அரசு பணத்தில் ஆய்வு என்ற பெயரில் தனியார் ரிசார்ட் திறந்துவைக்க சென்ற தி.மு.க அமைச்சர்கள் - 'எங்க வயித்துல அடிச்சுட்டு இப்படி போறீங்களே?' என புலம்பும் கூலி தொழிலாளிகள்
அரசு பணத்தில் ஆய்வு செய்ய வந்துவிட்டு தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தி.மு.க அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம் என அப்பாவி தொழிலாளிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
By : Mohan Raj
அரசு பணத்தில் ஆய்வு செய்ய வந்துவிட்டு தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தி.மு.க அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம் என அப்பாவி தொழிலாளிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த உப்பு நிறுவனத்தில் வாலிநோக்கம், சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 தொழிலாளர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அரசு உப்பு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளின் தரம் மற்றும் அங்கு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறவிருந்த மேடைக்கு கூட செல்லாமல் அலுவலகத்திற்குச் சென்ற அதிகாரிகள் அறையில் அதிகாரிகளுடன் 45 நிமிடங்கள் உரையாடினர். அமைச்சர்களை நேரில் பார்த்து மனுக்களை கொடுப்பதற்காக அப்பாவி கூலி தொழிலாளர்கள் காத்திருந்தனர். அமைச்சர்களை சந்திக்க அலுவலகத்திற்குள் அனுமதிக்குமாறு தொழிலாளர்கள் கூறிய போது அலுவலகத்துக்குள் அனுமதி இல்லை அமைச்சர்கள் வெளியே வரும் போது மனுக்களை கொடுத்து கோரிக்கையை கூறுங்கள் என அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த அமைச்சர்கள் உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்யாமல் பெயரளவுக்கு வெளியே நின்றிருந்தபடி நிறுவனத்தை பார்த்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் எங்களிடம் குறைகளை கேட்காமல் கூட இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறார்கள் என தொழிலாளர்கள் கேட்டபோது சாயல்குடி அருகே கனிராஜபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் தனியார் சொகுசு ரிசார்ட்டை திறந்து வைக்க சொல்வதாக அதிகாரிகள் கூறியதை கேட்டு தொழிலாளர்கள் கொந்தளித்தனர்.
அரசு பணத்தில் ஆய்வு செய்வதற்காக வந்துவிட்டு தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் சிவாஜி, 'தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை ஆய்வு செய்வதற்காக கூறிய அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர் நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது, ஒலிபெருக்கி வைக்கப்பட்டிருந்தது.
நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளும் சி.ஐ.டி.யூ நிர்வாகிகளும் எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுகளோடு காத்திருந்தோம். அமைச்சர்கள் வந்தார்கள் அறைக்கு சென்றார்கள், சிறிது நேரம் அறையில் அமர்ந்திருந்தார்கள் என்ன பேசினார்கள் என யாருக்கும் தெரியாது. பிறகு கீழே இறங்கி காரில் ஏறி சென்று விட்டார்கள். தொழிற்சங்கத்தை சந்திக்கவில்லை, தொழிலாளர்களை சந்திக்கவில்லை எந்த குறையும் கேட்கவில்லை.
காரில் ஏறி புறப்பட்டு விட்டார்கள் தொழிலாளிக்கு டி.ஏ பணம் கேட்டால் கொடுக்க பணம் இல்லை என கூறுகிறார்கள். எட்டு மாதங்களாக பணம் வழங்கவில்லை இந்த நிறுவனம், ஆனால் ஆய்வு என்ற பெயரில் அரசாங்க பணம் இப்படி வீணடிக்கப்படுகிறது. தொழிலாளிகளும், தொழிற்சங்களும் அமைச்சர் ஆய்வுக்கு தான் வருகிறார்கள் புதிய பகுதியை விசாரித்து இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவார்கள், நிறுவனங்களிடம் அறிவிப்பார்கள் என ஆர்வமுடன் காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆனால் கண்துடைப்புக்கு ஆய்வு நடத்தி விட்டு தனியார் ரிசார்ட் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்றது கண்டிக்கத்தக்கது' என கூறினார்.
மேலும் பேசிய அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் தொழிலாளிகளின் நிலைகுறித்து அமைச்சர்களிடம் எடுத்து கூறி அவர்களை சந்திக்க வைத்திருக்க வேண்டும், ஆனால் அவர்களும் பேசாமல் அமைச்சர்கள் பின்னாடியே சென்றது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! திராவிட மாடல் ஆட்சி என பெருமை கொள்ளும் ஸ்டாலின் தனக்கு கீழ் உள்ள அமைச்சர்களிடம் முதலில் தொழிலாளர்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்' என வேதனையுடன் தெரிவித்தார்.