Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வாதிகார நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் பலனளிக்கிறதா? ஓர் அலசல்! #Myanmar

சர்வாதிகார நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் பலனளிக்கிறதா? ஓர் அலசல்! #Myanmar

Saffron MomBy : Saffron Mom

  |  6 March 2021 1:15 AM GMT

சமீபத்தில் மியான்மரில் ஆங் சாங் சூகி தலைமையில் நடந்து கொண்டிருந்த ஜனநாயக ஆட்சி, அந்நாட்டு ராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்டது. இது உலகெங்கிலுமிருந்து ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் ஈர்த்தது. பல உலக நாடுகள், 'இது ஜனநாயகத்திற்கு விழுந்த கடுமையான அடி' என்று கூறுகின்றனர்.

மியான்மர் தற்பொழுது அதன் ராணுவ தளபதி மிங் ஆங் ஹெலிங்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்களின் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருட காலத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் நீண்டகால கொள்கைக்கு இணங்க, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மியான்மர் மீது பொருளாதார தடைகளை விதிப்போம் என அச்சுறுத்தி உள்ளார்.

2011இல் மியான்மரில் ஜனநாயக ஆட்சி ஆரம்பித்த பொழுது, ஒபாமா அரசாங்கத்தால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டன. மியான்மர், பொருளாதாரத்தடைகளினால் தான் ஒரு ஜனநாயக ஆட்சியாக மாறியது என்பது ஒரு வெற்றிகரமான கதையாக கூறப்படுகிறது.

ஆனால் மியான்மர் அல்லது மற்ற பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளை நாம் கூர்ந்து கவனித்தோமானால் நாம் எதிர்பார்த்த விளைவுகளை பெறுவதற்கு பொருளாதார தடைகள் அந்த அளவிற்கு உதவிகரமாக இல்லை என்பது தெரியும். இதனோடு சேர்த்து பொருளாதார தடைகள் ஏற்கனவே அங்கிருக்கும் மனித உரிமைகள் பிரச்சனைகளுக்கு மேலும் பிரச்சினைகளை சேர்த்து அங்குள்ள மக்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் அத்தகைய சர்வாதிகார ஆட்சி அப்படியேதான் உள்ளது.

பொருளாதாரத் தடைகள் என்பது என்ன? தவறாக நடந்து கொள்ளும் ஒரு நாடு அல்லது நாடுகளின் குழுவிற்கு மற்றொரு நாடு அல்லது ஒரு சர்வதேச அமைப்பு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்த தங்களின் திறனை பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்துவோம் என அச்சுறுத்துதல். இதுதான் பொருளாதார தடைகள் ஆகும்.

அணு ஆயுதங்களை பெறுவது, மனித உரிமைகளில் சமரசம் செய்வது, தீவிரவாதிகளுக்கு இடம் கொடுப்பது, ஆயுதங்கள் மூலம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது, ஏற்கனவே மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆட்சிகளை அகற்றுவது ஆகிய காரணங்களுக்காக பொருளாதார தடை விதிக்கப்படலாம். பொருளாதாரத் தடைகள் பெரும்பாலும் ஆயுதத் தடைகள், சொத்து முடக்கம், வர்த்தக கட்டுப்பாடுகள், விசா மற்றும் பயண தடைகள் ஆகியவற்றின் மூலம் விதிக்கப்படுகிறது.

இத்தகைய பொருளாதாரத் தடைகளுக்கு கொடுக்கப்படும் விளக்கம் என்னவென்றால், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் சர்ச்சைக்குரிய அந்த நாடுகள் தங்களுடைய நடத்தைகளை மாற்றிக்கொள்ளும் என்பதாகும். இந்த பொருளாதார தடைகள் வழியாக உலக நாடுகளின் அதிருப்தியை தெரிவிக்கலாம். மேலும் மேற்கத்திய நாடுகளின் பார்வையிலிருந்து பொருளாதார தடைகள் என்பது தாங்கள் விரும்பும் படி நடந்து கொள்ளாத நாடுகளை அவமானப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்கி அதன் மூலம் அவர்களது நடத்தைகளை மாற்றுவது என்பதாகும்.

ஆனாலும் ஆனாலும் ஆச்சரியத்தக்க வகையில் பொருளாதார நிபுணர் கேரி கிளைட் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இத்தகைய பொருளாதார தடைகளின் வெற்றி வாய்ப்பு வெறும் 34 சதவிகிதம் என்று மட்டுமே தெரிய வந்துள்ளது. 1914-ல் இருந்து இத்தகைய 116 பொருளாதார தடை விதிக்கப்பட்ட வழக்குகளை எடுத்துப் பார்க்கும்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞானி ராபர்ட் இதே தரவுகளை மறுபடியும் ஆய்வு செய்யும் பொழுது, இது மோசமான நான்கு சதவிகிதத்தில் வந்து நிற்கிறது.

