2020 டாப் 10 இந்திய நிகழ்வுகள் தொகுப்பு!
2020 டாப் 10 இந்திய நிகழ்வுகள் தொகுப்பு!
By : Saffron Mom
2020 உலக அளவிலேயே பலரின் மனதிலும் ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. உலக அரசியலையும், பொருளாதாரத்தையும் பல நாடுகளுக்கு இடையிலான உறவையும் பலவிதங்களில் இந்த ஆண்டு புரட்டிப் போட்டது என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் இந்தியாவில் 2020இல் நடந்த முக்கியமான 10 நிகழ்வுகளை குறித்து இக்கட்டுரையில் நாம் அலசலாம்.
1. இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்திய வருகையுடன் கோலாகலமாக ஆரம்பித்தது. கொரானா வைரஸ் தொற்று சற்று ஆரம்பித்திருந்த அக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் வருகையுடன், அமெரிக்க உறவுகள் பலவிதத்தில் முன்னேற்றத்தைக் கண்டது. இந்த முன்னேற்றங்கள் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பிடெனின் காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1970களில் இருந்தே நெருக்கமான இந்திய அமெரிக்க உறவுகளுக்கு அவர் ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இந்திய-அமெரிக்க உறவுகள் பல்வேறு விதத்தில் வளர்ந்த நிலையில், இந்திய -சீன உறவுகள் மோசமடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்லையில் மோதல் ஏற்பட்டது. கிழக்கு லடாக்கில் ஊடுருவ முயற்சித்த சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தடுத்து நிறுத்தியதும், எல்லைப்பகுதிகளில் உள்கட்டமைப்பை இந்தியா வலிமைப்படுத்தியதும் சீனாவின் ஆக்ரோஷத்துக்கு காரணம் ஆனது. கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்களும், 40க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக யூகிக்கப்படுகிறது. 45 வருடங்களுக்குப் பிறகு எல்லையில் நடந்த இந்த மோதலுக்கு பிறகு பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து, பலவிதமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் அவைகளில் அந்த அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது.
3. ஜூலை மாதத்தில் இந்திய விமானப்படையில், பிரான்ஸ் நாட்டில் தயாரான ரபேல் போர் விமானங்கள் வந்து சேர்ந்தது. இந்தியாவும் பிரான்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு 5 ரபேல் விமானங்கள் ஜூலை 29ல் வந்து சேர்ந்தது. மொத்தம் 36 ரபேல் விமானங்களை 59 ஆயிரம் கோடிக்கு வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. இரண்டாவது பேட்ச் ரபேல் விமானங்கள் நவம்பரில் வந்து சேர்ந்தது. ரஷ்யாவிடமிருந்து சுக்கி ஜெட் விமானங்கள் வந்து சேர்ந்த 23 வருடங்களுக்குப் பிறகு ரபேல் விமானங்கள் தான் மிகப்பெரிய இறக்குமதி விமானங்கள் ஆகும். தெற்காசியாவின் பிராந்திய அரசியலில் ரபேல் விமானத்தின் ஈடுபாடு மிகப் பெரிய மாறுதலை அளிக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
4. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கியமான நிகழ்வாக அயோத்தியாவில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையை தெரிவிக்கலாம். கடந்த ஆண்டு பாபர் மசூதி இருக்கின்ற இடம், இந்துக்களுக்கு சொந்தமானது என்று வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு மகிழ, ராமர்கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் எல் கே அத்வானி, ஜோஷி, உமாபாரதி போன்ற தலைவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்த நிலையில், அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று காலத்தில் போராடிக் கொண்டிருந்த நிலையில், பிஹார் மாநிலம், மாநில தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி மறுபடியும் ஆட்சி அமைத்தது. இழுபறியாக வந்த தேர்தல் முடிவுகள் கடைசியாக ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாக அமைந்து. தன் பிரதான கூட்டணிக் கட்சியான JD(U) வை விட, பா.ஜ.க மிகப்பெரும் வெற்றியாளராக உருவெடுத்தது.
6. மார்ச் 2020 கொரானா வைரஸ் தொற்றுகளும், அதுதொடர்பான இறப்புகளும் மிக வேகமாக பரவ தொடங்கியது. உலகளாவிய பயணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சடாலென்று நிறுத்தப்பட்டது. ஒட்டு மொத்த உலகமும் ஊரடங்குகளை அறிவிக்கத் தொடங்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவு பொது இடங்கள் காலியாகின. வீட்டிற்குள் அடைந்து கிடந்து ஜன்னல் வழியாக தங்கள் வெளிப்புறங்களைப் பார்க்க வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்பட்டது. இந்திய அரசாங்கம் மார்ச் 25ஆம் தேதி 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்தது. இது உலக அளவில் மிகவும் தீவிரமான ஊரடங்குகளில் ஒன்றாகும்.
7. தமிழ்நாட்டில் தனியாக கட்சி தொடங்கி, சட்டமன்றத்தில் இடங்களை பிடித்து ஆட்சி அமைப்பேன் என்று தெரிவித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருதி தான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி கொள்வதாகவும் சமீபத்தில் அறிவித்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியும் தமிழக அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
8. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த பிப்ரவரி மாதத்தில், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் கலவரங்கள் நடத்தப்பட்டது. உலக மீடியாக்களின் கவனம் இந்தியாவின் பக்கம் இருந்த பொழுது, போராட்டம் என்கிற பெயரில் கலவரங்களை இஸ்லாமியவாதிகளும், இடத்துசாரிகளும் கட்டவிழ்த்து விட்டனர்.
9. பெங்களூரில், முகமது நபிகளை பற்றி தவறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரின் உறவினரான காங்கிரஸ் தலித் எம்எல்ஏவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு பல வாகனங்கள் தீக்கீரையாகப்பட்டன. பெங்களூருவில் கலவரம் போன்ற ஒரு சூழல் உருவானது. நடுஇரவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி போலீஸ் வாகனங்களை எரித்தனர்.
10. எஸ் பி பாலசுப்ரமணியம், சுஷாந்த் சிங் ராஜ்புத், ரிஷிகபூர், இர்பான் கான் உள்ளிட்ட மக்களின் மனம் கவர்ந்த பல திரையுலக பிரபலங்கள் மரணமடைந்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
Cover Image Courtesy: Indiatvnews.com