ஆப்கானிஸ்தான்: 48 மணிநேரத்திற்குள் தூதரக பணியாளர்களை வெளியேற்றும் இந்தியா ?
காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்திய வணிக விமானங்கள் இன்னும் தொடர்கின்றன
By : Saffron Mom
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான படைகள் தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மறுபடியும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நிலைமையில் உள்ளன. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஊழியர்களையும் தூதரக பணியாளர்களையும் வெளியேற்ற இந்தியா தயாராக உள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. .
காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்திய வணிக விமானங்கள் இன்னும் தொடர்கின்றன. எனினும், இது நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. அமெரிக்கா முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு முன், இந்தியா தனது பணியாளர்கள் மற்றும் குடிமக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர் எப்போதும் தலிபான்களின் துப்பாக்கி முனையில் இருந்தனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கூட, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது, அவர்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலிலேயோ உள்ளது.
மார்ச் 2001 இல் தாலிபான் தலைவர் முல்லா முகமது உமர், பாமியனில் உள்ள ஆறாம் நூற்றாண்டு பழமையான புத்தர் சிலைகளை வெடிக்க வைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் தலிபான், சிலை வழிபாட்டிற்கு எதிரானது, ஷரியாவை மறுக்கும் எவரையோ அல்லது இஸ்லாம் தவிர வேறு எந்த மதம், நடைமுறையை பின்பற்றுபவரையோ விடாது என தெளிவுபடுத்தியது. . கடந்த வாரம், தலிபான்கள் சீக்கிய மதக் கொடியை - நிஷான் சாஹிப் - குருத்வாரா தல சாஹிப்பின் கூரையிலிருந்து அகற்றினர். பின்னர், இந்தியா இந்தச் செயலைக் கண்டித்தபோது, ஆகஸ்ட் 6 அன்று அது மீட்டெடுக்கப்பட்டது.
கடந்த மாதத்தில் நடந்த இந்த நிகழ்வுகள், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இந்தியாவை நோக்கி தலிபான்கள் ஆக்ரோஷமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஆகஸ்ட் மாதத்திற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் தலிபான்களின் ராணுவ தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா தலிபான்களின் தாக்குதலுக்கு இலக்காகக் கருதப்படுவதால், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரும்.
தலிபான் படைகள் ஏற்கனவே நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு போஸ்ட்களை கைப்பற்றியதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. காபூலை தலிபான்கள் கைப்பற்றும் வேகம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளும் தங்கள் பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன, மேலும் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் நகர்த்தத் தொடங்கியுள்ளன.
Cover Image Courtesy: Wikipedia