அமெரிக்கா முதன் முதலில் மியான்மரின் மீது 1988ஆம் ஆண்டில் பொருளாதார தடைகளை விதித்தது. அங்குள்ள மியான்மர் ராணுவம், மக்களின் மீது மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக இது செயல்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு பொருளாதார தடைகள் சட்டங்களின் வாயிலாகவும், நிர்வாக உத்தரவு வாயிலாகவும் விதிக்கப்பட்டது என்றாலும், மியான்மர் அரசாங்கம் பொது மக்களுக்கு வழங்கிய உரிமைகள், சுதந்திரம் மீது இது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அரசியல் எதிர்ப்பாளர்களை சித்திரவதை, கொலை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போக வைப்பது என்று 1990 மற்றும் 2000 களில் மியான்மர் அரசாங்கம் தொடர்ந்து அட்டூழியங்கள் செய்தது. விரிவான பொருளாதார தடைகள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் அணுஆயுதங்களை பெறுவதிலிருந்து தடுக்கவில்லை. ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் உக்ரைனில் அதன் மோசமான நடத்தைகளையோ அல்லது கிரீமியா நாட்டை ஜனநாயக முறையில் இல்லாமல் ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதையோ தடுக்கவில்லை.


இதே போல வட கொரியா ஆறு அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2002லிருந்து அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை 2006லிருந்து பலவிதமான பொருளாதார தடைகளை விதித்த பொழுதும் இது நிகழ்ந்துள்ளது. இத்தகைய பொருளாதார தடைகளை ஆதரிப்பவர்கள் தென் ஆப்பிரிக்காவை ஒரு உதாரணமாக காட்டுகிறார்கள். உலகளாவிய பொருளாதார அழுத்தங்களினால் தென் ஆப்பிரிக்கா தனது இனவாத முறைகளை மாற்றிக் கொண்டதாக உதாரணம் கூறுகிறார்கள்.

ஆனால் தென்னாப்பிரிக்காவின் நடவடிக்கைகள் மாறியதற்கு வெறும் பொருளாதார தடைகள் மட்டுமே காரணம் என்பது சரியானதாக இருக்காது. சர்வதேச அளவிலும், உள்ளூர் அளவிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களும் காரணமாக இருக்கிறது. நெல்சன் மண்டேலாவின் தலைமையில் கருப்பினத்தவர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களும், பலனளிக்காமல் அதிக செலவுடனும் இனவாத முறை இருந்ததும், சோவியத் யூனியன் பிரிந்து உடைந்ததும் என பல காரணிகள் உள்ளன.

2003இல் லிபியாவில் அணு ஆயுத சோதனைகள் நடைபெறாது என்று அல் கடாபி அறிவித்ததற்கு இத்தகைய பொருளாதார தடைகள் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் உண்மைதானா என்பது வாதத்துக்கு உரியது. ஏனெனில் 2003இல் ஈராக்கில் அமெரிக்கா படையெடுத்த பொழுது, புஷ் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் லிபியாவுக்கு சென்றுகொண்டிருந்த கப்பல்களில் அணு ஆயுதங்கள் தொடர்பான கூறுகளும், முக்கியமான காரணிகளும் இருந்ததாக கூறுகிறார்கள். பல நிபுணர்கள், ஒரேடியாக தனிமைப்படுத்தி தண்டனைகள் வழங்குவதை விட ராஜதந்திர முறைகளை பயன்படுத்தி பேரம் பேசுவது ஒரு நல்ல வழியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மேற்கூறிய உதாரணங்கள் பொருளாதாரத் தடைகள் மட்டுமே, காரணிகள் இல்லாமல் நாம் விரும்பியதை சாதித்துவிட முடியாது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. பொருளாதார தடைகள் தோல்வியடைய முக்கியமான காரணம் நாம் வாழும் உலகமயமாக்கப்பட்ட உலகமாகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார தடைகளை விதிக்கும் பொழுது, பாதிக்கப்படும் நாடுகள் இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற வளர்ந்து வரும் மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் உறவு வைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே இருக்கும் வெளியுறவுக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுதான் பொருளாதார தடைகள் தோல்வியடைய முக்கியமான காரணமாக இருக்கிறது.

