அரவிந்தன் நீலகண்டனின் கதிர் பக்கங்கள் - பகுதி 1!
அரவிந்தன் நீலகண்டனின் கதிர் பக்கங்கள் - பகுதி 1!
எதைத் தொடங்கினாலும் விநாயகப் பெருமானை நினைந்து தொடங்க வேண்டும். அப்படியே இதையும்.
என் தந்தையார் அண்மையில் சிவபதம் அடைந்தார். தமிழ் பேராசிரியர். அவர் குறித்த சிறுவயது நினைவொன்று உண்டு.
தினமும் வீட்டில் காலையில் ‘கைத்தலம் நிறைகனி’ சொல்வதுண்டு. அதில் ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்…’ என வரும் வரியில் எனக்கு ஐயம் வந்தது. வியாசர் சொல்ல சொல்ல, மகாபாரதத்தை வடமொழியில் அல்லவா எழுதினார் பிள்ளையார்? ஆனால் இங்கே அருணகிரிநாத சுவாமிகள் முத்தமிழ் என்கிறாரே!
அப்பா விளக்கினார். அப்போது எனக்கு சிறுவயது. ஆனாலும் ரொம்ப விளக்கமாக சொன்னார்.
முத்தமிழின் அடைவு என்கிறார் அருணகிரிநாதர். முத்தமிழால் அடையப்படுவது எதுவோ அதைத்தான் மகாபாரதம் விளக்குகிறது. மகாபாரதம் விளக்குவது எதை? அறத்தை. தர்மத்தை. முத்தமிழினால் அடையப்படுவதும் எது? அறம்தான். தர்மம்தான். எனவே எந்த மொழி என மேலோட்டமாக பார்க்காமல் அதன் உள்ளே இருப்பது என்ன என்பதை பார்க்க வேண்டும். இதைத்தான் பாரதி செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்றார்.
இந்த தேசத்தின் ஆன்மநேய ஒருமைப்பாட்டை அருணகிரிநாத சுவாமி தன் பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை பொறுமையாக விளக்கினார் என் தந்தை.
மொழி என்பது நம் பாரத பண்பாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவது அல்ல. அப்படி ஆனது காலனிய ஆட்சியாலும் மிஷினரி சூழ்ச்சியாலும். அதில் மதி மயங்கி விழுந்த நம்மவர் தடுமாற்றத்தாலும்.
உலகப் பொதுமறை என்று திருக்குறளை சொன்னதும் விழுந்துவிடுகிறோம். உடனே அதன் அனைத்து ஹிந்து தன்மையையும் நம்மால் முடிந்தவரை நீர்த்து போக வைத்து அதனை உயர்த்துகிறோம்.
தேவையில்லை.
திருக்குறள் உலக பொதுமறைதான். நிச்சயமாக. ஆனால் அது மதச்சார்பற்றது இருப்பதால் அல்ல. என்றும் வாழும் அறத்தை சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால்.
இதோ ஒரு ஆதாரம்.
ஒரு கிறிஸ்தவரிடம் சுவர்க்கம் போக வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டுமென்பார்?
நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கம் போகலாமா? அது போதுமா?
இல்லையப்பா. ஏசுவை நம்ப வேண்டும். அவரை ரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அப்போது மட்டுமே நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள்.
உலகத்தில் நல்லவனாக வாழ்ந்தால் போதாதா? போதாது.
அப்படியே இஸ்லாமியரிடம் கேட்போம்.
ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால், அவன் அல்லாவையும் அவரது தூதரையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சுவனத்தை அடைய முடியுமா?
தெளிவாக பதில் வரும். நிச்சயம் முடியாது. அல்லாவை ஏற்றுக்கொண்டு அவரது தூதர் என சொன்னவரையும் ஏற்றுக்கொண்டால்தான் சுவனம் போக முடியும்.
சரி அப்படியே அருணகிரிநாதரிடம் கேட்போம்.
அவர் சொல்கிறார்:
தடுங்கோள் மனதை
விடுங்கோள் வெகுளியை
தானம் என்றும் இடுங்கோள்
இருந்தபடி இருங்கோள்
இவ்வாறு இருந்தால் போதுமாம்.
ஏழுலகும் உய்ய வேல்விடும் கோன் அருள்வந்து தானே வெளிப்படுமாம். கந்தர் அலங்காரத்தின் 16 ஆவது பாடல்.
