Kathir News
Begin typing your search above and press return to search.

அடக்கி ஆள விரும்பும் சீனா - பதிலடி கொடுக்கும் நாடுகளும் அதில் இந்தியாவின் பங்கும்!

அடக்கி ஆள விரும்பும் சீனா - பதிலடி கொடுக்கும் நாடுகளும் அதில் இந்தியாவின் பங்கும்!

Saffron MomBy : Saffron Mom

  |  28 April 2021 1:15 AM GMT

சீனாவின் எழுச்சி மற்றும் வளர்ச்சி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கடந்த சில மாதங்கள் வரை இதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு வளர்ந்து வரும் பொருளாதார, அரசியல் சக்தியான சீனாவை தடுப்பது குறித்து இப்பொழுது பேசி பிரயோஜனம் இல்லை. ஆனால் உலக ஒழுங்கில் சீனாவின் வளர்ச்சி இடையூறை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

சீனாவின் நடத்தைகளை கண்டுகொள்ளாமல் விடுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது கொரோனா வைரஸ் பேரழிவு பல நாடுகளுக்கும் காட்டியிருக்கும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உலகமும் ஒன்றிணைந்து வருகிறது.

சீனாவிற்கு எதிரான பதிலடி பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஸ்திரத்தன்மை வாய்ந்த அதிகார சமநிலையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்த பதிலடி சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டமான BRI (Belt and Road Initiative) திட்டத்திலும் வெளிப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம், தன்னுடைய புது அதிகாரங்களை பயன்படுத்தி ஆஸ்திரேலிய மாகாணமான விக்டோரியாவிற்கும் சீனாவிற்கும் BRI தொடர்பிலான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்தது.

ஆஸ்திரேலியா தங்களது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இது அவசியமான நடவடிக்கை என்ற தெரிவித்திருந்தாலும், சீனா இது குறித்து கூறுகையில், இது இரு தரப்பு உறவுகளை பாதித்து, ஆஸ்திரேலியாவை காயப்படுத்தும் என எச்சரிக்கை தெளிவாக விடுத்துள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா-சீனா உறவு நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் மூலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறிய நாளிலிருந்து இந்த உறவு படிப்படியாக பாழ்பட்டு வருகிறது.

மற்றொருபுறம் பாகிஸ்தானி நகரமான க்வெட்டாவில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் ஒரு வெடிகுண்டு வெடித்து 5 பேரை கொன்றது. சீனத் தூதுவர் இந்த பகுதிக்கு பார்வையாளராக வந்திருந்த பொழுது நடந்த இந்த தாக்குதலின் இலக்கு அவர் தான் என்று பாகிஸ்தான் தலிபான் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால் பலுச்சிஸ்தானில் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அரசாங்கங்களும் பாகிஸ்தானின் மிகவும் ஏழையான பலுச்சிஸ்தான் பிராந்தியத்தை அதன் இயற்கை வளங்களுக்காக சுரண்டுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கனவுத் திட்டமான BRI சவால்களை சந்தித்து வரும் வேளையில், 'இந்தோ-பசுபிக்' என்ற கருத்தியல் மற்றும் திட்டங்களும் உலகளாவிய ரீதியில் நன்றாக வேரூரன்றி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய இந்தோ-பசுபிக் மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டது. அது பிராந்திய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய திட்டம் மேலும் கூறுகையில், 27 நாடுகள் இந்தோ-பசுபிக் கூட்டணியில் ஒன்றிணைந்து பொதுவான நலன்களுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்தோ-பசுபிக் கருத்தியலை பல்லாண்டுகளாக புறக்கணித்த ஐரோப்பிய ஒன்றியம், தற்பொழுது ஒரு வழியாக அதன் தேவையை உணர்ந்து விழித்துக் கொண்டுள்ளது.

அதன் தனிப்பட்ட நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி ஏன் நெதர்லாந்து கூட இந்தத் திட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்துவரும் புவிசார் அரசியல் யதார்தத்திற்கு பதிலளிக்க வேண்டி இருக்கிறது. ஐரோப்பாவிலிருந்து தொடங்கி அமெரிக்கா முதல் ASEAN வரை இந்தோ-பசுபிக் யதார்த்தத்தை மறுக்க முடியாது.

சீனா தன்னுடைய மொத்த வலிமையும் பயன்படுத்தி இதை கெடுக்க முயற்சி செய்தது. ஆனால் இது சீனாவின் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒரு தோல்வியாக முடிவடைந்தது . இந்தோ-பசுபிக் எனும் புதிய கடல் சார் புவியியலின் கருத்தியல் உருவாக்கத்தையும் வளர்ச்சியை சீனாவால் தடுக்க முடியவில்லை.

இன்றைக்கு இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ரஷியாவின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. உலகின் மற்ற பகுதிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்தோ-பசுபிக் கருத்தியலை உண்மையாக மாற்றுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு தான் மையமாக இருந்தது. BRI திட்டத்திற்கு இந்தியா காட்டிய தயக்கம் தான் இப்பொழுது உலகம் முழுவதும் ஒரு நிலையான பதிலாக மாறியுள்ளது.

இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியோ அல்லது ஈடுபாடோ இல்லாமல் இந்தோ-பசுபிக் கருத்தியல், கல்வி உரையாடல்களை தாண்டி வெளியே சென்று இருக்காது. இந்த முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

இந்தோ-பசுபிக் என்பது இந்திய-அராபிய பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், வியட்நாம் போன்ற நாடுகளின் கலாச்சார செல்வாக்கு என ஏற்கனவே வரலாறு எனவும், இதை வரலாற்றிற்கு திரும்பி செல்வதாகவே பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீனா தன்னுடைய முரட்டுத்தனமான இலக்குகளை எந்த அளவு பிராந்திய நாடுகளின் மீது திணிக்கிறதோ அந்த அளவிற்கு அதற்கு பதிலடி கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

சீனாவின் கனவு திட்டமான BRI பலவித பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. இந்தோ-பசுபிக் புவிசார் அரசியல் தற்பொழுது நன்றாக வேரூன்றி விட்டது. QUAD மறுபடியும் உயிர்த்தெழுந்து விட்டது மற்ற பல பிராந்திய நாடுகள் மிகவும் ஒருங்கிணைப்புடன் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.

அதிகாரம் என்பது எந்தளவு ஒருநாட்டின் திறன்களை பற்றியதோ, அதே அளவு அடுத்த நாடுகளை தங்களுடைய தலைமைப்பண்பை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் இருக்கிறது. சீனா கடந்த 10 ஆண்டுகளில் எழுச்சி அடைந்து இருக்கிறது. ஆனால் தாங்கள் தலைமை பண்புக்கு தகுதியானவர்கள் என உலகளவில் என்ன, பிராந்திய அளவில் கூட நிரூபிக்க தவறி தவறிவிட்டது. இந்தியா, சீனாவை பலமுனைகளில் தொடர்ந்து துணிவுடன் எதிர்த்து நிற்பது, மற்ற நாடுகளுக்கு சீனாவின் நடத்தைகளை எப்படி வடிவமைப்பது என்பது குறித்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய கொள்கைகளை திரும்பிப் பார்த்து, தங்களுடைய அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய இது கண்டிப்பாக கட்டாயப்படுத்தும்.

(தொடர்ந்து வளர்ந்து வரும் முரட்டுத்தனமான சீனாவிற்கு உலக நாடுகள் பதிலடி கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து திரு.ஹர்ஷ் பந்த் எழுதி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் சாராம்சம்)

Next Story
கதிர் தொகுப்பு
Trending News