Kathir News
Begin typing your search above and press return to search.

30 நாட்களில் தமிழகத்தின் விடியல் எந்த நிலையில் உள்ளது? - ஓர் பார்வை!

30 நாட்களில் தமிழகத்தின் விடியல் எந்த நிலையில் உள்ளது? - ஓர் பார்வை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jun 2021 11:00 AM GMT

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சியில் அமர்ந்து இன்றுடன் 30 நாட்கள் முடிவடைகின்றன. இந்த 30 நாட்களில் தி.மு.க-வின் ஆக்கப்பூர்வ செயல்களும், செய்ய தவறியவையும் பற்றி பார்த்தால் பல விஷயங்கள் புலப்படுகின்றன. ஆட்சிக்கு வந்து 30 நாட்களில் ஓர் அரசை எடை போட முடியாது. ஆனால், எதிர்கட்சியாக இருந்த கடந்த காலத்தில் தி.மு.க அரசியல் செய்து வந்த காரணிகளை வைத்து பார்த்தால் 30 நாட்களில் நிறைய செய்திருக்கலாம்.

ஆனால், அப்படி ஏதும் நடந்தேறவில்லை, முன்பு எதிர்கட்சியாக நிறைய குறை கூறியதை போல் நிறைய மாற்றங்களை தி.மு.க கொண்டுவந்திருக்கலாம், சில வரலாற்று சிறப்புமிக்க தருணங்களை நிகழ்த்தியிருக்கலாம். அப்படி எவையெல்லாம் நடந்தேறின, எவை எல்லாம் தடுமாறின, எவை எல்லாம் தடம் மாறின என்று பார்க்கலாம்.

முதலில் ஓர் கட்சி ஆட்சியில் அமர்ந்த உடன் எதில் கவனம் செலுத்துகிறதோ இல்லையோ தன் வாக்குறுதிகளில்தான் முக்கிய கவனம் செலுத்தும், ஏனெனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதற்கு வாக்குறுதிகள்தான் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் தி.மு.க வாக்குறுதிகள் மலையளவு என்றால் நிறைவேற்றப்பட்டவை கடுகளவு.

நிறைவேற்றிய வாக்குறுதிகள் என பார்த்தால்:

1) அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ₹4000 கொரோனோ நிவார நிதி. (அதிலும் பாதி தொகை ₹2000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது)

2) ஆவின் விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு (இது பெயரளவில் அறிவிப்பாக வெளிவந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இதனை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் மக்களுக்கு இது சரியான அளவில் சென்றடையவில்லை. (குறிப்பாக ஓர் சம்பவம், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி நடந்தேறியது.

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் அரை லிட்டர் ஆவின் பால் (புல்கிரீம்) பழைய விலை ₹25.50 என்ற அச்சடிக்கப்பட்டதினை கருப்பு ஸ்டிக்கர் மூலம் திருத்தி,புதிய குறைக்கப்பட்ட விலைபட்டியல்படி ₹24 என 28.5.21 என்று தேதியுடன் அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால் விற்பனையாளர் ரூ.24-க்கு விற்காமல் ₹27-க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் 200 மிலி ஆவின் பால் எம்ஆர்பி ₹11 என இருந்தும் ₹13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிக விலைக்கு ஏன் பால் விற்பனை செய்கீறிர்கள் என வாடிக்கையாளர்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைத்திட குளிர்விப்பான் பயன்படுத்துவதால் அதற்கான மின்செலவை யார் கொடுப்பார் அதற்காகதான் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளர் கூறிவருகிறார் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கும் அளவிற்கு இருந்தது ஆவின் பால் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு)

3. சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.

4. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தை செயல்படுத்த புதிய குழுவை உருவாக்கியது.

5. திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா இலவச பயண சலுகை,

போன்ற முக்கிய 5 வாக்குறுதிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கையெழுத்திடப்பட்டு அமல்படுத்தப்பட்டன இந்த 30 நாட்களில். ஆனாலும் மக்களின் அன்றைய தேவையை பூர்த்தி செய்வதுதான் அரசின் கடமை அந்த வகையில் கொரோனோ ஊரடங்கு காலமாதலால் மகளிர், திருநங்கை, மாற்றுதிறனாளி ஆகியோருக்கு வழங்கிய இலவச பயண திட்டம் தற்பொழுது பயன்தரவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்து நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் 5 வாக்குறுதிகளை என பெருமை பொங்க கூறினாலும் அவற்றில் உள்ள உண்மையை ஆராய்ந்து பார்த்தோமானால் ஒரு வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.

மேலும் அத்தியாவசிய மற்றும் தற்கால தேவையாட முக்கிய வாக்குறுதிகளாகட்டும், தி.மு.க கையில் எடுத்து முக்கிய பிரச்சனையாக அரசியல் செய்த வாக்குறுதிகளாகட்டும் அனைத்துமே அப்படியே நிலுவையில் உள்ளது.

அவற்றில் சில:

1) அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5, டீசல் விலை லிட்டருக்கு ₹4 குறைக்கப்படும்.

2) சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ₹100 மானியமாக வழங்கப்படும்.

3) மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

4) நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

5) 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை ₹1500 ஆக உயர்த்தப்படும்.

6) 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.

7) நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.

8) ஏழை - எளிய, சிறு வணிகர்களுக்கு ₹15,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

9) கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

10) மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இப்படி மேற்கூறிய முக்கிய 10 வாக்குறுதிகளும் தி.மு.க-வால் தேர்தல் காலத்தில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டவையாகும், இது அனைத்துமே மக்கள் நேரடி பயன் பெறும் வாக்குறுதிகளாகும். இந்த கொரோனோ ஊரடங்கு போன்ற காலத்தில் இவைகளை அமல்படுத்தினால் பெருமளவில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரின் பணத்தட்டுப்பாடு சற்று நீங்கும். ஆனால், இவற்றில் எதையுமே தி.மு.க கடந்த 30 நாட்களில் செய்யவில்லை. இது எப்பொழுது அமல்படுத்தப்படும் என்ற தகவலும் முறையாக இல்லை.

அதிலும் குறிப்பாக 'நீட் தேர்வு குளறுபடி' என தம்பட்டம் அடித்து அதில் பெருமளவு அரசியல் செய்த தி.மு.க, கடந்து 30 நாட்களில் "நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்" என்ற நிலையுடன் முடித்துக்கொண்டது, ஆனால் தேர்தல் வாக்குறுதியில் "நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்" என ஜம்பமாக தெரிவித்து மக்களிடம் ஓட்டு வாங்கியுள்ளது. இப்படியாக வாக்குறுதிகளை வெறும் கண்துடைப்பாகவே தி.மு.க கடந்த 30 நாட்களாக செய்துள்ளது.

அடுத்தபடியாக கொரோனோ பேரிடர் கால செயல்பாடுகள். தேர்தல் நடைபெறும் காலத்திலேயே மத்திய அரசு இரண்டாம் அலைக்கு மாநில அரசுகள் தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் முன்னேற்பாடாக "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்" என பல விஷயங்களை கோடிகளை இறைத்து விளம்பரம் செய்த தி.மு.க கொரோனோ பேரிடர் கால செயல்பாட்டில் மட்டும் கோட்டை விட்டது. பதவி ஏற்றவுடன் அனைத்திலும் சிக்ஸர் அடிக்க துவங்கியதாக காட்டிக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் கொரோனோ விஷயத்தில் பந்தை எதிர்கொள்ள இயலாமல் தயங்கியதை பூசி மொழுகியது தி.மு.க.

ஊரடங்கு அறிவிப்பதில் குளறுபடி, ஊரடங்கை அமல்படுத்துவதில் குளறுபடி, தடுப்பூசி உலகளாவிய டெண்டர் விவகாரத்தில் அனைத்தும் அறிந்தது போல காட்டிக்கொண்டு சறுக்கியது, கொரோனோ நிவாரணம் வழங்குகிறேன் என்ற பெயரில் அனைத்து ரேசன் கடைகளையும் 'கொரோனோ ஹாட் ஸ்பாட்'டாக மாற்றியது என கொரோனோ விவகாரத்தில் பந்து ஒரு பக்கம் வரும்பொழுது பேட்டை மறுபக்கம் சுற்றி கொண்டிருந்தது தி.மு.க அரசு.

முதலில் ஊரடங்கே தீர்வு என்ற அனுபவ பாடத்தை உணராமல் ஒருபுறம் ஊரடங்கை அறிவித்து மறுபுறம் வியாபாரிகளுக்கு சலுகை கேட்கிறீர்களே என தளர்வு அறிவித்தது முதல் சறுக்கு. முதலில் ஊரடங்கை அறிவித்துவிட்டு பிறகு காலை 12 மணி வரை செயல்படலாம் என்ற அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டதில் துவங்கியது குளறுபடி விளைவு 30,000 புதிய தொற்றாளர்களுடன் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு.

பிறகு சுதாரித்துக்கொண்டு 'அய்யோ இது சரிபட்டு வராது என முழு ஊரடங்கை அறிவித்தது தி.மு.க அரசு, அதிலும் ஓர் குளறுபடியை செய்து ஊரடங்கை மதிப்பிழக்க செய்தது. 'அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துவிட்டு சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மட்டும் தளர்வு என அறிவித்துவிட்டு போக்குவரத்து, பெரிய நிறுவனங்கள் என அனைத்தையும் இயங்க செய்தது விடியல் அரசு. விளைவு ஒரு வார ஊரடங்கின் பயனை இரு தின தளர்வுக்கு விட்டு குடுத்தது. அந்த விளைவாகத்தான் நேற்றைய தினம் கூட தமிழகத்தில் 20,000 புதிய தொற்றாளர்கள் ஏற்பட காரணம். ஊரடங்கு அமல்படுத்தியும் இன்னும் குறைந்தபட்சம் 20,000 தொற்றாளர்கள் வர காரணம்.

