உள்ளூர் மக்களுக்கு தனியார் துறையில் 75% ஒதுக்கீடு வழங்கும் ஹரியானாவின் சட்டம் சரியா? வலுக்கும் எதிர்ப்புகள்!
By : Saffron Mom
ஒரு மாதத்திற்கு 50,000க்கும் குறைவான ஊதியம் தரும் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதத்தை உள்ளூரில் வசிப்பவர்களுக்கு ஒதுக்குவதற்கான ஹரியானா அரசாங்கத்தின் புதிய சட்டம் பலவித எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளது.
ஹரியானா ஆளுநர் சத்யதேவ் செவ்வாயன்று, 'ஹரியானா வேலை வாய்ப்புவழங்கல் மசோதா 2020'க்கு தனது ஒப்புதலை வழங்கியிருந்தார். இது அம்மாநிலத்தில் தனியார் துறையில் உள்ளூரை சேர்ந்தவர் என குடியுரிமை சான்று (domicile certificate) வைத்திருப்பவர்களுக்கு 75 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது.
தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள் என்று அனைத்திற்கும் இச்சட்டம் பொருந்தும். ஆரம்பத்தில் இது 10 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் பணியாளரை கண்டுபிடிக்க நிறுவனம் தவறினால் இந்த இட ஒதுக்கீடிற்கு அரசாங்கம் விலக்கு அளிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டாலும், நிறுவனங்கள் இந்த சட்டத்தின் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்பதும், தனியார் நிறுவனங்கள் தங்களது பதிவு மற்றும் பணியாளர்கள் குறித்த முழுமையான விவரங்களை தங்கள் தளத்தில் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்பதும் நியாயமற்ற கோரிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.
நாட்டின் வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் சேவை துறை மையமாக விளங்கும் ஹரியானாவில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை இச்சட்டத்தால் கெடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஒரு காலி இடத்தை நிரப்புவதற்கு சிறந்த திறமைகளை கொண்டவர்களை பணி அமர்த்துவதை இந்த ஒதுக்கீடு தடுக்கிறது. இதில் உள்ளுரை சேர்ந்தவர் நான்காவது, ஐந்தாவது சிறந்த நபராக இருக்கலாம், அவர் உண்மையிலேயே உள்ளூரை சேர்ந்தவர் தானா என்பதை சரிபார்க்க நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும்.
வளர்ந்து வரும் IT மற்றும் அது தொடர்பான தொழில்கள் உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அல்லது புனேவுக்கு நகர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் உணர்வை இந்த ஒதுக்கீடு மீறுகிறது. வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவில் ஒருமித்த நாட்டை கட்டமைக்க உருவாக்கும் முயற்சிகளை இந்த ஒதுக்கீடு தடுக்கிறது. வேறு பல மாநிலங்களிலும் இதே போன்ற சட்டங்களை உருவாகி அரசியலையும் பொருளாதாரத்தையும் மேலும் சிதைக்கலாம்.
இந்த ஒதுக்கீடு அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கான சமத்துவத்திற்கான உத்தரவாதத்தையும், பிறந்த இடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற பிரிவு 15ன் உத்தரவாதத்தையும், நாட்டில் எங்கும் வேலை செய்யும் உரிமைக்கான பிரிவு 19 உத்தரவாதத்தையும் மீறுகிறது.
தகவல் தொழில்நுட்ப மையம், ஆட்டோ மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. இந்த ஒதுக்கீடு மூலமாக இந்த நகரும் மாநிலமும் வணிகத்திற்கு உகந்த இடம் அல்ல என்று தெரிவித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிலதிபர்கள் இந்த புதிய சட்டத்தை பிற்போக்குத்தனம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கத்தின் முடிவை நீதிமன்றத்தில் எதிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை தேடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது பல காலமாக ஒழிக்கப்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் ராஜ்யத்தின் மற்றொரு சகாப்தத்தை ஆரம்பித்து வைக்கும் என்று கூறினர்.
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக விளங்குகிறது குருகிராம். கடந்த இருபது வருடங்களில் மாருதி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா தவிர பெரிய ஆட்டோ மற்றும் கார் பகுதி தயாரிப்பாளர்களுக்கும் ஹரியானவை தலைமையகமாக கொண்டு உள்ளனர். இதே நேரத்தில் ஆடை ஏற்றுமதி மற்றும் தொழில் துறையின் முக்கிய பகுதியை இது உருவாக்குகிறது.
இந்த புதிய சட்டம் வெளிநாடுகளை தலைமையிடமாகக் கொண்ட MNC மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் தவறான செய்தியை அனுப்பும் என்று ஒரு நிர்வாக இயக்குனர் வினோத் சூத் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பதிலாக உள்ளூர் இளைஞர்களுக்கு இந்த வேலைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என்றாலும் ஹரியானாவின் இளைஞர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான சிறந்தவழி அவர்களது திறன்களை வளர்ப்பது தான் என்று தாங்கள் நம்புவதாக குருகிராம் நகரின் சேர்ந்த ஐடி நிறுவனமான நகோராவின் தலைமை நிர்வாக அதிகாரி மனாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குருகிராம் மற்றும் ஹரியானாவில் உள்ள ஏற்றுமதி தொழில் மற்றும் பிற உற்பத்தி பிரிவுகளை அழிக்கும் என்றும் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவரான மன்மோகன்சிங் கூறுகிறார். ஏற்கனவே முதலீட்டை ஈர்ப்பதில் ஹரியானா கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது என்றும் இது புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜியும் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு மாநில அளவில் முதலீடுகளை ஈர்ப்பது முக்கியம் என்றும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பதை அரசு தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பாரத பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன், நாட்டிற்குள் ஒரு ஒருங்கிணைந்த தொழிலாளர் சந்தையை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன், அரசாங்கமே பின்வாங்குவது தான் சரியான முடிவாக இருக்கும்.