Kathir News
Begin typing your search above and press return to search.

இயேசு அழைக்கிறார் அமைப்பில் நிதி முறைகேடு? ₹600 கோடி பெற்றதாக வரும் தகவல்கள் உண்மையா?

இயேசு அழைக்கிறார் அமைப்பில் நிதி முறைகேடு? ₹600 கோடி பெற்றதாக வரும் தகவல்கள் உண்மையா?

இயேசு அழைக்கிறார் அமைப்பில் நிதி முறைகேடு? ₹600 கோடி பெற்றதாக வரும் தகவல்கள் உண்மையா?

Pradeep GBy : Pradeep G

  |  23 Jan 2021 7:00 AM GMT

இயேசு அழைக்கிறார் என்ற‌ பெயரில் கிறிஸ்தவ அமைப்பை நடத்தி வரும் பிராட்டஸ்டன்ட் மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்திருப்பதாத வந்த தகவலின் அடிப்படையில் சோதனையிடுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

₹1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு தேர்தல் நிதியாக வழங்க ₹600 கோடி ரூபாய் பெறப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்த பின்னர் தகவல் வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 750 ஏக்கர் பரப்பில் பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சிறுபான்மையின கல்வி நிறுவனம். இதை வெளிப்படையாகவே விளம்பரம் செய்து ₹5 கோடி கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் கூறுகிறது இந்த கல்வி நிறுவனம்.

பிரபல மதபோதகர் டி.ஜி.எஸ் தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட 'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு உலகம் முழுவதும் 126 ஜெப கோபுரங்கள் உள்ளன. தங்களுக்காக ஜெபம் செய்யுமாறு ஒரு மாதத்தில் 5 லட்சம் பேர் இந்த ஜெப கோபுரங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதாக கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு வரை இவ்வாறு தொலைபேசியில் அழைத்து ஜெபம் செய்ய வேண்டுகோள் விடுப்பதை இவர்கள் ஒரு வியாபாரமாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர், குடும்பம், குழந்தைகள், வேலைவாய்ப்பு, வியாபாரம், மன அமைதி என்று இவ்வாறு ஜெபம் செய்யச் சொல்லி கேட்பதில் பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களுக்கு கடந்த காலத்தில் பணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பினாலோ அல்லது சம்பாதித்தது போதும் என்றோ பணம் வசூலிப்பதை தற்போது நிறுத்தி விட்டார்கள்.

இவர்களது குடும்பமே, இரு மகள்கள், மகன் மற்றும் மருமகள் உட்பட ஊழியத்தில் ஈடுபடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் எழுதிய புத்தகங்கள், பாடிய இயேசு பாடல்களின் சிடிக்கள், பைபிள் வாசகங்கள் அடங்கிய பேனா, நோட்டு, பை, கீ செயின் என்று வேறு விற்பனை செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் போதாதென்று வெளிநாடுகளிலும் நன்கொடை‌ வசூலிக்கிறார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து கிறிஸ்தவ NGOக்களும் செய்வது தானே இது என்கிறீர்களா? இவர்கள் வெளிநாட்டில் நிதி திரட்டி அதை இங்கே கொண்டு வர அங்கு வேறு NGOக்கள் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தொடங்கிய Jesus Calls, Samiti for Education, Environment, Social and Health Action Karunya மற்றும் Karunya Educational and Research Trust என்ற பெயர்களில் மூன்று FCRA NGOக்கள் இந்தியாவில் இயங்குகின்றன.

இதே பெயர்களில் அமெரிக்காவில் மூன்று NGOக்கள் Jesus Calls International, SEESHA Humanitarian Foundation, Karunya Educational and Research Trust என்ற மூன்று அமைப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த மூன்றையும் தினகரன் குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர், அதற்காக சம்பளமும் பெறுகின்றனர். இந்த அமெரிக்க அமைப்புக்களில் இருந்து இந்தியாவில் உள்ள அமைப்புக்களுக்கு நிதிப் பரிமாற்றம் நடக்கிறது.

இவ்வாறு வரும் பணத்தில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை கணக்குக் காட்டியதிலும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. இயேசு அழைக்கிறார் அமைப்புக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இஸ்ரேல் என 10 நாடுகளில் ஜெப கோபுரங்கள் உள்ளன.

இதில் அமெரிக்காவில் உள்ள மூன்று அமைப்புகளில் Jesus Calls International இந்தியாவில் உள்ள Jesus Calls அமைப்புக்கு 2017-2019 கால கட்டத்தில் $ 4,40,000 அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளது. இதே காலகட்டத்தில் இந்திய அமைப்பு தாக்கல் செய்த ஆண்டறிக்கைகளில் ₹ 1,75,44,904 ரூபாய் அமெரிக்க அமைப்பிடம் இருந்து பெற்றதாக கூறியுள்ளது. இந்த சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த பட்சம் ₹63 ரூபாயில் இருந்து அதிகபட்சம் ₹74 ரூபாய் வரை இருந்தது.

அப்படிப் பார்த்தால் அமெரிக்க அமைப்பு தாக்கல் செய்த கணக்குகளின் படி இந்திய அமைப்பு ₹2,77,20,000 ரூபாய் நிதி பெற்றிருக்க வேண்டும். இது குறைந்தபட்ச மதிப்பீடு மட்டுமே என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அதே போல் 2016-19க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் அமெரிக்க Jesus Calls International அமைப்பு SEESHA India அமைப்புக்கு $1,01,678 அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்துள்ளது. இது ஒரு டாலருக்கு ₹64 ரூபாய் என்ற மதிப்பில் ₹65,07,392 என்று வருகிறது. ஆனால் SEESHA India 2019ஆம் ஆண்டு மட்டுமே, அதுவும் ₹6,83,578 பெற்றதாக FCRA கணக்கு தாக்கல் செய்துள்ளது‌.

ஒரு வேளை 2018ஆம் ஆண்டில் Jesus Calls International $10,000 டாலர் SEESHA Indiaவுக்கு அளித்த நிதியை மட்டும் ₹6,83,578 என்று 2018-19ஆம் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு இருக்கலாம். அப்படியானால் அதற்கு முன் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட நிதி என்ன ஆனது? அதை FCRA ஆண்டறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.

அத்தோடு 10 நாடுகளில் பரவி இருக்கும் மத போதகர் தினகரனின் அமைப்புகள் இது போன்று எவ்வளவு நிதி அனுப்பிக் கொண்டு இருக்கின்றன, அவற்றில் எவ்வளவு கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கும் விடை இல்லை. எனவே இந்த வருமான வரித்துறை சோதனை இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

References

FCRA Website

USA IRS Returns

JesusCalls

Next Story
கதிர் தொகுப்பு
Trending News