Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : பல்லாண்டுகளாக உயிர்பலி வாங்கும் ஆப்கானிஸ்தான் போர்கள்!

சிறப்பு கட்டுரை : பல்லாண்டுகளாக உயிர்பலி வாங்கும் ஆப்கானிஸ்தான் போர்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  17 July 2021 7:43 AM GMT

ஆப்கானிஸ்தானில் பல்லாண்டுகளாக நடந்து வரும் போர்களும், அதன் விளைவாக நடக்கும் வன்முறை சுழற்சியும் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கி விட்டது. உயிரிழப்பு மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக நடக்கும் யுத்தம் பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்களில் இருபுறத்திலும் இல்லாத பொது மக்கள் துப்பாக்கி சூடுகள், கன்னி வெடிகள், படுகொலைகள், குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். 2001 ல் இருந்து ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட 241,000 பேரில் 71,000 க்கும் அதிகமானோர் பொதுமக்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தான் குடிமக்களும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்களால் மேலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு குடிமக்களின் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்காதது போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவலாக உள்ளது.

தொடர்ச்சியான போர் ஆப்கானிய குடிமக்களின் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மன ரீதியிலான காயங்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூன்றில் இரண்டு பங்கு ஆப்கானியர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகிறது. அந்த நாட்டை காப்பாற்றும் அளவுக்கு ஆயுதங்கள் இல்லாத ஆப்கானிய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளிடம் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்கிறது. தலிபான் கிளர்ச்சியாளர்கள் முன்னேறுவதைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஆப்கான் அரசாங்கத்திடம் உள்ளது. அதே சமயத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானின் சாமானிய மக்களுக்கான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் போருக்கு தலைமை தாங்கிய அமெரிக்க தளபதி ஆஸ்டின் மில்லர், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, தலிபானுக்கும் ஆப்கான் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான சண்டை நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் உள்ளது. வன்முறை அதிகரித்து வருவதால் பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. அரசாங்கப் படைகள் தொடர்ந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டு தலிபான்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றது.

ஆப்கானிஸ்தான் போரின் உண்மையான தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. பல பகுதிகளில் ஆப்கானிய மக்கள், குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் கமிஷனர் கூறுகையில், ஜனவரி முதல் 2,70,000 ஆப்கானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு நாட்டிற்குள்ளேயே புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று கூறினார். வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த மொத்த மக்கள் தொகையை இது 3.5 மில்லியனுக்கும் (35 லட்சம்) அதிகமாக கொண்டு வந்துள்ளது.

குண்டுஸ் மாகாணத்தில், தலிபான் மற்றும் அரசாங்கப் படைகள் தலைநகரின் தெற்கு எல்லைகளைக் கைப்பற்ற போராடியதால் 12,000 க்கும் மேற்பட்ட ஆப்கானிய குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன. குண்டுஸ் நகரில் கூடாரங்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களுக்கு உணவு மற்றும் பிற நிவாரணங்கள் தேவைப்படுவதாகக் கூறினர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் செவ்வாயன்று கூறுகையில், நாட்டில் தீவிர சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும், அமைதிக்கான வாய்ப்புகளை வீணாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News