ஜெயலலிதாவுடன் வாழ்ந்த 33 வருடங்கள் - மனம் திறந்த சசிகலா!
By : Shiva
சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசுவது, தான் மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாகவும் கட்சியை காப்பாற்ற போவதாகவும் கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் 'தி வீக்' ஆங்கில இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடனான தனது நட்பு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைப் பற்றி பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.
சசிகலா 1957 ஆம் ஆண்டில் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மன்னார்குடியில் விவேகானந்தம் மற்றும் கிருஷ்ணவேணி என்ற விவசாயி தம்பதியினருக்கு பிறந்தார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த, நில புலங்களைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் இவரது குடும்பம் பணக்காரக் குடும்பம் இல்லை.
1973 ஆம் ஆண்டில் எம்.நடராஜனுடன் சசிகலாவின் திருமணம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இவரது திருமணம் இந்து முறைப்படி நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் சென்னையில் மாநில தகவல் இயக்குநரகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியதால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் சென்னைக்கு சென்றனர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடராஜன் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. இதனால் அவர் 1976 முதல் 1980 வரை வேலை இல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் வருமானத்துக்காக சசிகலா வீடியோ டேப் வாடகைக்கு விடும் கடையைத் தொடங்கினார். ஆனால் அதிலிருந்து தான் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில் தனது நகைகளை விற்று நடராஜனுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எம்ஜிஆர் முதல்வரான பின்னர் நடராஜன் மீண்டும் பணியில் இணைந்தார். 1980களின் தொடக்கத்தில் தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடலூரில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தார். அந்த சமயத்தில்தான் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா எம்ஜிஆரின் மதிய உணவு திட்டத்தை பிரபலப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்வர் எம்ஜிஆர் அப்போது தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த சந்திரலேகாவிடம் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை சிறந்த முறையில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டார்.
சந்திரலேகா அந்த பொறுப்பை நடராஜனிடம் ஒப்படைத்தார். நடராஜன் தனது மனைவி சசிகலாவிடம் ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் பணியை ஒப்படைத்தார். இதுதான் ஜெயலலிதா சசிகலாவை நீண்டகால நட்புக்கு அடிகோலிய முதல் சந்திப்பு.1980களின் பிற்பகுதியில் சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்திலேயே குடியேறி விட்டார்கள். எம்ஜிஆரின் இறப்புக்கு பின்னர் இந்த நட்பு மேலும் வலுப்பட்டது.
1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று எம்ஜிஆர் உயிரிழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் ஜெயலலிதா உடனடியாக அவரது ராமாவரம் தோட்டத்தில் உள்ள இல்லத்திற்கு சசிகலாவுடன் விரைந்தார். "கேட் மூடி இருந்தது. ஆனால் நாங்கள் அதை உடைத்து தள்ளிவிட்டு உள்ளே சென்றோம். அக்கா அழுது கொண்டே இருந்தார்கள். எம்ஜிஆர் குடும்பத்தினர் அவரை தரைத்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட முயற்சித்தார்கள். ஆனால் நாங்கள் வெளியேறவில்லை. முதல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு எம்ஜிஆரின் உடல் கொண்டுவரப்படும் அதை நாங்கள் பார்த்தோம். அவர் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டபோது நாங்களும் காரில் ஏறி பின் தொடர்ந்தோம். டிடிவி தினகரன் தான் காரை ஓட்டினார்".
பின்னர் எம்ஜிஆரின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனத்தில் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார். "அக்காவுக்கு காயம் பட்டுவிட்டது. நாங்கள் வீடு திரும்பினோம்" என்ற சசிகலா போயஸ் கார்டனுக்கு திரும்பியவுடன் ஜெயலலிதா தனது தாயார் சந்தியாவின் படத்துக்கு முன்னால் விழுந்து "நான் தோற்றுவிட்டேன் அம்மா" என்று கதறி அழுததாக கூறுகிறார். அப்போதுதான் ஜெயலலிதா எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்று புரிந்துகொண்ட சசிகலா தான் அவருடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை ஓரங்கட்ட அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எம்ஜிஆரால் மெருகூட்டப்பட்டவர் என்றாலும் கட்சியில் தலைமை பொறுப்பை அடைய ஜெயலலிதா பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒரு பிரிவும் ஜானகி தலைமையில் ஒரு பிரிவும் என்று இரண்டாக பிரிந்தது.
