Kathir News
Begin typing your search above and press return to search.

தென் ஆப்பிரிக்கா: இந்தியர்கள் மீதான தாக்குதலும் அதன் பின்னணியும் - ஓர் பார்வை!

தென் ஆப்பிரிக்கா: இந்தியர்கள் மீதான தாக்குதலும் அதன் பின்னணியும் - ஓர் பார்வை!

Saffron MomBy : Saffron Mom

  |  26 July 2021 3:08 AM GMT

தென்னாபிரிக்க வாழ் இந்தியர்களை குறிவைத்து அங்கு சமீபத்தில் நடந்த வன்முறைத் தாக்குதல்களும், இந்தியர்களின் தற்காப்பு விடீயோக்களும் சமூக ஊடகங்களில் வலம் வந்து கவனத்தை ஈர்த்தது. இதன் பின்னணி என்ன?

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை (ANC) சேர்ந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனையை சமீபத்தில் அனுபவிக்க ஆரம்பித்தார். அவர் 2009 முதல் 18 வரை அதிபராக இருந்த பொழுது நடந்த ஊழல்களை குறித்து நடந்த விசாரணையில் சாட்சியமளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவினை அவர் பின்பற்றவில்லை.

அதிபர் பதவியில் இருந்த பொழுது நடந்த 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்களில் ஜுமாவுக்கு நெருக்கமான ஒரு இந்திய வர்த்தக நிறுவனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஜுமாவின் அரசாங்கத்தின் மீது அந்த நிறுவனத்திற்கு அதிகப்படியான செல்வாக்கு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 2018ல் எதிர்க்கட்சியினர் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ANC) இதை ஒரு பெரிய அவமானமாக கருதி, ஜுமாவை தென்னாபிரிக்க அதிபர் பதவியில் இருந்து இறக்கியது. அந்த இந்திய வர்த்தக நிறுவனத்தின் முதலாளிகள் தென்னாப்பிரிக்காவை விட்டு தப்பித்துச் சென்றனர். இருவருமே தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அதிபர் ஜுமாவின் ஆதரவாளர்களும், அங்கிருக்கும் சில உள்ளூர்வாசிகளும் அந்த இந்திய நிறுவனத்துடனான தொடர்புகளால் தான் தங்கள் அதிபர் தற்பொழுது சிறைக்குச் செல்ல நேரிடுகிறது என்று கருதுவதாகவும், இதனால் தான் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் குறி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இரண்டு எதிர் சக்திகள் உள்ளன. ஒன்று தற்போதைய அதிபரான சிரில் ராமபோசா (2018 முதல் தற்போது வரை அதிபர்), மற்றொன்று முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு விசுவாசமான RET பிரிவு. இந்த இரு பிரிவினருக்குமான மோதலில் தற்பொழுது வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.

ஜுமாவின் கைதுக்குப் பிறகு கும்பல்கள் வெறிபிடித்தவர்கள் போல தெருக்களில் சுடுவதும், ஷாப்பிங் மால்கள், குடோன்கள் தொழிற்சாலைகளில் கொள்ளையடிப்பதுமாக இருக்கிறார்கள். சிறுபான்மையினரை குறிவைப்பது, சுடுவது மற்றும் இன்னும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் கவலை என்னவென்றால், இந்தியர்கள் வசிக்கும் இடங்களான கட்தெங், கவாஜுலு-நாட்டல் போன்ற மாகாணங்களில் இத்தகைய கலவரங்கள் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 1200க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

காவல்துறையினர் உஷாராக இருப்பதால் தென் ஆப்பிரிக்காவின் மற்ற ஏழு மாகாணங்களுக்கு கலவரங்கள் பரவவில்லை. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இதுகுறித்து கூறுகையில், காவல் துறை அமைச்சர் மற்றும் பிரதமரை இந்த மாகாணத்திற்கு அனுப்பி இந்திய மற்றும் கருப்பின சமூகத்தினருக்கு இடையிலான பதற்றங்களை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தென்ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான நலெடி போண்டோருடன் பேசிய போது தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. தென்ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், தென்னாப்பிரிக்க அரசாங்கம் தங்களால் இயன்ற வரை சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய மற்றும் கருப்பின சமூகத்தினருக்கு இடையிலான பதற்றங்கள் இரு பிரிவினருக்கும் இடையிலான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இன வெறி பிரச்சாரங்களால் அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக பல வெறுப்பு பதிவுகளும் பதியப்பட்டன. இத்தகைய பதிவுகள் இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி, கலவரக்காரர்களை குறிப்பாக இந்தியர்களை மற்றும் அவர்களது சொத்துக்களை குறிவைக்கும் படி தூண்டிவிட்டது.

