கியூபாவில் வலுவாகும் மக்கள் போராட்டம் - சரிகிறதா கம்யூனிச கோட்டை?
By : Saffron Mom
கியூபாவில் முன்னெப்போதுமில்லாத வகையில் கம்யூனிச அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கியூபாவில் சமூக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக பொருளாதார திணறல் கொள்கையை (policy of economic suffocation) அமெரிக்கா பின்பற்றுவதே இத்தகைய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம்" எனக் குற்றம் சாட்டினார்.
கியூபா, 1962 முதல் அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான கியூபர்கள் ஞாயிற்றுக்கிழமை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்: "சர்வாதிகாரம் ஒழிக" என்று கோஷமிட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கியூபாவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நீண்டகாலமாக நிலவும் மின்சாரம் மற்றும் உணவு பற்றாக்குறை மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர், குறைந்தது பத்து பேர் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் போலீஸ் அதிகாரிகள், பிளாஸ்டிக் பைப்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, பல நூறு போராட்டக்காரர்கள் தலைநகர் ஹவானா வழியாக "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்" என்று கோஷமிட்டனர், இராணுவம் மற்றும் போலீஸ் இந்த போராட்டத்தை கடுமையாக கண்காணித்தனர். போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் கியூபாவில் மொபைல் இன்டர்நெட் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டது. இத்தகைய போராட்டங்கள் நடத்த கியூபாவில் அனுமதியில்லை. இன்வென்டாரியோ என்ற தளத்தின் படி, மொத்தம் 40 ஆர்ப்பாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன என்று தெரிகிறது.
உள்ளூர் அறிக்கைகளின் படி உணவுக்காக நிற்கும் நீண்ட வரிசைகள், மோசமான மின்சார மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றால், ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. 11.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கியூபா, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகக் கடினமான கட்டத்தை அனுபவித்து வருகிறது. கொரானா வைரஸ் புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகளில் புதிய உச்சத்தை தினமும் எட்டி வருகிறது.
ஹவானாவிற்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸ் என்ற நகரத்தில் போராட்டங்கள் முதலில் ஆரம்பித்தது. அங்கு பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கியமாக இளைஞர்கள் வீதிகளில் இறங்கினர்.
மக்களின் கோபத்தைத் தனிப்பதற்கு பதிலாக, டயஸ்-கேனல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தொலைக்காட்சி உரையில், "நாட்டின் அனைத்து புரட்சியாளர்களும், கம்யூனிஸ்டுகளும் தெருக்களுக்கு செல்லுங்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை தீர்க்கமான, உறுதியான மற்றும் தைரியமான வழியில் எதிர்கொள்ளுங்கள்" என்னும் பொருள்பட பேசியது மக்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது.
கியூபாவில் நடக்கும் "பல்லாண்டு கால அடக்குமுறையை" முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அழைப்பு விடுத்ததை அடுத்து ஆர்ப்பாட்டங்களுக்கு வேகம் அதிகரித்தது. "கியூபா மக்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு" பிடன் கியூப அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
"நாங்கள் கியூப மக்களுடன் துணை நிற்கிறோம், இந்த முக்கியமான தருணத்தில் தங்கள் மக்களின் பிரச்சினைகளை கவனித்து, அவர்களின் தேவைகளுக்கு கியூபா சேவை செய்யுமாறு அமெரிக்கா கேட்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
2014 மற்றும் 2016 க்கு இடையில் பராக் ஒபாமாவின் ஆட்சியில் கியூபா மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைகளை மறுபடியும் வலுப்படுத்தியதிலிருந்து அமெரிக்க-கியூபா உறவுகள் மறுபடியும் பதற்றமாகவே உள்ளன. பிடன் அரசாங்கம் இதில் எந்தவித மாற்றங்களும் மறுபடியும் செய்யவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகள் காரணமாக கியூபாவின் பொருளாதாரம் 2020 ல் 11% வீழ்ச்சியடைந்தது.
மெக்ஸிகோவும் ரஷ்யாவும் இது குறித்து திங்களன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இத்தகைய போராட்டங்களை சாக்காக கொண்டு கியூபாவில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர். "ஒரு இறையாண்மை கொண்ட அரசின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு" எதிராக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.