Kathir News
Begin typing your search above and press return to search.

உரிமம் காலாவதியான "காப்பகத்தில்" தங்க வைக்கப்பட்டாரா தஞ்சாவூர் மாணவி? வாட்டிகன் அனுப்பிய நிதியில் செயல்பட்டதா? - வெளிவரும் உண்மைகள்!

உரிமம் காலாவதியான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாரா தஞ்சாவூர் மாணவி? வாட்டிகன் அனுப்பிய நிதியில் செயல்பட்டதா? - வெளிவரும் உண்மைகள்!

ShivaBy : Shiva

  |  1 Feb 2022 2:33 PM GMT

கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி மதம்‌ மாற மறுத்ததால் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவி பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி இருந்ததாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், இன்று பள்ளியில் ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அது குழந்தைகள் காப்பகம் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதமே காப்பகம் செயல்படுவதற்கான உரிமம் காலாவதி ஆகிவிட்டது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

மாணவி சித்தி கொடுமை தாங்காமல் தான் விடுமுறை நாட்களில் கூட வீட்டுக்கு செல்லாமல் கன்னியாஸ்திரிகளுடன் "விடுதியிலேயே" தங்கியிருந்ததாக பள்ளி தரப்பில் கூறப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக காவல்துறை தரப்பில், கடந்த 2020ஆம் ஆண்டு மாணவி சித்தி தன்னை கொடுமைப்படுத்துவதாக 1098 சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகக் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவி தற்கொலை செய்ய மதம் மாற வற்புறுத்தப்பட்டது தான் காரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரீதியில் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மகளிர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சரும் விசாரணை முடியும் முன்னரே இந்த வழக்கில் மாணவி மதம் மாற வற்புறுத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று ஊடகங்களில் தெரிவித்தனர்.

இதனால் தங்கள் பக்க நியாயத்தை காவல்துறை விசாரிக்கவில்லை என்றும் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று தோன்றவில்லை என்றும் கூறி மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் இருப்பதை காரணம் காட்டி மாநில அரசு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டியிருந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஜனவரி 30, 31ம் தேதிகளில் மாணவி படித்த தூய இருதய பள்ளி, தங்கியிருந்த விடுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர் ப்ரியாங் கனூங்கு, மாணவி தங்கியிருந்தது விடுதி அல்ல என்றும், குழந்தைகள் காப்பகம் ஆகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், காப்பகத்தின் உரிமம் கடந்த நவம்பர் மாதமே காலாவதி ஆகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஊடகங்கள் அனைத்தும் மாணவி "விடுதியில்" தங்கியிருந்ததாக செய்தி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அவர் தங்கியிருந்த ஒரு "காப்பகம்" என்ற தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பகங்கள் உடன் செயல்படும் பல கிறிஸ்தவ பள்ளிகளில் உடல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த குறிப்பிட்ட தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

மாணவி தூய மைக்கேல் குழந்தைகள் காப்பகம் என்ற இடத்தில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு காப்பகமாக பதிவு செய்யப்பட்டு இருந்த போதும் இது பற்றிய தகவல்கள் எங்கும் காணக் கிடைக்கவில்லை. UCA News என்ற கத்தோலிக்க செய்தி தளத்தில் மட்டுமே இந்தப் பெயர் காணக்கிடைக்கிறது. அங்கும் தூய மைக்கேல் குழந்தைகள் காப்பகம் கும்பகோணம் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்படும் "அனாதைகள் இல்லம்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்கேல்பட்டியில் செயல்படும் தூய இருதய பள்ளியை நிறுவி நடத்தி வரும் Franciscan Sisters of Immaculate Heart of Mary சபை மட்டுமே 5 FCRA NGOக்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றின் ஆண்டு அறிக்கையில் தூய இருதய பள்ளிக்கு நிதி செலவிடப்பட்டதாக வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், பள்ளிக்கும் தூய மைக்கேல் காப்பகத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதி சேகரிக்கப்பட்டு செலவிடப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்.
















2018-19ஆம் ஆண்டுக்கான THE PONTIFICAL MISSIONARY COOPERATION AND SOLIDARITY BETWEEN CHURCHES என்ற அறிக்கையில், வாடிகனில் இருந்து மைக்கேல்பட்டி, மேகளத்தூர், புள்ளம்பாடி ஆகிய இடங்களில் உள்ள மூன்று "குழந்தைகள் காப்பகங்களுக்கு" $5,500 டாலர் நிதியாக அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் யூடியூபர் மாரிதாஸ் கத்தோலிக்க திருச்சபைகள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேரை மதமாற்றம் செய்து இருக்கிறோம் என்பது குறித்த தகவல்களை வாடிகனுக்கு அனுப்புவதாக ஆதாரங்களை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அரியலூர் மாணவி மதம் மாற வற்புறுத்தப்பட்டதும், மறுத்ததற்காக கழிவறை சுத்தம் செய்யவும், சமைக்கவும், பிற வேலைகளை பார்க்குமாறும் கொடுமைப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு வலுப்பெறுகிறது. காவல்துறையும் அமைச்சர்களும் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் வெளியிட்டு மாணவி மரணத்தின் பின்னணியில் மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக மாணவி 2020ஆம் ஆண்டு சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டு சித்தி கொடுமை படுத்துவதாக புகார் அளித்ததாக கூறப்பட்டது. சைல்டு லைன் என்ற அமைப்பு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து இயங்கும் ஒரு தனியார் அமைப்பு தான். சைல்டு லைன் ஒரு FCRA NGO என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள NGOக்களுடன் இணைந்து தான் 1098 என்ற சிறார்களுக்கான உதவி எண்ணையே செயல்படுத்துகிறது.

முதலில் மாணவி விடுதியில் தங்கியிருந்தபோது சைல்டு லைன் எண்ணை தொடர்பு கொண்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பின்னர் அவருடைய உறவினர் ஒருவர் "சமூக ஆர்வலர்" ஒருவரின் உதவியுடன் அரியலூர் சைல்டு லைனுக்கு புகார் அளித்தது தெரியவந்தது. அரியலூரில் Kumbakonam Multi-purpose Social Service Society(KMSSS) மற்றும் Rural Education and Action Development (READ) என்ற இரு அமைப்புகள் தான் சைல்டு லைன் சார்பில் இயங்குகின்றன.

இதில் KMSSS கும்பகோணம் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இயங்கும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு. இதுவும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் ஒரு FCRA NGO. இதன் தலைவரே கும்பகோணம் திருச்சபையின் ஆயர்‌ தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கீழ் தான் தூய இருதய பள்ளியும் தூய மைக்கேல் குழந்தைகள் காப்பகமும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. READ என்பதும் மற்றொரு FCRA உரிமம் பெற்ற அமைப்பே. இதற்கு வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து நிதி வருகிறது.

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் கிறிஸ்தவ அமைப்புக்களே இருக்கும் நிலையில், தனது மரண வாக்குமூலத்தில் தெளிவாக தான் மதம் மாற கேட்கப்பட்டதாகவும், மறுத்த பின் "காப்பகத்தில்" கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறிய நிலையிலும் இதன் பின்னணியில் மத மாற்றம் இல்லை என்று அமைச்சர்களும் காவல்துறையும் தெரிவித்தது ஏன் என்று புரியவில்லை. சிபிஐ விசாரணையிலாவது உயிரிழந்த அப்பாவி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News