ஜுமா, இந்திய வர்த்தக நிறுவனமான குப்தா பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பும் ஊழல் வழக்குகளில் அவர்களுடைய பங்களிப்பும் இந்தியர்களை குறி வைப்பதற்கு ஒரு சாக்காக பயன்படுத்தப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அதிபர் மேலும் கூறுகையில், இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. முன்னாள் அதிபருடன் நெருக்கமானவர்கள் தான் இந்த கலவரங்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா பல்வேறு இன, கலாச்சார, மொழி மற்றும் மதங்களை பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடாகும். ஆப்பிரிக்காவில் இது இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆகும். உலகில் முப்பத்தி இரண்டாவது பெரிய நாடாகும். கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தென் ஆப்பிரிக்கா பிரிட்டிஷ் காலனிகளில் ஒன்றாக இருந்தது. காமன்வெல்த் நாடுகளிலும் ஒரு பகுதியாக இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் 80.7% பேர் கருப்பினத்தவர்கள். அவர்கள் பல ஆப்பிரிக்க மொழிகளைப் பேசுகின்றார்கள். ஐரோப்பிய வெள்ளையர்கள் 7.9 சதவிகிதம், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் (இந்திய தென் ஆப்பிரிக்கர்கள் மற்றும் மற்றவர்கள்) 2.6 சதவீதம், கலப்பின தென் ஆப்பிரிக்கர்கள் 7.9 சதவிகிதம் ஆகியோர் உள்ளனர்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிகம் பேசப்படும் மொழிகள் ஜுலு 22.7% மற்றும் ஹொஸா 16%. ஆங்கிலத்தை கிட்டத்தட்ட 10% பேர் பேசுகிறார்கள். ஆங்கிலம், பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகங்களில் சரளமாக பேசப்படுகின்றது.

தென் ஆப்பிரிக்காவின் இனப்பாகுபாடு காட்டிய அரசாங்கங்களுக்கு எதிரான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டத்தில் பல்வேறு இந்தியர்கள் கலந்து கொண்டனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி அங்கே சத்தியாகிரகம் செய்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இனப்பாகுபாடு காட்டிய தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு இந்தியா வெளிப்படையான விமர்சகராக இருந்து, அவர்களுடன் ராஜ ரீதியிலான உறவுகளை இந்தியா வைத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவின் ஆதரவு பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா மீதான நல்ல எண்ணத்தை உண்டாக்கியது. 1994-இல் இனப்பாகுபாடு முடிவுக்கு வந்த பிறகே இந்தியா தென் ஆப்பிரிக்காவுடன் அதிகாரப்பூர்வமாக உறவுகளை வைத்துக்கொண்டது. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு 'மகாத்மா காந்தி அமைதிப் பரிசு', 'பாரத ரத்னா' விருதும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 16 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இது மூன்று சதவிகிதம் பேர் ஆகும். 80 சதவிகித இந்திய சமூகத்தினர் கூறும் கவாஜுலு நட்டால் மாகாணத்தில் மற்றும் 15 சதவிகிதத்தினர் கட்டங் மாகாணத்திலும் மீதமிருக்கும் ஐந்து சதவீதத்தினர் கேப் டவுன் நகரிலும் இருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கர்கள் அரசாங்கம், வர்த்தகம், ஊடகங்கள், சட்டம் மற்றும் பல தொழில்களில் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தபட்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பிய ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் என கொண்டாடப்படுகிறது.

நடந்து கொண்டிருப்பது தென்னாபிரிக்காவின் உள்நாட்டு விவகாரம் என்றாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுவது, கொள்ளை அடிக்கப்படுவது, கலவரங்கள், கொலைகள் ஆகியவை மிகவும் கவலைக்குரியது. இது தொடர்பான திட்டம் தீட்டி நடத்தியவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவது அவசியம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கிருக்கும் சிறுபான்மையினரான இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு மிகுந்த பங்களிப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

With Inputs From : Samvada World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News