ஜெயலலிதா அதிமுக மீது தனக்குள்ள உரிமையை நிலைநாட்ட முயற்சித்தபோது சசிகலா அவருக்கு உறுதுணையாக இருந்தார். அவர் சுற்றுப்பயணம் சென்றபோது அவருடனேயே சென்றார். வேலைதான் கட்சி அலுவலகத்துக்காக இடம் தேடிக் கொண்டிருந்தபோது நடராஜன் மூலம் சசிகலா ஒரே இரவில் ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்திற்கு இடம் தேடித் தந்தார். அப்போது பாரிஸ் கார்னரில் இருந்து ஒரு பெரிய இரும்பு கம்பத்தை வாங்கி அதற்கு வர்ணம் பூசி கட்சிக்கொடியை ஏற்ற தயார் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
பின்னர் நடராஜன் உடன் ராமாபுரம் சென்ற சசிகலா கட்சியை விட்டு தருமாறு ஜானகியிடம் பேசியுள்ளார். ஆனால் ஜெயலலிதா அங்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாகவும் ஜானகியை சந்திப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று கூறியதாகவும் சசிகலா கூறியுள்ளார். ஆனால் ஜானகியுடன் பேசி கட்சியை ஒன்றினைப்பதில் சசிகலா பிடிவாதமாக இருந்ததால் அவர் எண்ணப்படி செய்யுமாறு ஜெயலலிதா விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சசிகலா சென்று ஜானகியை சந்தித்தபோது கட்சியை விட்டு கொடுத்து விட முடிவு செய்ததாக ஜானகி கூறியதாகவும் பின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் இந்த தகவலை வெளியிட்டதாகவும், சில நாட்களிலேயே ஜெயலலிதா அதிமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதும் அதிமுக மீதும் எவ்வளவு பற்று கொண்ட சசிகலா கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏன் கட்சியிலிருந்து விலகி நின்றார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது "இரட்டை இலைக்கு எதிராக நான் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும்?" என்று அவர் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் வசித்த 33 ஆண்டுகளில் சேலை வாங்குவதை தவிர வேறு எதற்காகவும் அவருக்கு தெரியாமல் எங்கும் சென்றதில்லை என்று சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு பச்சை நிறம் தான் மிகவும் பிடிக்கும் என்றும் அது தனக்கு ராசியான நிறம் என்று கருதியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விலையுயர்ந்த நகைகள் மீது ஜெயலலிதாவுக்கு ஆசை இல்லை என்றும் எப்பொழுதும் எளிமையாக இருப்பதையே அவர் விரும்புவார் என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா அணிந்த சேலைகளை போன்றே தானும் அணிந்ததாகவும் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது ஒரே நிறம் மற்றும் டிசைனில் 22 சேலைகளை பார்த்த ஒரு பெண் அதிகாரி மலைத்து போனதாகவும் கூறியுள்ளார்.
இந்த புடவைகள் எல்லாம் தற்போது பசுமை கால நினைவுகளாக மாறிவிட்டன என்று கூறும் சசிகலா, ஜெயலலிதா விரும்பி சாப்பிட்ட வறுத்த நிலக்கடலை, பச்சை பட்டாணி மற்றும் நீர் கொழுக்கட்டாய் போன்றவற்றை தற்போது சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
"நான் நிலக்கடலையின் தோலை அகற்றி விடுவேன், நாங்கள் சுற்றுப்பயணத்தில் இருந்த போதெல்லாம் அக்காவிற்கு அவற்றை கொடுப்பேன். நிலக்கடலையைப் பார்க்கும்போது, நாங்கள் ஒன்றாக செலவழித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. " என்று கூறியவர், சமீபத்தில் ஒரு உறவினர் தனக்காக கொழுக்கட்டை கொண்டு வந்து கொடுத்த போது 'அக்காவை' நினைவுபடுத்தியதால் அதை எடுத்துச் செல்லுமாறு கூறி விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா பில்டர் காபியை விரும்பி பருகியதால் அவர் எங்கு சென்றாலும் பில்டர், காப்பித்தூள் போன்றவற்றை எடுத்துச் சென்றதாகவும் அவர் எப்போது காபி வேண்டும் என்று சொல்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு பில்டர் காபி போட்டு கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தயாரிக்கப்படும் கேக்குகள் ஜெயலலிதாவுக்கு மிகவும் விருப்பம் என்ற போதும் வீட்டில் சமைத்த உணவையே அதிகம் விரும்புவார் என்று சசிகலா கூறியுள்ளார்.
