Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் அதிருப்தியை சம்பாதித்த திமுக - 2 லட்சம் பேரின் கதி என்ன? வாய் திறக்காத முதல்வர்!

விவசாயிகளின் அதிருப்தியை சம்பாதித்த திமுக - 2 லட்சம் பேரின் கதி என்ன? வாய் திறக்காத முதல்வர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Sep 2023 1:00 AM GMT

காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. காவிரி நதிநீர் ஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. 2023ல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக உள்ளதால் கர்நாடக அணைகள் நிரம்பவில்லை. எனவே, தமிழகத்துக்கு முழுவதுமாக தண்ணீர் திறந்து விட முடியவில்லை என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. 1974ல் இருந்து 45 ஆண்டுகளாக கர்நாடக அரசு காவிரி ஒப்பந்தத்தை எப்பொழுதுமே பின்பற்றியது இல்லை. 1991ல் 11 லட்சம் ஏக்கராக இருந்த கர்நாடகாவின் பாசன பரப்பு தற்போது 21 லட்சமாக அதிகரித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உட்பட ஐந்து ஆறுகளில் அணைகளைக் கட்டி 80 முதல் 90 டிஎம்சி தண்ணீர் வரை தடுத்தது கர்நாடகம். அதுவே இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இப்போது காவிரி விவாகரத்திலும் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறது?

1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப்பூசல் சட்டம் அமலுக்கு வந்தது, இதன் மூலம் இந்தியாவில் பல மாநிலங்களில் உருவான நதிநீர் பிரச்னைகள், தீர்ப்பாயங்கள் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தீர்ப்பின் படி, கர்நாடகாவில் மழை அளவு குறைந்தால் அந்த அளவை மட்டும் குறைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். அப்படி கணக்கு பார்த்தால் இப்போது கொடுக்க வேண்டிய 37 டிஎம்சி தண்ணீரில் 13 சதவிகிதத்தை குறைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை திறக்க வேண்டும். ஆனால் 37 டிஎம்சியில் இதுவரை 7 டிஎம்சி மட்டுமே வந்துள்ளது. 2007 காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இதுவரை ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு முறைகூட சரியாகத் தண்ணீர் திறந்து விடவில்லை கர்நாடக அரசு. அவர்களின் அணைகள் கொள்ளளவைத் தாண்டினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தருகிறார்கள்.

தமிழகத்தின் நிலை

தமிழகத்தில் 90 அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.297 மில்லியன கன அடி. தற்போது இந்த அணைகளில் மொத்தம் 87.604 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. அணைகளின் மொத்த கொள்ளளவில் 39% மட்டுமே நிறைந்திருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறுவை சாகுபடிக்கான காலம். ஆனால் தமிழகத்துக்கு அக்டோபரில் தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை தான் அதிக மழை தருவதாகும். எனவே குறுவை காலத்தில் குறுகிய கால பயிர்கள் விளைவிக்கப்படும். இவை 100-120 நாட்களில் விளையக்கூடிய பயிர்கள்.

நெல் விளைவிக்கும் பகுதியான டெல்டா மாவட்டங்கள், குறுவை சாகுபடிக்குக் காவிரி நீரையும் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரையும் நம்பியே உள்ளன. குறுவை பயிர்கள் கடந்த ஆண்டு 4.75 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் 40 சதவிகித உணவு பயிர்கள் டெல்டாவில் விளைக்கிறது. கர்நாடகவின் பிடிவாதம் காரணமாக இவையெல்லாம் கருகும் நிலை உருவாகி உள்ளது.

வழக்கமாக என்ன நடக்கும்?

குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். 2022ல் கர்நாடகாவில் மழை அதிகம் பொழிந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால் மே 24ஆம் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நிலத்தில் 1.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு மோட்டார் மூலம் நீர் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட நீர் பாசன வசதிகள் உள்ளன. மீதமுள்ள சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் காவிரி நீரை நம்பி தான் இருக்கிறார்கள். இப்போது காவிரி நீர் பற்றாக்குறையால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களைக் கைவிட்டுவிட்டனர். ஐந்து லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படிருக்கும் குறுவை பயிர்களில் கிட்டத்தட்ட சரி பாதி பறிபோகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். டெல்டா பகுதியில் ஒரு விவசாயிக்கு சராசரியாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். ஐந்து லட்சம் ஏக்கரில் சாகுபடி என்றால் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பாதிப்படைவார்கள்.

திமுக அரசு செய்த குளறுபடி

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை கணக்கிடாமல் மேட்டூர் அணையில் 103 அடி தண்ணீர் இருக்கும் போது, அமைச்சர்கள் பாசனத்துக்கு திறந்து விட்டனர். அணையின் நீர்மட்டம் மளமளவென தண்ணீர் குறைந்து. நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம், பருவ மழை பெய்யும் சூழல் எல்லாம் தெரிந்து இருக்கும். அதை, முதல்வரிடம் விளக்கி, தண்ணீர் திறப்பை மாற்றி அமைத்து ஒரு போக சாகுபடியையாவது ஊக்கப்படுத்தி இருந்தால், இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது. சம்பா சாகுபடிக்கு ஏறத்தாழ, 150 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் இப்போது 21 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது.

குறுவை சாகுபடி கேள்விக்குறி

குறுவை சாகுபடி தான் கேள்விக்குறியாகி விட்டது. அடுத்து சம்பா சாகுபடி செய்ய தயாராகும் விவசாயிகளுக்கு, அதுகுறித்து எந்தவிதமான அறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வெளிவராததால், என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். இதோடு தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு, பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன் பெறும் வகையில் பிரீமியம் தொகையை, உரிய காலத்தில் தமிழக அரசு செலுத்தாமல் விட்டுள்ளது. தண்ணீர் திறக்க மறக்கும் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசையும் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதில்லை. இவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தமிழக விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News