Kathir News
Begin typing your search above and press return to search.

இனி இந்திய அரசியலை முடிவு செய்யும் பெண்கள்: 27 வருட கனவை சாத்தியமாக்கும் மோடி அரசு - ஓர் அலசல்!

இனி இந்திய அரசியலை முடிவு செய்யும் பெண்கள்: 27 வருட கனவை சாத்தியமாக்கும் மோடி அரசு - ஓர் அலசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Sep 2023 1:38 AM GMT

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. வாஜ்பாய் அரசு பலமுறை முயன்றும் நிறைவேற்ற முடியாமல் போன ஒன்றை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா பல முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை இல்லாததால் அந்த கனவு முழுமையடையாமல் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு எம்பிக்கள் சென்ற பிறகு நிறைவேற்றப்படும் முதல் மசோதா இதுவாகும்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?

அரசியலமைப்பு 108வது திருத்த மசோதா, 2008, மாநில சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை (33%) பெண்களுக்கு ஒதுக்க முயல்கிறது. இந்த மசோதா 33% ஒதுக்கீட்டிற்குள் SC, ST மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டை முன்மொழிகிறது. ஒதுக்கப்பட்ட இடங்கள் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படலாம். திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் அமலுக்கு வரவில்லை. 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் 77 பெண் சட்டமன்ற உறுப்பினர்களும் 13 பெண் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பார்கள்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா: வரலாறு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் பெண் இடஒதுக்கீட்டிற்கான விதையை முதன்முதலில் விதைத்தார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் செப்டம்பர் 1989 இல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை.

1992 மற்றும் 1993ல், அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் ௭௨, 73 மீண்டும் அறிமுகப்படுத்தினார். இது ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்கள் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கியது. மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு தேசத்தின் சட்டமாக மாறியது. இப்போது நாடு முழுவதும் பஞ்சாயத்துகள் மற்றும் நகரபாலிகாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.

செப்டம்பர் 12, 1996 அன்று, அப்போதைய தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 81வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெறத் தவறியதையடுத்து, கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. முகர்ஜி குழு தனது அறிக்கையை 1996 டிசம்பரில் சமர்ப்பித்தது. இருப்பினும், மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் 1998ல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை 12வது லோக்சபாவில் முன்வைத்தது. இருப்பினும், இந்த முறையும், மசோதா ஆதரவைப் பெறத் தவறி, மீண்டும் காலாவதியானது. பின்னர் 1999, 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை.

மீண்டும் பிப்ரவரி 2010ல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தது. இறுதியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இறுதியில் 2014ல் மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் காலாவதியாகாது. எனவே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இந்திய அரசியலில் பெண்கள்

1952ல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். தற்போதைய 17வது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதம். இப்போது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். வமக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அவர்களில் 78 பேர் பெண் எம்பிக்கள். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர் அவர்களில் 11 பேர் பெண் எம்பிக்கள். பெண்கள் இட ஒதுக்கீடு சட்டப்படி மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கினால், மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 179 ஆக உயரும் என்பதுடன், 81 பெண்களை மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கலாம்.

மசோதா நிறைவேறினால் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்தான் தேர்தலில் அதிகம் போட்டியிடுவார்கள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் போட்டியிட முடியாது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இப்படி முட்டுக்கட்டை போடுவதன் பின்னணியில் இருப்பது சமூக நீதி பற்றிய அக்கறை என்பதைவிட, ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஆணவம் என்பதே உண்மை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News