8.20 சதவிகித வளர்ச்சியை கண்ட இந்திய பொருளாதாரம்.... குவியும் பாராட்டுகள்!
By : Sushmitha
எதிர்பாராத உச்சத்தை பெற்ற ஜி.டி.பி:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவிப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 2023 - 2024 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது 7.80 சதவிகிதமாக இருந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 8.20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்புத் துறையின் சிறப்பான செயல்பாடு:
முன்னதாக 2022 - 2023 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7% இருந்தது. ஆனால் தற்போது இந்த வளர்ச்சி 8.20% ஆக அதிகரித்திருப்பது இந்திய பொருளாதர வளர்ச்சியின் சாதனையை காண்பிக்கிறது. மேலும் இந்த வளர்ச்சிக்கு தயாரிப்புத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, மதிப்பின் அடிப்படையில் ரூபாய் 47.24 லட்சம் கோடி நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, நான்காம் காலாண்டிலும்; ரூபாய் 173.82 லட்சம் கோடி ஒட்டுமொத்த நிதியாண்டிலும் இருந்துள்ளது என இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல பொருளாதார நிபுணர்களும், தொழில் நிறுவன தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது வெறும் டிரெய்லர் தான்:
இந்த மகிழ்ச்சியான செய்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்துள்ளது. இதற்காக தனது கடின உழைப்பை செலுத்திய நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தியா இதன் மூலம் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்கிறது. அதுமட்டுமின்றி நான் ஏற்கனவே கூறியது போன்று இது வெறும் டிரெய்லர் தான் என்று கூறியுள்ளார்.
வளர்ச்சி பயணம் தொடரும்:
இன்றைய ஜி.டி.பி., தரவு 2023-24 நிதியாண்டில் 8.2% மற்றும் நிதியாண்டு 2023-24 இன் Q4 இல் 7.8% வளர்ச்சி விகிதத்துடன் வலுவான பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த குறிப்பிடத்தக்க (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் உலகின் முக்கிய பொருளாதாரங்களில் மிக அதிகமாக உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறை 9.9% கணிசமான வளர்ச்சியைக் கண்டது, இந்தத் துறைக்கான மோடி அரசாங்கத்தின் முயற்சிகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என்பது கவனிக்கத்தக்கது என எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.
நிதிக்குழு தலைவர்களின் வாழ்த்துக்கள்:
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 8.20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இந்தியாவிற்கு சிறப்பான செய்தி என்று பதினாறாவது நிதி குழு தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். மேலும், வாழ்த்துக்கள் இந்தியா. அனைத்து கருத்துக்கணிப்புகளையும் கடந்து 8.20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து, அனைத்து பெரிய பொருளாதாரங்களையும் மிஞ்சி உள்ளது என நிதி அயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
அதோடு, தயாரிப்புத் துறையில் சிறப்பான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதாரம் அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டிலும் தயாரிப்புத்துறைகளின் செயல்பாடுகள் அவ்வாறே தொடரும் என்று எதிர்பார்க்கலாம் என அசோசொம் பொதுச் செயலாளர் தீபக் சூட் கூறியுள்ளார்.