தானாக கற்கள் நகரும் மரணசமவெளி
அமெரிக்காவில் கலிபோர்னிய மாகாணத்தில் உள்ள 'ரேஸ் டிரெக் பிளாசா' என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதாவது 'மரணசமவெளி'.
By : Karthiga
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சமவெளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனிதர்களையோ, உயிரினங்களையோ, மரம்,புல், பூண்டுகளையோ பார்க்க முடியாது. எந்தவிதமான உயிரினங்களும் இங்கே இல்லாததால் இதை 'மரணசமவெளி' என்று அழைக்கிறார்கள். இங்கு வறட்சித்தன்மை அதிகமாக உள்ள காலங்களில் நிலங்கள் வெடிக்கும். எப்படி என்றால் குளத்தில் தண்ணீர் வற்றினால் வறட்டி போல வெடித்திருக்கும் அல்லவா? அதுபோல.
அப்படி வெடிக்கும் இடங்களில் எல்லாம் ஐஸ் படர்ந்து இருக்கும். இங்கு இன்னொரு மர்மமும் இருக்கிறது.இந்த மர்ம பூமியில் கற்கள் தானாகவே நகர்ந்து செல்லுமாம். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை யாருக்குமே தெரியாது. கற்கள் தானாக நகர்வதற்கான அடையாளங்கள் மட்டும் தெளிவாக உள்ளன. இந்த இடத்தில் உள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்த முழு பிரதேசத்தையுமே சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பரந்த நிலப்பரப்புக்கு அருகே உள்ள மலையில் இருந்து கற்கள் உடைந்து துண்டுகளாக விழுகின்றன. அவை இந்த பகுதியில் இப்படி சுற்றித் திரிகின்றன .
சில கற்கள் பத்தாயிரம் அடி தூரம் வரை நகருகின்றனவாம். இன்னும் சில கற்களோ ஒரு அடி தூரம் மட்டுமே நகர்கின்றனனவாம். இந்த மர்ம பிரதேசம் பற்றி முதன் முதலில் 1948 ஆம் ஆண்டில் தகவல் வெளியானது. 1972-80 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வுகள் சூடு பிடித்தன. அங்கே வேகமாக வீசும் காற்றின் காரணமாக கற்கள் நகர்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இங்கே கடும் காற்று வீசுவதே இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புரியாத புதிராய் விளங்கும் இந்த பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும், கற்கள் நடமாட்டமும் ஆய்வுகளும் மட்டும் விடாமல் நடந்து கொண்டே இருக்கின்றன.