2001 இல் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அங்கு இடிபாடுகளில் மக்களை காப்பாற்றியும் பிணங்களை அகற்றியும் வேலை செய்த நியூயார்க் தீயணைப்பு துறையைச் சார்ந்த ஒரு அலுவலருக்கு இப்பணி பெரும் மன அழுத்தத்தை அளித்தது. அவருக்கு இறை நம்பிக்கை கிடையாது. யாரோ அவரிடம் மாதா அமிர்தானந்த மயி குறித்து சொல்லியிருக்கிறார்கள். ஒரு குரு. அவ்வளவுதான். எதற்கும் போய் பார்க்கலாம். மன இறுக்கம் தளருமா பார்க்கலாம். வந்து பார்க்கிறார். அன்னை அவரை அரவணைக்கிறார். அவருக்கு மன இறுக்கம் தளர்கிறது. ஏதோ உள்ளே பலம் வந்தது போல இருக்கிறது. அவர் அம்மாவிடம் கேட்கிறார். மன நிம்மதிக்கு இறை நம்பிக்கை அவசியமா? எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. அம்மா சொல்கிறார் மகனே நல்லவனாக இருப்பதுதான் அவசியம். அதுதான் முக்கியம். பிறருக்கு நன்மை செய்வதும் தீமை செய்யாமல் இருப்பதும் இயன்ற அளவு பிறருக்கு உதவுவதும் தான் முக்கியம்.
இது ஹிந்து ஞானம். வாழையடி வாழையாக ஹிந்துக்களுக்கு உடன் வரும் ஞானம். மதம் ஏதானாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் என்றார் ஸ்ரீ நாராயண குரு.
இப்போது திருக்குறளுக்கு வருவோம்.
மனிதன் நல்லுலகம் அடைய என்ன செய்ய வேண்டும்?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
மறுமைப்பயனாக அவன் தேவருள் ஒருவனாக வாழ்வான் என்பதும் இம்மைப் பயனாக அவன் மானுடனே எனினும் தேவருக்கு ஒப்பானவனாக மதிக்கப்படுவான் என்பதும் மரபான உரை.
யாரையும் நம்பு என்றோ, இணை வைக்காதே என்றோ, இன்னாரது ரத்தத்தாலே என்றோ சொல்லவில்லை. நல்லவனாக வாழு அது போதும் என்பது வள்ளுவர் வாக்கு.
இது யாருக்கு ஏற்புடையது? இந்துவுக்கு. உண்மையில் இதை ஏற்றுக்கொள்ளுகிற எவரும் மத மாற்றத்தை முழுநேர போர்த்தொழிலாக செய்யமாட்டார்கள். அப்படி செய்கிறவர்கள் திருவள்ளுவர் சொல்வதை ஏற்கவில்லை என்று பொருள்.
எதற்கு இது என்றால், நம் மொழிப்பற்றைத் தூண்டி நம் மொழியில் அருளாளர்கள் அருளிய அற உச்சங்களிலிருந்து நம்மை வீழச் செய்துவிட்டார்கள்.
யார்? திராவிடர்கள். வெற்று மொழிப் பற்றாளர்கள்.
தமிழ் என்று சொன்னாலே அது அருட் தமிழ்தான். அது தெய்வீக தமிழ்தான். அது வேதத்தமிழ்தான்.
உடனே வெற்றுத்தமிழ் பற்றாளர்கள் ஒன்றை ஆரம்பிப்பார்கள். அப்போது தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாதா? தமிழ் என்பது வெறுமே பேசப்படக் கூடிய ஒரு மொழி என குறுக்கி அதனை கொண்டு அரசியல் செய்வதால் ஏற்படும் கொடுமை இது.
தமிழ் என்பது என்ன?
சைவ சித்தாந்த பேரறிஞர் சிவத்திரு. சபாரத்தினம் ஐயா அவர்கள் இதனை பின்வருமாறு விளக்குகிறார்கள்:
காரண காரியங்களால் நன்கு உறுதி செய்யப்பட்டதும் உன்னதமானதும் தனக்கு இணையாகவோ தன்னினும் மேம்பட்டதாகவோ வேறொன்றும் இல்லாததும் ஆன, அனைத்துக்கும் அதீதமான பரமநிலை அல்லது பரமத்தானம். …
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே.
எனவரும் வரிகளில், திருமூலர் தமிழ் என்னும் சொல்லை எத்தகைய பொருள்பட ஆண்டிருக்கிறார் என்பதை மெய்ந்நெறி நின்று நன்கு சிந்திக்கவேண்டும். தமிழ் என்பது இங்கு மொழியைக் குறிக்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள உன்னதமான பரம முடிபு நிலையை உறுதியாக அடைவதற்குரிய நாத அதீதமான ஹம்ஸயோக நெறி என்பதுதான் தமிழ் என்னும் சொல்லால் இங்கே உணர்த்தப்படுகிறது. காலாங்கி நாதர் ‘நாதாதீதத் தமிழின் நாதம் கேட்டேன் நன்றாய்’ எனப்பாடுகின்றார். காலாங்கி நாதர் என்னும் சித்தர் பெருமானால் இங்கே தமிழ் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அதிசூக்குமமான பரைவாக்கு. ‘முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே’ எனவரும் திருப்புகழ் அடியிலும் முத்தமிழ் என்பது தமிழ் மொழியைக் குறிக்காமல் நாத அதீதமான நுண்ணொலி அனுபவத்தையே குறிக்கின்றது. மொழி என்னும் எல்லைக்கு அப்பாற்சென்று, ஞான யோகானுபவ ரீதியாக மெய்ப்பொருளை உணர்ந்து பயன்பெறும் வகையில் சைவநெறிச் சீலர்கள் சிந்தனைப் பயிற்சியையும் வழிபாட்டுப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
இதை சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது என்றால், அண்மையில் ஒரு பிரச்சார காணொளி சுற்றுகிறது. அதில் திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்து விரோத இனவாத பரம்பரை கட்சியின் தலைவரான ஸ்டாலின் என்பவர், ஒவ்வொரு தெய்வ திருப்பெயரையும் சொல்லி அந்தந்த தெய்வங்களுக்கான போற்றி நூல்கள் என தமிழ்வழிபாட்டு நூல்களை வெளியிட்டவர் அவருடைய தகப்பனாரும் அந்த குடும்ப கட்சியின் முந்தைய தலைவரும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிற தொழிலில் இருந்தவருமான மு.கருணாநிதி என்பவர் என்று சொல்லுகிறார்.