குறிப்பாக தனது அண்ணி இளவரசியின் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இளவரசியும் சசிகலாவோடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசியின் கோவைக்காய் பொரியலும், தக்காளி ரசமும் தான் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்குமாம். செல்லப்பிராணிகள் என்றால் ஜெயலலிதாவுக்கு மிகவும் இஷ்டம். அவர் 13 நாய்களை வளர்த்து வந்தார் என்றும் அவற்றுள் ஜூலி என்று பெயரிடப்பட்ட நாய் தான் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
எப்போதும் ஜெயலலிதா உடனே இருந்த ஜூலி இறந்த அன்று பாஜக தலைவர் அத்வானியை சந்திக்க டெல்லிக்கு கிளம்பிய ஜெயலலிதா, அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பி ஜூலியை அடக்கம் செய்தார் என்றும் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வது பிடிக்கும் என்றும் கடற்கரையில் நீண்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள அவர் ஏங்கியதாகவும் சசிகலா கூறியுள்ளார்.
எனினும் ஒரு பிரபல அரசியல்வாதியாக அவரால் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க முடியவில்லை என்ற வருத்தம் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு மகாபலிபுரம் பிடிக்கும் என்றாலும் கொடநாடு எஸ்டேட் தான் அவருக்கு மிகவும் விருப்பமான ஓய்விடம் என்றும் தெரிவித்துள்ளார்.
அங்கு நீண்ட தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதும் படகு பயணம் செய்வதையும் அவர் விரும்புவார் என்றும் கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டின் பாதுகாவலர் கொலை செய்யப்பட்டது மற்றும் திருட்டு சம்பவம் பற்றி பேசிய அவர் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் விபத்துக்களில் இறந்தது பெரிய சதி என்றும் கடந்த அதிமுக அரசு அதை விசாரித்து தீர்வு கண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட நெருக்கமான நட்பிலும் விரிசல் விழுந்தது. இருமுறை சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 1996 ஜூனில் இருந்து 1997 ஏப்ரல் வரை வெளிநாட்டு பரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஜெயலலிதாவும் அதே வழக்கில் கைது செய்யப்பட்டு 45 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா குடும்பத்தை குற்றம் சாட்டி அவர்களை போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்ற உறுதி அளித்தார்.
"அக்கா என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்ததே இல்லை. கட்சியிலிருந்து நீக்கியதெல்லாம் வெளியுலகத்திற்காக போட்ட டிராமா தான்" என்ற சசிகலா, "சிறையில் இருந்தபோது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேட்டு அக்கா பதைபதைத்துப் போய் விட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவர் தொடர்ந்து மருத்துவர்களிடம் எனது உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். 100 நாட்களில் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவிடம் பொது மன்னிப்பு கேட்டுவிட்டு போயஸ் கார்டனுக்கு மீண்டும் திரும்பினார். அப்போது மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்தவர்கள் கட்சியில் தலையிட மாட்டார்கள் என்றும் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார். தான் தனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகியே இருக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
இதுவும் மக்களின் பார்வைக்காக நிகழ்த்தப்பட்ட நாடகமே என்று கூறும் சசிகலா ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தான் தி நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்ததாகவும் இது அனைத்தும் திட்டமிட்டே நடந்ததாகவும் கூறியுள்ளார். "ஒவ்வொரு நாளும் அவர் என்னை தொலைபேசியில் அழைப்பார். எட்டு மணிவாக்கில் தொடங்கும் எங்கள் உரையாடல் நடுநிசியில் தான் முடியும். அனைத்து அரசியல் விஷயங்களையும் என்னுடன் அலசுவார்" என்று கூறிய அவர் பொது மன்னிப்பு கேட்குமாறும் ஜெயலலிதாவே அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சோ ராமசாமி மற்றும் உளவுப்பிரிவு தலைமை காவல் அதிகாரி போன்றவர்கள் எனக்கும் அக்காவுக்கும் எதிராக அரசு அதிகாரிகளை திருப்பி விட்டதைக் கண்டுபிடிக்கவே" என்றும் கூறியுள்ளார். கடினமான நாட்களில் சிறு குழந்தையை போல் ஜெயலலிதா தன் மடியில் படுத்து ஓய்வெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக சசிகலா கூறியுள்ளார். பிரபல பத்திரிகையாளர் சிமி