Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை உற்றுநோக்கும் உலகம்: ஜி20 மாநாட்டுக்கு பிறகு உலக மாற்றம்? ஓர் அலசல்!

இந்தியாவை உற்றுநோக்கும் உலகம்: ஜி20 மாநாட்டுக்கு பிறகு உலக மாற்றம்? ஓர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Sep 2023 1:30 PM GMT

2023ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை பொறுப்பு ஏற்று நடத்துகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என ஒரு சிலர் நினைக்கலாம். மாநாடு பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர், கொஞ்சம் ஜி20 அமைப்பு பற்றியும், அதன் வலிமை பற்றியும் அறிந்து கொள்வோம்.

ஜி20 அமைப்பு உருவாக்கம்

1997களில் ஆசியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 1999ல் ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் பொருளாதார மந்தநிலை, தேக்கநிலையைக் கருத்தில் கொண்டு அதை எதிர்கொள்ளும் வகையில் உலகப் பொருளாதார நெருக்கடிகளை அலசி ஆராய்வதற்காக நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் G-20.

2007ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு நாட்டை ஆளும் பொறுப்பில் இருக்கக்கூடிய தலைவர்களும் பங்கேற்கும் வகையில் கூட்டமைப்பானது விரிவாக்கப்பட்டது.

ஐரோப்பியம் ஒன்றியம் உட்பட 20 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன. கூட்டாக, ஜி-0 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85%ம், உலக வணிகத்தில் 80%ம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது. ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

ஜி-20 குழுவின் அதிகாரம்

ஜி-20 குழுவில் பிரேசில், கனடா, சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகள் உள்ளன. இவற்றோடு ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குழுவில் 20வது உறுப்பினராக உள்ளது.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் இக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு சில நாடுகளையும் அமைப்புகளையும் விருந்தினர்களாக அழைக்கிறது. 2023ம் ஆண்டுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜி20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது. இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜி20 மாநாடு நடக்கும் போது பொருளாதாரம் மட்டும் இன்றி, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்றவை பற்றியும் விவாதிக்கப்படும்.

ஜி-20அமைப்பின் செயல்பாடு

ஜி-20அமைப்பின் தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. ஜி-20 இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதி அமைப்பு. இரண்டாவது ஷெர்பா அமைப்பு. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.

56 நகரங்களில் 200 கூட்டங்கள்

2023ல் மட்டும் ஜி20 தொடர்பாக இந்தியாவில் சுமார் 56 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், ஸ்டார்ட்-அப், சுற்றுலா, எரிசக்தி மற்றும் ஆற்றல், காலநிலை மாற்றம் எனப் பல துறைகள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் விவாதங்களும் உரையாடல்களும், கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டது. இப்போது இதன் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கிறது. சீனா, ரஷ்யா அதிபர்கள் தவிர பிற உறுப்பு நாட்டு தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் பங்கு

ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற வகையில், வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. 2023ம் ஆண்டு உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொன்னான ஆண்டாக பரிணமித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒருமித்த கருத்து அடிப்படையிலான கொள்கைகளை வகுப்பது எளிதான காரியம் அல்ல. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளிடையே வளர்ச்சி நிலைகளிலும், புவி அரசியல் உறவுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

சர்வதேச பொருளாதாரம் தற்போது மந்த நிலையை சந்தித்து வரும் வேளையில், மோசமான உணவுப் பாதுகாப்பு மற்றும் சீர்குலைந்த விநியோக சங்கிலிகளுடன் நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த, நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு இந்தியா வசம் உள்ளது. 2022ல் பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் வரைவு அறிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியது.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற பாதையை நோக்கி, சர்வதேச சவால்களை மாற்றத்துக்கான வாய்ப்பாக மாற்றும் செயல்களில் இந்தியா வீறு நடை போடுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News