உலகைப் பழிவாங்கத் துடிக்கிறதா சீன கம்யூனிஸ்ட் கட்சி? - ஒரு பார்வை!
By : Saffron Mom
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) 1921ல் தொடங்கப்பட்டு, இந்த வருடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது. மிகவும் பழமையான நாகரீகங்களில் ஒன்றான சீனா 1839-1949 வரையிலான காலகட்டத்தை அந்நாட்டின் அவமானகரமான நூற்றாண்டு (Century of Humiliation) என அழைக்கிறது. சீனாவில் நடந்த நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு, CCP 1950ல் ஆட்சியமைத்தது. 70 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் சீனா உள்ளது.
இதில் CCP யின் பங்கு, விளைவுகள், உலக அரங்கில் சீனாவின் இடம், இனி வருங்காலத்தில் எதை எதிர்பார்க்கலாம் என்பதை ஆராய்வது அவசியம்.
சீனா ஒரு தொன்மையான கிழக்கத்திய நாகரீகமாக செழித்து வந்தது. மிகப்பெரும் ராஜ்யங்கள் புகழ் வாய்ந்த தலைமுறைகளால் ஆளப்பட்டது. கிழக்கின் மிகவும் பிரபலமான தத்துவ ஞானிகளில் ஒருவரான கன்பூசியஸ் சீனாவில் தோன்றியவர். கன்பூசியநிசம் சீனாவில் இன்றுவரை மிகப்பெரும் மரியாதையுடன் பேணப்பட்டு வருகிறது.
உலக நாடுகளுடன் அதிகமாக வர்த்தகம் நடத்தி, வலிமையான பொருளாதாரங்களில் ஒன்றாக 1850 வரை திகழ்ந்து வந்தது. சீனக் கண்டுபிடிப்புகளான காம்பஸ், காகிதம், துப்பாக்கி ரவை ஆகியவை மிகவும் பிரபலமானவை.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவின் வளர்ச்சி சரியத் தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழிற்புரட்சி ஏற்பட்டு இங்கிலாந்து உலகின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. ஐரோப்பிய சக்திகளின் விதிகளின் படி நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு சீனா உள்ளாக்கப்பட்டது.
மிகப்பெரும் கப்பல் ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இங்கிலாந்து, எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று சீனாவிற்கு விதிகளை விதித்தது. இந்த காலகட்டத்தில் ஜப்பானும் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து, சீனாவின் மேல் போர் தொடுத்து சீனாவை தோற்கடித்தது. சீனா நெடுங்காலமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கொரியாவையும் இழந்தது.
ஒரு மிகப்பெரும் கிழக்கத்திய சக்தியாக இருந்த சீனா, 1830 முதல் 1920களில் மேற்கத்திய நாடுகளிடம் பலவிதமாக தோல்விகளுக்கு ஆளானது. இந்த காலகட்டத்தில்தான் ரஷ்யாவில் 1917 கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. அந்த சமயத்தில் முதல் உலகப்போரும் நடந்து கொண்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் சீனாவை சேர்ந்த இளைஞர்கள், கம்யூனிசம் தான் சீனாவை இத்தகைய அவமானகரமான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கான ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தனர். 1921இல் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் உதவியுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உருவானது. ஆனால் 1921 மற்றும் 1949க்கு இடையிலான வருடங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனா ஆகிய இரண்டிற்குமே கடும் சோதனை காலமாக அமைந்தது. உள்நாட்டுப் போர்கள் தேசியவாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நீடித்தது.
1937இல் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே இரண்டாவது போரும் தொடங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து எதிரிகளையும் அடக்கி, அக்டோபர் 1, 1949 அன்று சீன மக்கள் குடியரசு (PRC) உருவானது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இணை நிறுவனர் மாவோ சீனாவின் சர்வாதிகாரியானார்.
மாவோவின் ஆட்சியில் ஊரகப்பகுதிகளை வளர்ப்பது முக்கியமான கவனத்தில் இருந்தது. கலாச்சாரப் புரட்சி (Cultural Revolution) மிகப்பெரும் முன்னேற்றம் (Great Leap Forward) போன்ற பல வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் மாவாவின் இத்தகைய கொள்கைகளாலும் திட்டங்களாலும் மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர்.
1976இல் மாவோவின் மரணத்திற்குப் பிறகும் சீனா மிகவும் ஏழை நாடாக இருந்தது. மில்லியன் கணக்கான மக்களை ஏழ்மையின் பிடியிலிருந்து மீட்க இயலாத ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்தது. இதற்குப் பிறகு நவீன சீனாவின் சிற்பி என அழைக்கப்படும் டெங் க்ஸியோபிங் 1978 இல் ஆட்சிக்கு வந்தார். அவர் பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து மாவோவின் கொள்கைகளிடமிருந்து சீனாவை நகர்த்தினார். மேலை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்ளவும் மிகுந்த முயற்சி எடுத்தார்.
