவர்கள் கட்டுமானம், மரவேலை, எலெட்ரிக்கல், மோட்டார் தயாரிப்பு, வாகனம் தயாரிப்பு என பிராக்டிகல் வழியில் பயின்று ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில் பெட்டைகளில் வேலைக்கு அமர்ந்தனர். உடலில் கிரீஸ் கரையுடன், தொளதொள என தடிமனான முழு உடையுடன் அன்றய ஜெர்மனிய இளைஞர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் லுக்கில் காணப்பட்டனர். ஜெர்மனியின் சமூகத்தின் மிக அடிப்படை தேவைகள் 1940 முதல் 1970 வரையிலான காலத்தில் இந்த முறையில் பூர்த்தியான நிலையில், ஜெர்மனி இந்த நூற்றுக்கணக்கான பாலிடெகினிக்குகளை ஒருங்கிணைத்து 17 பாலிடெக்னீக் பல்கலை கழகங்களை 70களில் உருவாக்கியது. இவை ஐ.ஐ.டி-விட நேர்தியானவை. ஏனெனில், இங்கு அடிப்படை அறிவியல், கைதேர்ந்த பாலிடெக்னீக் அனுபவத்தின் மீது கட்டமைக்கப்பட்டது. இது அறிவியலை தொழில்நுட்பமாக மாற்றி அடுத்த தொழில் புரட்சியை ஜெர்மனியில் உண்டாக்கியது. பென்ஸ், பிஎம்டபிள்யு என ஜெர்மனியின் எழுச்சியின் பின்புலம் இதுவே.

1970களில் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்த ஐ.ஐ.டி 5 மட்டுமே! அதே சமயம், ஐந்து கோடிக்கும் சற்று அதிகமாக இருந்த ஜெர்மனியில் பாலிடெக்னிக் பல்கலைகழகங்களால் நடத்தப்பட்ட டெக்னீக்கல் கல்வி சாலைகள் ஆயிரத்திற்கும் மேல். 1970களில் இந்தியாவில் ஐ.ஐ.டி-யில் படித்த மாணவர்கள் பின் மேற்படிப்பிற்காக, வேலை வாய்ப்பிற்காக இந்த ஜெர்மானிய பாலிடெக்னீக் பல்கலை கழகங்களை நோக்கி சென்றனர் என்பதும் வரலாறு.

Fisher (மீனவர்), Smith (ஆச்சாரி), Potter (குயவர்), Weber (நெசவாளி), Bond (விவசாயி) என்று அனைத்து சாதிய பெயர்களை மேற்கத்திய மக்கள் இன்றும் தம் பெயருடன் இணைத்து உபயோகிக்கபடுவதை பார்க்கலாம். ஜேம்ஸ் பாண்ட் (James Bond ) என்ற ஹீரோவின் பெயரில் பின்னால் இருக்கும் இந்த "Bond" என்ற சாதிய பெயரின் அர்த்தம் விவசாயி அல்லது வேளாளர் என்று அறியும் போது நாம் ஆச்சர்யப் படுவது இயல்பே. 17ம் நூற்றாண்டுகளில் வறுமையில் வாடிய ஐரோப்பாவிலும் இந்த சாதிய குழுக்களையும், படிநிலைகளையும் வைத்து பெரும் சமூக அநீதியை எதிர்கொண்டன. சமூக நீதிக்கு தேவை பொருளாதார வளம், அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்தில் சென்றதால் அவர்கள் இந்த சாதிய பெயர்களை இன்றும் பெருமையான அடையாளமாக தம் பெயருடன் சேர்த்து வைத்துக்கொள்கின்றனர். அதே நேரம் அங்கு சமூக நீதியும் உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வரும் இந்த சமுக நீதியை அடைய விடாமல், சாதியை மட்டும் வைத்து மக்களை பிரித்தாளும் ஏழ்மையை கொண்டாடும் தி.மு.க மற்றும் காங்கிரசின் சமூகநீதி அரசியல் இன்றும் இந்தியாவில் தொடர்கிறது. சாதி பெயரை நீக்குவதே சமூக நீதி என இன்றும் தி.மு.க சொல்லி ஏமாற்றுவதை அரசியலாக கொண்டுள்ளது.

ஜன்தன் திட்டத்தில் இந்தியர் அனைவருக்கும் வங்கி கணக்கு என்று மோடி தொடங்கியபோது, இந்த ஏழைகளின் வங்கி கணக்கு காலியாக இருக்கும் என்று கிண்டல் அடித்த காங்கிரஸ். 4 வருடங்களில் அதே வங்கி கணக்கில் இன்று கிட்டத்தட்ட 2 லட்சம் கொடியை பார்த்து காங்கிரஸ் கதறுகிறது. பணக்காரர்கள் மட்டுமே செய்து வந்த மின்னணு பண வர்தகம், சில்லறை வர்த்தகமும், சிறு கடைகளும் செய்ய UPI கொண்டு வந்தார் மோடி. கிராமத்தில் இன்டர்நெட், பரிவர்த்தனை செய்ய மெஷின், மின்சாரம் எதுவும் இல்லாத ஏழைகளுக்கு இது தேவை இல்லை என்று சமூக நீதி பேசினார் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம். அதற்கு பெரிதாக ஒத்து ஊதியது தி.மு.க. டிஜிட்டல் இந்தியாவை கிண்டல் செய்து மீம்ஸ் பல்லாயிரம் பறந்தது. ஆனால் இன்று? உலகின் மின்னணு பணவர்தனையில் முதலிடத்தில் இந்தியா ஒரு புரட்சியே செய்து கொண்டு இருக்கிறது. ப சிதம்பரம், மற்றும் ஸ்டாலின் வீட்டிற்கு முன் வந்து ஊதும் பூம் பூம் மாட்டுக்காரணும் மாட்டின் தலையில் QR தொங்க விடபட்டுள்ளதை பார்த்து அவர்கள் வருந்தவே செய்வர். முன்பு எவ்வளவு அழகாக நாம் போடும் பிச்சையை பொருக்கி கொண்டு போகும் அந்த அழகான ஏழ்மை நிலைமையை அழித்து மோடி இன்று அடித்தட்டு மக்களையும் அதானி அம்பானி நிறுவனங்களின் ஓட்டத்தில் இணைப்பதை இவர்கள் கண்டித்து சமூக நீதியை காக்க போராடுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். முத்ரா கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கு எந்த கேள்வியும் இல்லாமல் பல்லாயிரம் கடன், அனைவருக்கும் வீடு, செல்வ மகள் திட்டம், 100% மின்சாரம், ஏழை தாய்மார்களுக்கு கேஸ் ஸ்டவ். மற்றவரிடம் கையேந்தும் ஏழை விவசாயிகள் எதிர்கொள்ளும் சமூக அநீதியை உடைக்க, வருடத்திற்கு 6000 ரூபாய் அனுப்பி விவசாயிகளின் தன்மானம், கவுரவம் காத்து சமூகநீதியை நிறுவுகிறார் மோடி. ஏழ்மையை போட்டோ எடுத்து கொண்டாடும் இன்றைய நேருவின் சோஷியலிச வாரிசுகளான ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமா போன்றோர்க்கு இந்த மோடியின் செயல் தலை வலியாக இருப்பதுடன் பொருளாதார அடிப்படியில் வரும் இந்த சமூகநீதி அவர்களின் சாதிய, இந்து எதிர்ப்பு போலி சமூக நீதி அரசியலை நிர்மூலமாக்கும் என்ற பயம், குடைச்சல் இருப்பது நம்மால் புரிந்து கொள்ள முடிவதே.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News