Kathir News
Begin typing your search above and press return to search.

5 ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்துக்கு அப்படி என்ன தான் செய்து விட்டது.? ஓர் அலசல் !

5 ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்துக்கு அப்படி என்ன தான் செய்து விட்டது.? ஓர் அலசல் !

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  2021-04-04T07:00:37+05:30

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். வெகுகாலமாக இயற்கை வளம் மட்டுமல்லாமல் அறிவு வளமும் நிறைந்த நமது பாரத தேசம் பல தேவைகளுக்காக பிற நாடுகளை அண்டி இருக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் 60 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்தியாவை நேரு குடும்பத்தினரின் குடும்பச் சொத்தாகத் தான் நடத்தியது என்று கூறினால் அது மிகை ஆகாது. இந்திரா காந்தி தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொள்ளாது கச்சத்தீவை தாரை வார்த்ததே இதற்கு சிறந்த உதாரணம்.

ஆனால் இப்போது "உலகின் மருந்தகம் நீங்கள்" என்று சர்வதேச அமைப்புகளும் வளர்ந்த நாடுகளுமே கூட பாராட்டும் நிலையை அடைந்திருக்கிறோம் நாம். இந்தியாவால் ஒன்றும் முடியாது என்று எண்ணியவர்களின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் நமது அறிவாற்றலை பயன்படுத்தி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறோம்.

இந்த நற்செயல்கள் எல்லாம் நடந்தது யாருடைய ஆட்சிக்காலத்தில்? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தான். இதுபோல் இன்னும் என்னென்ன நன்மைகள் எல்லாம் இந்த ஆட்சிக்காலத்தில் நடந்தன? இந்த ஆட்சி ஏன் மீண்டும் வரவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்.

சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்து மனிதனின் அத்தியாவசிய தேவை குடிநீர். சுதந்திரத்துக்கு பின்னும் பெரும்பாலான மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் எட்டாக்கனியாகவே இருந்தது. கடந்த 7 ஆண்டுகளில் அனைவருக்கும் இந்த அடிப்படை தேவை கிடைப்பதை ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மோடி அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 14.39 லட்சம் வீடுகளுக்கு தினமும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறது. 2020-21 நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.930 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர் இருந்தாலும் உணவு இல்லை என்றால் மனிதன் உயிர் வாழ முடியாது. கொரோனோ பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வாழ்வாதாரம் முடங்கிப் போனதால் பசி பட்டினியில் மக்கள் தவிக்க கூடாது என்று மோடி அரசின் கரீப் கல்யாண் அன்ன‌ யோஜனா திட்டத்தின் கீழ் 46.77 லட்சம் டன் அரிசியும் 2.75 லட்சம் டன் கோதுமையும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்துக்குத் தான் கிடைத்தது. தமிழக மக்கள் மீது மோடி அரசு எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

நீரும், உணவும் இருந்தாலும் ஒரு மனிதன் கௌரவமாக வாழ குடியிருக்க வீடு அவசியம். இதை உணர்ந்த பிரதமர் மோடி சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைவருக்கும் வீடில்லை என்ற நிலையை மாற்ற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவைக் கொண்டு வந்தார். இது வரை தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதில் கிராமப்புறத்தில் வீட்டு வசதி ஏற்படுத்தித் தரும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழக கிராமங்களில் 5.6 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழக குடிசை மாற்று வாரியத்துடன் இணைந்தும் தனிப்பட்ட முறையில் ரூ.2.75 லட்சம் நிதியுதவி வழங்கியும் வீடு கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவை வந்த பிரதமர் ரூ.330 கோடி செலவில் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் கட்டப்பட்ட 5000 வீடுகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

வேலையில்லாத் திண்டாட்டம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில், அதற்கு தீர்வு காண சுயவேலைவாய்ப்புக்காகவும் இளைஞர்களை தற்சார்பு உள்ளவர்களாக மாற்றவும் தனித்துவமான முத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் மோடி அரசு தான். இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிட்டத்தட்ட ரூ.1,26,500 கோடி ரூபாய்‌ நிதி வழங்கப்பட்டுள்ளது.

இது போக வசதி வாய்ப்பற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7 லட்சம் தமிழக குடும்பங்கள் பயன்பெறும். இப்படிபட்ட அடிப்படைத் தேவைகள் நீங்கலாக இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஸ்கில் இந்தியா திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் கிசான் திட்டம், இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளின் உற்பத்திக்கு சரியான லாபம் கிடைக்காமல் போவதை தடுக்க சட்ட திருத்தங்கள், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை ஆபத்துகளால் ஏற்படும் இழப்புகளை சரிக்கட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தி அவை சரியாக பயனாளர்களை சென்று சேர்வதை உறுதிப்படுத்த நேரடியாக அவர்களது வங்கி கணக்கிலேயே உதவி தொகையை வரவு வைக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியது இந்த ஆட்சி காலத்தில் தான்.

மத்தியில் உள்ள மோடி அரசு 2019-20ஆம் நிதியாண்டில் ஒதுக்கிய ரூ.2635 கோடியைப்‌ பயன்படுத்தி தமிழகத்தில் 2.63 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நுண்ணீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. 'Per drop More crop' என்ற இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 5.62 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவை வந்த போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் கீழ்பவானி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் மேலும் 80,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெற உள்ளன.


சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ₹2873 கோடி செலவில் 167 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. மேலும் ₹12,986 கோடி மதிப்புள்ள 310 திட்டங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு ₹490 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு மொழியும் கலாச்சாரமும் பண்பாடும் உயிரினும் மேலானவை. இவற்றை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் சிறப்பை உலகமே அறிய செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரதமர் திருக்குறளையும் ஔவையாரையும் மேற்கோள்காட்டி பேசுவதும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டை மீண்டும் பிரச்சனையின்றி நடத்திட ஆவண செய்ததும் இந்த ஆட்சிக் காலத்தில்தான் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும்.


இவ்வளவு நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வரும் இந்த ஆட்சியை நடத்தி வருவது யார்? சர்வதேச அமைப்புகளும் தலைவர்களும் பாராட்டும் பிரதமர் மோடி தான். வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்தியாவையும் தமிழகத்தையும் பீறுநடை போடச்செய்து இருக்கும் இந்த பாஜக- அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி தொடர்வது உறுதி! மக்கள் செழிப்பான வாழ்வு வாழ்வதும் உறுதி!

Next Story