"இந்துவாகவே இருந்திருக்கலாம்" - திருச்சபைகளில் தீண்டாமையின் உச்சம். தலித் கிறிஸ்தவர்கள் வேதனை!


இது குறித்து இந்திய தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேத்யூஸ் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம் என்று அவர் கூறியது மதமாற்றத்தின் பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மதமாற்றம் என்பது பெயரளவிலேயே மாற்றம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தும் மேத்யூஸ், கிறிஸ்தவ மதத்தில் தலித்துகளுக்காக தனிப் பாதை, தனி கல்லறை, தனி சர்ச், தலித் கிறிஸ்தவர்கள் இறந்தால் அவர்களை எடுத்து போவதற்காக தனி சவ ஊர்தி என அனைத்தும் தனித்தனியே இருக்கும் உண்மை நிலையை விவரித்துளார்.
பாதிரியாராக இருப்பவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்றும் அவர்களை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பதாகவும் தலித் கிறிஸ்தவர்களும் அப்படியே எண்ணி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதிகம் கல்வி கற்கத் தொடங்கிய பின்னர் பாதிரியாராக இருந்தாலும், ஆயராக இருந்தாலும் பேராயராக இருந்தாலும் போப்பாண்டவராகவே இருந்தாலும் கேள்வி கேட்கலாம் என்ற தெளிவு கிடைத்திருப்பதால் தற்போது தங்களுக்கு பிரதிநிதித்துவத்தில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று போராட ஆரம்பித்துள்ளனர்.
ஆயர் மற்றும் பேராயர் களிடையே தலித்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களாக தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புதுவை திருச்சபையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே கூட நுழைய விடாமல் கேட்டைப் பூட்டி வைத்த கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
சாதி பாகுபாடு பார்ப்பவர்களை சாதி கிறிஸ்தவ இந்துக்கள் என்று அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், அவர்கள் மதம் மாறினார்களே தவிர மனம் மாறவில்லை என்று கூறியுள்ளார். இந்து மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்று தொடர்ந்து பெரியாரியவாதிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகின்றனர். ஆனால் கிறிஸ்தவ மதத் தலைவர்களே இந்த அளவுக்கு தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாடு பார்ப்பதைப் பற்றி பெரியாரியவாதிகள் பேசுவதில்லை.
இதற்கு கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் நடக்கும் சாதிய பிரச்சினைகளை பாதிரியார், ஆயர், பேராயர் ஆகியோர் கட்டளைகளின் படி தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளியே கொண்டு சென்றால் தங்களைத் தாங்களே காரித்துப்பிக் கொள்வது போல் இருக்கும் என்று வெளியே செல்லாமல் உள்ளேயே மூடி மறைத்து விடுவதாக மேத்யூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பிரச்சினை ஐநாசபை வரை சென்று ஐநாசபை கிறிஸ்தவர்களின் தலைமை பீடமாக இருக்கும் வாட்டிகன் சிட்டிக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. எனவே இந்த பிரச்சனை போப் வரை தெரியும். அவர் எச்சரித்த போதும் இங்கு இருக்கும் மதகுருமார்கள், ஆயர்கள் மற்றும் பேராயர்கள் இந்த சாதிய வேறுபாடுகளை விடாப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கின்றர் என்று தலித் கிறிஸ்தவ அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொடுமையில் இருந்து விடுபடுவதற்காக தலித் கிறிஸ்தவர்கள் பௌத்த மதத்திற்கு மாறலாமா என்று நினைத்து வருவதாகவும் சிலர் "நாம் மதம் மாறாமல் இந்த மதத்தில் இருந்துகொண்டே நாம் உரிமைகளுக்காக போராடலாம்" என்று எண்ணுவதாகவும் மேத்யூஸ் கூறியுள்ளார். இதற்கு இந்துவாகவே இருந்திருக்கலாமே என்று பலரும் விமர்சிக்கின்றனர்.

மேலும் உயர்சாதி கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது தலித் கிறிஸ்தவர்களும் தங்களது உள் சாதி பிரிவில் ஏற்றத்தாழ்வுகளை பார்த்து வருகின்றனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை என்று மேத்யூஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு காலத்தில் தலித் கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் உட்கார வேண்டும், வழிபாட்டின்போது நன்மை கொடுப்பதைக் கூட தலித் கிறிஸ்தவர்கள் பக்கத்தில் போய் வாங்க முடியாத கொடுமைகள் நடப்பதாக கிறிஸ்தவத்தில் நிலவும் தீண்டாமையை மேத்யூஸ் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களில் 70% பேர் தலித்கள் தான் என்று கூறும் மேத்யூஸ் தங்களது பிரதிநிதியாக தமிழ்நாட்டில் இருக்கும் 18 பிஷப்களில் தலித் பிஷப் ஒருவர் மட்டுமே இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஒரு கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார் ஒரு சாதாரண குடிசை வீட்டிற்கு செல்ல மாட்டார் என்றும் அப்படி சென்றால் அது பெரிய அதிசயமாக இருக்கும் என்றும் இதுபோன்று பல வழிகளில் பாதிரியார்கள் தீண்டாமையை கடைப்பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாதிரியார், ஆயர், பேராயர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் சாதி மறுப்பு திருமணங்களை நடத்த விடுவதில்லை என்றும் பதவிக்காலம் முடிந்து செல்லும் போது தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை பரிந்துரைத்து தொடர்ந்து தலித்துகளை ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஐஐடி கல்வி நிறுவனங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக பெரியாரிய மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் கருத்தரங்கம், போராட்டம் நடத்துகின்றனர். இங்கு பெரியாரியவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி கடல் கடந்து வேலை பார்க்க சென்ற போதும் அமெரிக்காவில் சிஸ்கோ நிறுவனத்தில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறி இடதுசாரிகள் அங்கும் அவர்களை குறி வைத்து வருகின்றனர்.
ஆனால் இங்கு சாதிக் கொடுமையில் இருந்து தப்பிக்க கிறிஸ்தவ மதத்தை தழுவுங்கள் என்று சொல்லி மதம் மாற்றி விட்டு தற்போது இந்த அளவுக்கு தீண்டாமைக் கொடுமையை கடைப்பிடிக்கும் கிறிஸ்தவ மத தலைவர்களைப் பற்றி இவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. இதிலிருந்தே இந்து மதத்தை அழிப்பதே பெரியாரிய மற்றும் இடதுசாரி ஆதரவாளர்களின் நோக்கம் என்றும் தலித்துகளுக்கு நீதி பெற்றுத் தருவது அல்ல என்றும் தெளிவாகிறது.