Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு மாநில அரசால் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

ஒரு மாநில அரசால் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய முடியுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
X

Saffron MomBy : Saffron Mom

  |  14 March 2021 10:47 AM IST

தி.மு.க 2021 தேர்தல் அறிக்கைகளில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்து இருந்தது. நேற்று சென்னையில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கைகளின் மூலம் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இதை அறிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மாநில அரசால் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியுமா என்பது குறித்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தி.மு.கவால் அவ்வாறு செய்ய முடியும் என்றால் ஏன் அ.தி.மு.க செய்ய முடியவில்லை? ஏன் புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க அரசால் முடியவில்லை? என்பது குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

இது எந்த அளவு சாத்தியம்?

நீட் தேர்வில் இருந்து தற்காலிக விலக்கு பெற (அ) முழுவதுமாக ரத்து செய்ய, அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுமே முயன்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. தமிழ்நாட்டுக்கு 2016இல் ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 2017 இல் இருந்து மருத்துவ சேர்க்கை நீட் தகுதி பட்டியல் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது.

தி.மு.க வாக்குறுதி அளிப்பது சாத்தியமா குறித்து தி நியூஸ் மினிட் பத்திரிகைக்கு பேட்டியளித்த, பி எஸ் ஆர் சட்டமன்ற ஆராய்ச்சியின் சிவிக் ஈடுபாட்டின் தலைவர் சக்ஷு ராய் கூறுகையில், "மாநிலங்கள் மத்திய அரசின் சட்டங்களை திருத்த முடியும். ஆனால் எந்த திருத்தங்கள் செய்தாலும் அது மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும், மேலும் திருத்தப்பட்ட சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை.

ஒரு உதாரணமாக பல மாநிலங்கள் கொரோனா தொற்று நோய் பரவலின் பொழுது, தொழிலாளர் சட்டங்களை திருத்தின. அது ஒரு மத்திய அரசின் சட்டம், ஆனால் இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வேண்டும். இதற்கு மற்றொரு உதாரணமாக ஜல்லிக்கட்டு உள்ளது. மற்றொன்று தமிழகத்தின் நில கையகப்படுத்தும் திருத்தம், இந்த திருத்தத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார். இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும்".

எனவே, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மாநில அரசால் மத்திய அரசின் சட்டங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் (அதாவது மத்திய அரசின் ஆதரவு) தேவை. நீட்டை ரத்து செய்யக்கோரி 2017இல் ஜனாதிபதி ஒப்புதல் வேண்டி ஒரு சட்டம் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அச்சட்டம் ஒப்புதல் வழங்கப்படாமல் தமிழ் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தி.மு.க அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூட நீட் ரத்து செய்ய ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற முயற்சிகள் எடுக்கப்படும் என்று தான் தெளிவாக தெரிவித்து உள்ளனர் (அ.தி.மு.க செய்தது போல்). ஆனால் சமூக ஊடகங்களில் அவர்களது தொண்டர்கள் தி.மு.க வந்தாலே நீட் சட்டம் ரத்து செய்யப்பட்டு விடும் என்பது போன்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியாது என்று 2017ல் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது. இதற்கு அதிகபட்சம் தி.மு.க தரப்பு கொடுக்கும் வாதம், மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் செலுத்தியிருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திற்கு விலக்கு இல்லாத பட்சத்தில் தமிழகத்திற்கு அளிப்பது நியாயமற்றதாக முரண்பாடானதாகவும் இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதிகபட்சம், நாங்கள் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். அழுத்தம் தெரிவித்துள்ளோம். பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் என்றெல்லாம் கூறி கொள்ளலாமே தவிர தன்னிச்சையாக தமிழக அரசால் ரத்து செய்யப்படும் என்பது நடவாத காரியம்.

மேலும் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றும் அறிவித்துள்ளனர். ஆனால் பல மாநில அரசாங்கங்களிடமிருந்து ஆதரவு பெற்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் மத்திய அரசு தற்போது கல்வி மீது பெரும் கவனம் செலுத்தி வருவதால் இது நடக்காத காரியம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

With Inputs from: The News Minute, The Hindu and Hindustan Times

Cover pic credit: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News