Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பியடித்து, ஈடு கொடுக்கும் இந்தியா - ஆச்சர்யத்தில் சீனா.!

திருப்பியடித்து, ஈடு கொடுக்கும் இந்தியா - ஆச்சர்யத்தில் சீனா.!

திருப்பியடித்து, ஈடு கொடுக்கும் இந்தியா - ஆச்சர்யத்தில் சீனா.!

Saffron MomBy : Saffron Mom

  |  4 Dec 2020 10:07 AM GMT

உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடந்து வரும் மோதல் பதற்றத்திற்கும், கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மோதலிற்கும் சீனாவின் முரட்டுத்தனமான, தூண்டப்படாத ராணுவ நடவடிக்கைகளே காரணம் என்று இந்தியா எப்பொழுதும் கூறி வந்துள்ளது.

தற்போது, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய அறிக்கை இந்தியாவின் கூற்றுக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மோதல் சீனா அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க - சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம், அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கால்வான் பள்ளத்தாக்கு சச்சரவு பற்றி சில சான்றுகள் உள்ளன.

அதன் படி, பல வாரங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய்ன் "உறுதித்தன்மையை மேம்படுத்துவதற்காக சீனா சண்டையை பயன்படுத்த வேண்டும்" என்று ஊக்குவித்தார். உண்மையான பாதுகாப்பு எல்லையில் (LAC) நடந்து வரும் பதற்றங்களை கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான எல்லை நெருக்கடி என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீன தலைவர்கள், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரிப்பதற்கான அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்தினர் என்றும் சீன அரசாங்கத்தின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ், "சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போட்டியில் இந்தியா தலையிட்டால் இந்தியாவிற்கு ஒரு பெருத்த அடி விழும்" என்று எச்சரித்ததை குறிப்பிடுகிறது.

உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பரவலினால் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுதும் சீனா வேண்டுமென்றே இந்த ஆபத்தான எல்லை பகுதி பிரச்சினையை தூண்டி விட்டது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.

இப்படி ஆசியாவின் இருபெரும் நாடுகளுக்கு இடையே தேவை இல்லாத மோதலை உருவாக்குவது ஜி ஜிங்பின்கின் திட்டமாக என்பதை பலரும் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவின் இராணுவ மற்றும் பொருளாதார மற்றும் ராஜாங்க ரீதியிலான பதிலடிகளை ஆராய்ச்சி செய்யும் பொழுது, இந்தியா எந்த அளவிற்கு சீனாவின் முரட்டுத்தனத்தை எதிர்த்து நிற்கும் என்பதை சீனா குறைவாக மதிப்பிட்டது என்றே கூறுகிறார்கள்.

இந்தியா சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பணிந்து செல்ல மறுத்துவிட்டது. சீன ராணுவம் எல்லையில் குவித்த ராணுவத்திற்கு பதிலடியாக இந்தியா தன்னுடைய படைகளைக் குவித்தது. லடாக்கில் மட்டுமல்லாமல், உண்மையான எல்லைப்பகுதியில் சிக்கிம் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை குவித்தது.

உறைய வைக்கும் குளிருக்கும், அதிக உயரத்திற்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் சீனர்களுக்கு ஈடு கொடுத்து நிற்கிறார்கள். இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடற்படை முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தியா பல உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை பரிசோதித்து சிலவற்றை உண்மையான எல்லைப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் தன்னுடைய சிறப்பு படைகளைக் கொண்டு பாங்காங் ஏரியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மலை முகடுகளை கைப்பற்றியுள்ளது. இந்திய ராணுவத்தின் வேகமான நகர்வு சீனாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சிறப்பு படை வீரர்கள் திபெத்திய அகதிகள் சமூகத்திடமிருந்து சேர்க்கப்பட்டனர் என்பது சீனாவின் காயத்திற்கு மேலும் எரிச்சல் சேர்க்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பதிலடி வெறும் ராணுவ அளவில் மட்டும் இல்லை. இந்தியா பல சீன ஆப்களை, இந்தியாவில் தடை செய்தது. பணம் புரளும் இந்தியாவின் உள்நாட்டு கட்டமைப்புத் திட்டங்களில் இருந்து சீனாவின் பல நிறுவனங்களை வெளியேற்றியது. பலரும் சீனாவின் இவ்வளவு பெரிய பொருளாதாரத்தில் இந்நடவடிக்கைகள் அந்த அளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறினாலும், இந்தியாவால் அனுப்பப்பட்ட பதில் தெளிவானது.

" ஆக்கிரமிப்பு காலம் முடிந்துவிட்டது. தன்னுடைய இடங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் யாரையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது".

இதையடுத்து, தைவானுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பதுடன், திபெத் விஷயத்தை தீவிரமாக பயன்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய ஒரு க்வாட் குழுவை வலுப்படுத்த புதுடெல்லி முயல்கிறது. ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள இந்த மாபெரும் சக்திகள் அனைத்தும் இப்பகுதியில் சீனாவின் நடத்தையால் கவலை அடைந்துள்ளன. 2020ஆம் ஆண்டில் குறிப்பாக இது அச்சுறுத்தும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிகாவிற்கு ஒரு அச்சுறுத்தும் செய்தி அனுப்ப இந்தியாவை பயன்படுத்தவோ, அல்லது இந்தியா அமெரிக்காவை நெருங்குவதற்கு முன்னால் இரண்டு தடவை யோசிக்க வேண்டும் என்று இந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்புவதற்காகவோ சீனா இதை செய்திருக்கலாம். ஆனால் அதன் விளைவு அதற்கு எதிராக நடந்து விட்டது.

இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ளது. இந்தியா அழுத்தத்தின் பிடியில் பணிந்து விடும் என்று சீனா நினைத்தது. ஆனால் இந்தியா சீனாவின் முரட்டுத்தனத்தை எதிர்ப்பது மட்டுமல்லாமல், புதிதாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி சீனாவில் எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News