Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சீனர்கள்: சீனா ஆத்திரம், பின்னணி என்ன?

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சீனர்கள்: சீனா ஆத்திரம், பின்னணி என்ன?

Saffron MomBy : Saffron Mom

  |  18 July 2021 3:03 AM GMT

வட பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் புதன்கிழமை நடந்த பயங்கர பேருந்து குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, சீனா அதிர்ச்சியையும் ஆத்திரமும் அடைந்தது.

பாகிஸ்தானிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்திய சீனா, சீன திட்டங்கள் மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (CPEC) திட்டத்தில் இதுவரை நடந்ததிலேயே இது தான் மிக மோசமான சம்பவம். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 36 பேரில் மேலும் 28 சீனர்கள் உள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்த குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த சம்பவத்தைக் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இரு நாடுகளும் இணைந்து செய்யும் ஒரு கூட்டு விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தீவிரவாத தாக்குதல் அல்ல எனவும் இயந்திர செயலிழப்பு காரணமாக குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் பாகிஸ்தான் புதன்கிழமையன்று கூறியுள்ளது. தாக்குதல் நடந்த சில நேரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாக இதை குண்டுவெடிப்பு தாக்குதல் என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.

வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியை புதன்கிழமை துஷான்பேயில் சந்தித்து, நடந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் விளைவா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சீனாவில் ஊடக அறிக்கைகள் விபத்துக்கான காரணத்தை ஒரு "குண்டுவெடிப்பு" என்று குறிப்பிடுகின்றன. இது பாகிஸ்தானில் சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து சீனாவில் நிலவும் நீண்டகால கவலைகளை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானில் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி (BRI)யின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்பார்வையிடவும், கட்டமைக்கவும் ஏராளமான சீனர்கள் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த திட்டங்கள் உள்ளூர் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய திட்டங்களால் தங்களுக்கு அவ்வளவாக நன்மைகள் இல்லை எனவும், இதன் மூலம் உருவாகும் வேலைகள் கூட வெளிநாட்டினருக்கே சென்று விடுவதாகவும் கூறுகின்றனர்.

சீன திட்டங்கள் மீதான முந்தைய தாக்குதல்கள்

பாகிஸ்தானில் சீன குடிமகன்கள் மீது இதற்கு முன்னால் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த வருட ஏப்ரல் மாதத்தில் தென்மேற்கு பலூசிஸ்தானில் உள்ள குவெட்டாவில், சீன தூதர் தங்கியிருந்த ஒரு ஒரு சொகுசு ஹோட்டலில் தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் சீன தூதர் காயமடையவில்லை. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் பொறுப்பேற்றது.

அரேபிய கடலுக்கு சீனாவுக்கு வழி வழங்கும் 'ஆழ்கடல் குவாடர் துறைமுகத்' திட்டத்தை தாக்கும் வகையில் 2019ம் ஆண்டில், பலூசிஸ்தானில் ஒரு ஆடம்பர ஹோட்டலை துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்கியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 2020 இல், பலூச் கிளர்ச்சியாளர்கள் வர்த்தக தலைநகரான கராச்சியில் சீனாவுடனான தொடர்பைக் காரணம் காட்டி பாகிஸ்தான் பங்குச் சந்தையை குறிவைத்தனர்.

மே 2017 இல், பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில், போலீஸ்காரர்கள் போல நடித்து ஆயுதமேந்தியவர்கள் இரண்டு சீனர்களை கடத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News