கரேவால் ஜெயலலிதாவை பேட்டி எடுத்தபோது சசிகலா எனது அம்மாவை போன்றவர் என்று கூறியதும் சட்டசபையிலும் கூட இருமுறை சசிகலா தனது உடன் பிறவா சகோதரி என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நெருக்கத்தால் மாநில மற்றும் தேசிய அரசியல் பற்றி ஜெயலலிதாவின் அருகிலிருந்து கவனித்து வந்த சசிகலா 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி வழக்கமான விதிமுறைகளை மீறி ஜெயலலிதாவுடன் உணவு அருந்தியதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எளிமையான சைவ உணவை உட்கொள்வதற்கு முன் மோடியும் ஜெயலலிதாவும் தனிமையில் உரையாடியதாகவும், வீட்டிலேயே பிரதமர் மோடிக்கு என்று பிரத்யேகமாக உணவு தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவின் மிகச் சிறந்த உணவு வகைகள் பிரதமருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியதாகவும், போயஸ்கார்டனில் உணவருந்திய மோடிக்கு அப்பம் மிகவும் பிடித்துப் போய் மீண்டும் மீண்டும் கேட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் ஜிஎஸ்டி மசோதாவை பற்றி உரையாடியதாகவும் ஜெயலலிதாவுக்கு ஜிஎஸ்டி மசோதாவை ஏற்படுத்துவதில் எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
மோடி மட்டுமல்லாது அத்வானி ராஜீவ்காந்தி என்று பல தேசிய தலைவர்கள் போயஸ் கார்டனுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்வானிக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை இருந்ததாகவும், ஆனால் மோடி ஜெயலலிதாவுக்கு நண்பராக இருந்ததாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிரிழந்த போது உடனே சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்திய மோடி தான் மனமுடைந்து போயிருந்ததை பற்றி அறிந்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரில் தனக்கு மிகவும் பிடித்தது மறைந்த பிரதமர் வாஜ்பாயை தான் என்று கூறியுள்ளார். 1980களின் தொடக்கத்தில் வாஜ்பாயின் உரைகளை ரேடியோவில் கேட்டதாகவும், அந்நாட்களில் தனது தந்தை மிகத் தீவிரமாக வாஜ்பாயின் உரைகளை கேட்கும் வழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிமுக வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவளித்த போதுதான் தான் முதல் முறையாக வாஜ்பாயை சந்தித்ததாக கூறிய சசிகலா பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை விலக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிடிவாதமாக இருந்த ஜெயலலிதா தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் ஆதரவை விலக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
முடிவை மாற்றிக் கொள்ளும்படி தான் எவ்வளவோ கெஞ்சியும், வாதாடியும், இறுதியில் சண்டை போட்டும் கூட ஜெயலலிதா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதேபோன்று 2003ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சுவாமிகள் கைது செய்யப்பட்ட போதும் தான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தியதாகவும் இதுகுறித்து அன்று இரவு முழுவதும் ஜெயலலிதாவுடன் சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"இது கட்சியின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் என்று நான் கூறினேன். அவரது காலில் கூட விழுந்தேன். ஆனால் அவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை. தவறு செய்தவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்" என்று அந்த சம்பவம் குறித்து சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்றும் தனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் பிரார்த்தனை செய்வதை எப்போதும் தவிர்த்ததில்லை என்றும் சசிகலா கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் காலை 45 நிமிடங்களுக்கு ஹனுமான் சாலிசா, சௌந்தர்ய லகரி போன்றவற்றை பாடும் வழக்கத்தை கொண்டிருந்ததாகவும், "மிகவும் ஆச்சாரமான தனது பாட்டியிடம் இருந்து அக்கா இந்த பழக்கத்தைக் கற்றுக் கொண்டார்" என்றும் கூறியுள்ளார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது எப்போதுமே தலையிலும் காலிலும் சிறிது நீர் தெளித்து கொண்டு பின்னர் வீட்டுக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவரது இஷ்ட தெய்வங்களான பெருமாள், வெங்கடாசலபதி மற்றும் முருகன் சிலைகளும் உதய் சாமான்களும் அடங்கிய பெட்டியை கூடவே எடுத்துச் சென்றதாகவும் தினமும் பூஜைக்காக மலர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் சசிகலா கூறியுள்ளார்.
"விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தபோதும் அவர் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு வந்தார். ராமனீயம், பாகவதம் ஆகியவற்றை அடிக்கடி வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து வரிகளையும் ஐபேடில் பதிந்து வைத்திருந்தேன். அவர் கேட்கும்படி அதை வாசித்துக் காட்டினேன்".
ஜெயலலிதாவின் இறுதி நாட்களை நினைவு வந்த சசிகலா செப்டம்பர் 22 2014 அன்று நடந்தது பற்றி கூறுகையில் "எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. நானும் அக்காவும் பெட்ரூமில் பேசிக் கொண்டிருந்தோம். கழிவறைக்கு சென்று திரும்பிய அக்கா மயக்கம் வருவது போல் இருப்பதாக கூறினார். அவரை நோக்கி நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று என்மேல் சரிந்து விட்டார். ஒரு கையில் அவரை தூக்கி பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் போனை எடுத்து மருத்துவரையும் பாதுகாவலர்களையும் அழைத்தேன்". எப்போதும் ஜெயலலிதாவின் கூப்பிடு தூரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வயர்லெஸ் போன் ஒன்றை தன்னுடனேயே வைத்திருந்ததாக சசிகலா கூறுகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்பியதாக கூறும் அவர், "அவர் நன்றாகத்தான் இருந்தார். மறுநாள் காவேரி நீர் பங்கீடு பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கடைசியில் எங்களுடைய பிரார்த்தனைகளால் அவரை காப்பாற்ற முடியவில்லை". ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"டிசம்பர் 4ஆம் தேதி அஞ்சு மாலை வரை அக்கா நன்றாகத்தான் இருந்தார். 19ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். அதன் பின்னர் கொட நாட்டுக்கு சென்று ஓய்வெடுக்க விரும்பினார். ஆனால் நான் போயஸ் கார்டனுக்கு சென்று சிலகாலம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் கொடநாடு செல்லலாம் என்று அறிவுறுத்தினேன். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் என்னை தனியாக விட்டுவிட்டு அவர் போய் சேர்ந்து விடுவார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என்று கூறி சசிகலா கண் கலங்கினார்.
டிசம்பர் 4 அன்று ஜெயலலிதா தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் சீரான இடைவெளியில் தவறாமல் உணவு உட்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக சசிகலா கூறுகிறார். எனவே மருத்துவமனை உணவு நிபுணர் மற்றும் போயஸ் கார்டன் சமையல்காரர் உடன் மருத்துவமனை சமயலறைக்கு சென்று ஒரு கப் ஃபில்டர் காப்பியும் இரண்டு டின்னர் பன்களும் தயாரித்துக் கொண்டு வரக் சென்றதாகக் கூறியுள்ளார்.
"பன்களின் மேல்புறம் கொஞ்சம் அதிகமாக சிவந்திருந்தால் தான் அக்காவுக்கு பிடிக்கும். எனவே நானே அதைத் தயாரிக்க சென்றேன்". அவற்றை எடுத்துக்கொண்டு ஜெயலலிதாவிடம் கொடுக்க சென்றபோது அவர் டிவியில் ஜெய் ஹனுமான் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அவரது தொடையில் வைத்திருந்த ரிமோட்டை எடுக்கச் சென்ற போது, "நான் காப்பியை அவரது கைகளில் கொடுக்கும் முன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அப்படியே சரிந்து விட்டார். அவரது படுக்கைக்கு அருகே நின்று கொண்டு அன்று கொடுக்க வேண்டிய மருந்துகளை குறித்துக் கொண்டிருந்த மருத்துவர், நான் 'அக்கா, அக்கா' என்று சத்தம் போடுவதை பார்த்து விட்டு ஓடிவந்தார். கண்களைத் திறக்க முடியாமல் எழுந்து உட்கார முடியாமல் சிரமப்பட்டார். அதன் பிறகுதான் அவரை உடனே ஐசியுவிற்கு எடுத்துச் சென்றார்கள்."என்று கூறி சசிகலா மீண்டும் கண் கலங்கினார்.
Source : The week https://www.theweek.in/theweek/cover/2021/07/08/my-life-with-jayalalithaa-v-k-sasikala.amp.html?__twitter_impression=true