இந்த மு.கருணாநிதி என்பவர்தாம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்கிற மூன்றாந்தர உளறல் நூலுக்கு முகவுரை எழுதிய மு.க ஆசாமி என்பதை இந்துக்கள் இங்கு மறந்துவிடலாகாது.
அது மட்டுமல்ல மொழிபேத போக்குகளுக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்கும் நாம் நம் திருக்கோவில் ஆராதனைகளிலும் சடங்குகளிலும் இடம் கொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் இந்த திமுக ஆட்சி காட்டியேயுள்ளது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தமிழில் அர்ச்சனை என்பதை அவரது கட்சியின் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன் என்பவர் மூலம் அமுல் படுத்தினார். சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலி இந்த அர்ச்சனைகள் செய்யப்பட்ட போது பக்தர்கள் அதிர்ச்சியும் அளவு கடந்த வேதனையும் அடைந்தனர். என்ன கொடுமை! கருணாநிதியையும் அமைச்சர் தமிழ்குடிமகனையும் மறைமுகமாக புகழும் வரிகள் இறைவனுக்கான அர்ச்சனை என்கிற பெயரில் சேர்க்கப்பட்டிருந்தன. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதன் விளைவாக கருணாநிதி கூட்டம் தங்கள் ஆணவம் நிறைந்த ஹிந்து விரோத சிவத்துரோக செயல்பாட்டிலிருந்து பின்வாங்க நேர்ந்தது.
இப்போது அதே கருணாநிதியின் மகனும் குடும்ப கட்சியின் தலைமைக்கு வந்துள்ளவருமான ஸ்டாலின், அவரது தந்தையின் இந்த இரணிய ஆணவ சிவத்துரோக செயலைத்தான் இப்போது நினைவுபடுத்துகிறார்.
ஆனால் அரசியலுக்கு அப்பால் இதில் பாடம் இருக்கிறது. சிவ வழிபாட்டை எத்தனையோ படையெடுப்புகளுக்கும் படுகொலைகளுக்கும் அப்பால் ஒப்பற்ற தியாகங்களால் காப்பாற்றி நமக்கு அளித்த நம் முன்னோர் இந்த வழிபாட்டு முறைகளையும் செம்மையாக்கி நமக்கு அளித்துள்ளார்கள்.
அவர்கள் ராக துவேஷங்களுக்கு அப்பால் நின்றொழுகும் அருளாளர்கள். அவர்கள் தமிழை வெறும் மொழியாக மொழி என்னும் வரையறையில் அடைக்கவில்லை. வடமொழியும் அதன் இதய கதியில் அதன் ஆன்மநேய ஒருமையுணர்வில் தமிழே என்பதை அறிந்தவர்கள். எனவே அவர்கள் உருவாக்கி அளித்த அப்பெரும் அருட்பிரசாதத்தை நம் அரசியல் சார்ந்த மொழிப் பற்று என்கிற குறுகிய அளவுகோலால் அளத்தல் என்பது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானது மட்டுமல்ல நன்றியற்ற செயல்.
சிவஸ்ரீ வாமதேவ சிவாச்சாரிய சபாரத்தினம் அவர்கள் சொல்லுகிறார்கள்:
சைவநெறி சீலர்க்கு இறைவன் அளித்துள்ள பெருங்கொடை சித்தாந்த நெறி என்பது. இந்த உயர்ந்த நெறியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் முதலில் மொழி தொடர்பான பேத உணர்வுகளை அறவே விலக்கி விட வேண்டும். மொழி தொடர்பான பேதம் மட்டுமன்று எந்தவிதமான பேத உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் இருத்தலே மிக மிக நன்று.
இதை நாம் உணராவிட்டால் அரசியல் சார்ந்த மொழிப்பற்று உண்மையில் தமிழின் தெய்வீகத்தன்மையைதான் முதலில் அழிக்கும். அப்படி தெய்வீகம் அழிந்த தமிழ் மொழி பின்னர் அரசியல்வாதிகளின் நாடக வசை தமிழாக மட்டுமே இருக்கும். பிறகு நம் தெய்வங்களுக்கான அர்ச்சனைகளில் கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல உதயநிதி ஸ்டாலினின் பெயர்கள் புகுத்தப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.