இப்படி கொரோனோ விஷயத்தில் கொரோனோவை விட தீவிரமாக செயல்பட்டு இன்று இந்தியாவில் கொரோனோ தொற்றில் முதன்மை மாநிலம் என் பெருமையை தட்டி சென்றுள்ளார் சிக்ஸ்ர் முதல்வர். இன்னமும் தொற்று குறையாத நிலையில் தளர்வுகளை வேறு அறிவித்துள்ளார் முதல்வர். அதில் குறிப்பிடதக்க 'ஸ்பெஷல்' என்னவென்றால் முதல்வரோ, அமைச்சரோ, முதன்மை செயலாளரோ தளர்வுகள் பற்றி அறிவிக்கும் முன் வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா தளர்வுகளை பற்றி அறிவித்ததுதான் ஹைலைட். மக்கள் ஆட்சிதான் அதற்காக அறிவிப்பையும் மக்களே வெளியிடும் ஆட்சி என்றால் அந்த அந்த அவல நிலை தி.மு.க ஆட்சியில் மட்டுமே நடக்கும்.

இப்படியாக வாக்குறுதி, கொரோனோ பேரிடர் செயல்பாடுகளில் தி.மு.க அரசு நொண்டியடிக்க மறுபுறம் பத்து ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்து ஆட்சி வந்த ஏக்கத்தில் "நாங்கதான் இருக்கோம்ல்ல" என உடன்பிறப்புகள் களத்தில் தீயாக இறங்கியதுதான் தமிழகத்தின் விடியல் ஹைலைட்டே!

இங்கே சென்னையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என உறுதிமொழி ஏற்கும் சமயத்தில் தமிழகத்தின் தி.மு.க கரைவேட்டிகள் குதூகலிக்க துவங்கி விட்டன. அதன் விளைவாக கோவை கிணத்துக்கடவு பகுதியில் பார் உரிமையாளர்களிடம் ₹5,000 மாமூல் கேட்டு மிரட்டினார் கோவை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்தர்.


அடுத்து திருப்பத்தூர் தி.மு.க நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய திருமண மண்டபத்திற்கு ஜெனரேட்டர் வைக்க அருகிலுள்ள அறக்கட்டளை இடத்தை அபகரித்தது புகார் எழுந்தது வேலூர் மாவட்டத்தில்.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தி.மு.க பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் ஏகபோகமாக பட்டாசு வெடித்து அலப்பறை செய்ததில் நெடுச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்வி அடைந்ததால் ஊருக்குள் புகுந்த ஆசிக், நவாப், சாகுல் மற்றும் பலர் பெண்கள் இருக்கும் வீடாக பார்த்து பட்டாசை கொளுத்தி போட்டு விட்டு ஓடினர். இதில் பல பெண்களுள் படுகாயம் அடைந்தனர்.


இது மட்டுமில்லாமல் தி.மு.க பிரமுகர் ஒருவர் மதுபோதையில் அதிக மதுபாட்டில்களுடன் சென்ற போது பெண் எஸ்.ஐ மடக்கியதால் அவருக்கு உடனடி இடமாற்றம்.


அடுத்தபடியாக கிருஷ்ணகிரியில் உள்ள ரேஷன் கடையில் தேசிய கொடிக்கு பதில், தி.மு.க கொடியை வைத்து அராஜகம். இதற்கு அங்குள்ள பொது மக்கள் கேட்டதற்கு

"உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று பேசும் தி.மு.க ஆதரவு அரசு பணியாளரின் அராஜகம்.


அடுத்தபடியாக, திருப்பூர் தி.மு.க MLA "நான் போட்டோவுக்கு தோசை சுடுவதை போல போஸ் கொடுத்து பிறகு தான் மக்களை சாப்பிட விட விடும்" என்று அராஜகம் செய்ததில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.


இப்படி பல இடங்களில் ஆட்சியை பிடித்த களிப்பில் தி.மு.க-வினரின் அராஜகம் கொடி கட்டி பறந்தது. போதாக்குறைக்கு பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டிய அமைச்சர், ஸ்கேன் சென்டரில் அதிக விலை வைத்து மக்களின் வயிற்றில் அடித்த எம்.பி, கள்ளச்சாராயம் பதுக்கும் தி.மு.க பிரமுகர், தன் உறவினர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முன்னுரிமை குடுக்கும் தி.மு.க நிர்வாகி என தி.மு.க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-களின் அராஜகங்கள் வேறு "இதற்கு கொரோனோ'வே தேவலாம்" என நினைக்க வைத்துள்ளது.

இப்படியாக 30 நாட்கள் தி.மு.க ஆட்சியில் 30 ஆண்டுகள் அனுபவத்தை தமிழக மக்கள் பெற்றுவிட்டனர். ஆனால் இன்னமும் தி.மு.க ஆட்சியில் சிக்ஸர்கள் பறக்கின்றன என்ற விளம்பரம் மட்டும் குறையவே இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News