1989இல் அவர் ஆட்சியில் இருந்து இறங்கிய பொழுது சீனா உலகளாவிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க தயாராக இருந்தது. அதற்கு பிறகு சீன தலைவர்களும் டெங் ஜியோபிங்கின் கொள்கைகளைப் பின்பற்றினர்.
21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொழுது சீனாவின் பொருளாதார மதிப்பு 1.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அப்பொழுதிலிருந்து மேலை நாடுகளிடம் இருந்து மிகப் பெரும் முதலீடுகளை சீனா பெற்று வருகிறது. இதன் காரணமாக 600 மில்லியன் மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டு தற்பொழுது 15 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதாரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சீனா கிட்டத்தட்ட உலகின் தொழிற்சாலையாக மாறி, உலக நாடுகளுக்கு தேவையான பல பொருட்களை உருவாக்கி வருகிறது. ஒரு சர்வாதிகார, மோசமான தணிக்கை கொண்டு கருத்து சுதந்திரத்தை நசுக்கி வந்தாலும் உலகளாவிய ரீதியில் தங்களை குறித்த நல்ல மதிப்பை உருவாக்க வேண்டும் என்றும் சீனா பிரயத்தனப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாத நாடாக உருவெடுத்துள்ளது.
2012இல் ஜி ஜிங்ப்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். மாவோவிற்கு பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கம், ராணுவம் என அனைத்திற்கும் ஒரே சர்வாதிகார தலைவராக விளங்குகிறார். கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுக்க சீனாவின் தலைவராக அவர் தொடரப் போகிறார். 2049ல் சீனா உலகின் நம்பர் 1 நாடாக மாறி அமெரிக்காவின் ஜிடிபியை விட இரண்டு மடங்கு இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துள்ளனர்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைகள் பகிரப்பட்டுள்ளன, வரலாற்று ரீதியிலான தொடர்பும் உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்கும் காலனித்துவத்திற்கு பிறகு உருவான கம்யூனிஸ்ட் சீனாவும் ஜனநாயக இந்தியாவும் மிகவும் பலவீனமான மற்றும் சர்ச்சைக்குரிய உறவுகளை கொண்டுள்ளன.
இந்திய பிரதமர் நேருவின் கொள்கைகளான அமைதி, கூட்டுறவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பஞ்சசீலக் கொள்கைகள் கூடஇந்தியா-சீனா 1962 போரை தவிர்க்க முடியவில்லை. அதன் பிறகு 1967ல் மற்றொரு போர் வந்தது.1945ற்கு பிறகு சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஒரு உறுப்பினர் ஆகி செல்வாக்கு பெற்றுள்ளது.
1980களுக்குப் பிறகு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவை சரி செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், இந்தியாவின் பல பகுதிகள் மீது சீனா உரிமை கோருவதும், பாகிஸ்தான், இந்தியா மீது தொடுக்கும் நிழல் தீவிரவாதத்திற்கு சீனா மறைமுகமாக ஆதரவு அளிப்பதும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை இன்னும் பலவீனமாகவே வைத்துள்ளன.
சீனா தொடர்ந்து வளர்ந்து வரும் வேளையில் சீனாவின் உண்மையான நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சீனா தொடர்ந்து வளர்ந்து வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் சர்வாதிகார, கம்யூனிஸ்ட் சீனா இவ்வளவு வளர்வது இந்தியா உட்பட உலக நாடுகளால் வரவேற்கக்தக்கதாக இல்லை.
ஹாங்காங், தைவான், திபெத் முதல் சமீபத்தில் கொரானா வைரஸ் பெருந்தொற்று வரை பல விவகாரங்களில் சீனாவின் நடவடிக்கைகள் மோசமாக உள்ளது. சர்வாதிகார, கம்யூனிஸ்ட், வெளிப்படைத் தன்மை இல்லாத சீனா தங்களுடைய அவமானகரமான நூற்றாண்டிற்கு பழிவாங்கத் துடிக்கிறது. உலகின் தலைமைப் பொறுப்பை அவர்களை நம்பி ஒப்படைக்க முடியுமா? இதுதான் 21ஆம் நூற்றாண்டின் முக்கியமான கேள்வி. சீனா அதற்கு தகுதியானது அல்ல என்பதே பெரும்பான்மையான நாடுகள் மற்றும் மக்களின் கருத்தாக இருக்கிறது.
Inputs from: One Hundred Years of CCP and the Making of a New Hegemon by Ragoth Sundararajan