உதாரணமாக 1980களில் பொருளாதார தடைகள் விதிக்கப் பட்டதிலிருந்து, மியான்மரின் பொருளாதாரக் கூட்டாளியாக சீனா எழுச்சி அடைந்துள்ளது. அடுத்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற சீனாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கை இதற்கு உதவி செய்கிறது. உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி மியான்மர் ஒவ்வொரு ஆண்டும் சீனாவுடன் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை செய்கிறது. இது அனைத்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளில் 33 சதவிகிதம் ஆகும்.

இதற்கு முற்றிலும் மாறாக மியான்மரில் முதல் 5 பொருளாதார கூட்டாளிகளில் அமெரிக்கா இல்லை. சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இருதரப்பு வர்த்தகம் 2000 முதல் 2015ல் 10 மடங்கு அதிகரித்துள்ளது. 2014இல் இது ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. தடை விதித்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார தடைகள் உதவிகரமாக இருக்கும்.

உலக அளவில் இத்தகைய நாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தி நற்பெயரைக் எடுத்தால் அவர்கள் வழிக்கு வந்து விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.


இதற்கு உதாரணமாக தென்னாப்பிரிக்காவைக் கூறுகிறார்கள். தென்னாப்பிரிக்காவில் ஓரளவு பொருளாதார தடைகள் உதவி செய்ததற்கு காரணம், அமெரிக்காவுடன் பனிப்போர் முழுவதுமே தென்னாபிரிக்கா வைத்திருந்த நெருக்கமான உறவும் தன்னுடைய நற்பெயரை பற்றி அந்நாடு கொண்ட அக்கறையும் தான். இதை பற்றி எல்லாம் கவலைப்படாத வட கொரியா மற்றும் கியூபா போன்ற நாடுகளுக்கு பொருளாதார தடைகள் பலனளிக்காது.

வடகொரியா போன்ற நாட்டில் இத்தகைய பொருளாதார தடைகள் அந்த அளவுக்கு உதவிகரமான இல்லை என்பதையும் தாண்டி இத்தகைய பொருளாதார தடைகள் மிகப்பெரிய அளவில் மனிதாபிமான நெருக்கடிகளையும் உருவாகின்றன என்பதற்கும் உதாரணம் உண்டு. தனது உணவு விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதியை நம்பியிருந்த ஈராக் 1990 இல் குவைத் மீது படையெடுத்தது என்பதற்காக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் 1990 மற்றும் 95 க்கு இடையில் 1000% அளவிற்கு பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்தது.

இதன் விளைவாக குழந்தை இறப்பு விகிதம் 150% அதிகரித்தது 5 வயதுக்கு உட்பட்ட 6, 70,000 குழந்தைகள் வறுமையினால் இறந்தனர். இதற்கு இணையாக 2019ஆம் ஆண்டு உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, வடகொரியாவில் சுமார் 43.4 சதவிகிதம், அதாவது 11 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதை காட்டுகிறது.

இத்தகைய பொருளாதார தடைகள் இருப்பதற்கு முன்பே இருக்கும் உணவுப் பாதுகாப்பின்மை இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாட்டையும் அதிகரிக்கிறது. ஈரான் ஒப்பந்தம் 2015 இன் படி தான் ஒரு ஈரான் ஒரு பொருளாதார தடை வெற்றிக் கதையாக கூறப்பட்டாலும், இத்தகைய பொருளாதார தடைகள் அந்த நாட்டில் 30 சதவீத மக்களை 2017-18 வாக்கில் முற்றிலும் வறுமைக்கு தள்ளியது. இந்த மக்கள் தொகை வெறும் ஒரு அமெரிக்க ஒரு டாலர் மதிப்பிற்கு நிகரான தினசரி வருமானத்தில் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார தடைகளால் தூண்டப்பட்ட பணவீக்கம் காரணமாக 57 மில்லியன் ஈரானியர்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு, அமைதியான ஒரு மாற்றாக பொருளாதார தடைகள் கருதப்படுகின்றன. அமைதியை மேம்படுத்துவதற்கும் தவறு செய்யும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்கும் இது ஒரு வழியாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இது போருக்கு நிஜமாகவே மலிவான மாற்று தானா என்பது குறித்த கேள்விகள் வருகின்றன.

பொருளாதார தடைகள் விதிக்கப் பட்ட நாடுகள் தங்களைப் போலவே இருக்கும் மற்ற சர்வாதிகார நாடுகளின் வழிகளில் சென்று விடுகின்றன. இது மியான்மர் இராணுவத்திற்கும் வடகொரிய அரசாங்கத்திற்கும் சீனா வழங்கும் ஆதரவினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விளைவுகள் மற்றும் மனிதாபிமான வழிகளை கருத்தில் கொண்டு மறு ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News