ஜோ பிடென் நிர்வாகமும், இந்திய-அமெரிக்க உறவுகளும்- மோசமடைந்ததா, முன்னேற்றமா?
By : Saffron Mom
இந்தியா, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து QUAD என்ற நான்கு நாடுகள் கொண்ட குழுவிற்கான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டது. இந்தக் கூட்டத்தின் முக்கியமான உறுதிப்பாடு என்னவெனில், 'விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, இறையாண்மையை மற்றும் ஒருமைப்பாட்டை மதித்து சட்டம், வெளிப்படைத்தன்மை, சர்வதேச கடல் பகுதிகளில் செல்ல சுதந்திரம், சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்ப்பது' ஆகும்.
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பிடென் நிர்வாகம், அதன் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த கூட்டத்தை கூட்ட முடிவு செய்தது, அமெரிக்காவின் முன்னுரிமைகள் பற்றியும் இந்த நான்கு நாடுகளின் நீடித்த உறவு எந்த அளவு முக்கியம் என்பதை குறித்தும் பேசுகிறது. கடந்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையில் ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.
இரு நாடுகளும் முன்னெடுக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியும் பேசினர். முக்கியமாக இரண்டு விஷயங்கள் அவர்களுடைய பேச்சில் மையமாக இருந்தது. காலநிலை மாற்றம் மற்றும் சுதந்திரமான, திறந்த இந்தோ-பசுபிக்.
ஜோ பிடென் நிர்வாகத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்னாள் வந்த டிரம்ப் நிர்வாகத்துடன் ஆன அதன் வேறுபாடுகளை காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜோன் கெரியை சிறப்பு காலநிலை மாற்ற தூதராக நியமித்ததிலிருந்து, பாரிஸில் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது வரை , உலக அளவில் பிரதான அரசியல் நிகழ்வுகளில் அமெரிக்கா மறுபடியும் இணைந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் உள்ள இந்தியாவும் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக இலக்குகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலநிலை மாற்றத்தில் எதிர்மறையான எண்ணத்துடன் கருதப்பட்ட இந்தியாவிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தங்களது இருதரப்பு உறவில் அடுத்த கட்டத்தை வடிவமைக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான அம்சமாக மட்டுமல்லாமல், அவர்களுடைய அதிக எண்ணிக்கையிலான கூட்டாளிகளுக்கும் உருவாகி வரும் கடல் சார்ந்த விவகாரங்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
சீனாவின் ஆக்ரோஷமான காலத்தில், ஜோ பிடென், "விதி அடிப்படையிலான, சர்வதேச ஒழுங்கை உறுதிப்படுத்த ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை" மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை ஊக்குவிக்க நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
சுதந்திரமாக கடலில் பயணம் செய்தல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் QUAD மூலம் ஒரு வலிமையான பிராந்திய கட்டமைப்பு இருக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் பிடென் நிர்வாகம் இந்தியாவிடம் தொடர்பு கொண்ட முறை வலுவானதாகவும் முக்கியமானதாகவும் உள்ளது. இந்த உறவின் வலிமையை இன்னும் சந்தேகிப்பவர்களும் உள்ளனர். இதன் காரணமாக இந்தியா மற்றும் அமெரிக்க உறவில் இந்திய மேட்டுக்குடியின் எண்ணங்கள் மாறுபட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மேலை நாடுகள் தலையிடக்கூடாது என்று கருத்து தெரிவித்தவர்கள் கூட இன்று இந்திய இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட அமெரிக்காவை தலையிட வைக்க முயற்சிக்கிறார்கள்.
ஒவ்வொரு நிர்வாகமும் தனித்துவமானது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வெளியுறவுக் கொள்கைகளும் உள்நாட்டு முன்னுரிமைகளும் உள்ளன. இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்த முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 20 ஆண்டுகளில் வித்தியாசமான நிர்வாகங்கள், வித்யாசமான தலைமைத்துவ பாணிகள் எல்லாம் இருந்தாலும் இருதரப்பு உறவுகளும் வலிமையடைந்து வந்திருக்கின்றன.
பராக் ஒபாமா ஆட்சிக்கு வரும் முன் சிவில் நியூக்ளியர் ஒப்பந்தத்தை ரத்து செய்வார் என்றும், காஷ்மீர், விரிவான ஆப்கானிஸ்தான் பிரச்சனையின் ஒரு பகுதி என்று கூறியபோதும் நான் கவலை அடைந்தோம். ஆனால் அவர் அதிபர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய போது, இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்தியாவின் ஒரு 'சிறந்த நண்பராக' தன்னை தானே அறிவித்துக் கொண்டார்.
இதேபோல் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பிரச்சாரத்தின் பொழுது இந்தியாவையும் சீனாவையும் ஒரே இடத்தில் சேர்த்து எதிர்த்துப் பேசிய போதும் நாம் கவலை அடைந்தோம். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் அவர் ஆட்சியில் இருந்த போது நிகழ்த்திய விதம் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு விரிவான இந்தோ-பசிபிக் கட்டமைப்பிற்கு அவர் அளித்த பங்களிப்புகள் மறக்க முடியாது. இது இந்தியாவின் நன்மைக்கே அமைந்தது.
இப்பொழுது பிடென் நிர்வாகத்தில் மனித உரிமைகள் விவகாரங்கள் இந்த உறவை தகர்த்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சில ஆளும் கட்சியை பிடிக்காதவர்கள் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கோரி அமெரிக்காவை நேரடியாகவே வற்புறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பிடென் நிர்வாகம் என்ன செய்வார்கள் செய்ய மாட்டார்கள் என்பது இரண்டாவது விஷயம். மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்கள், அரசியல் பிரச்சினைகள், சமூக பொருளாதார விவகாரங்களை சீர்திருத்தும் எண்ணம் பல மேலை நாடுகளில் நிறையவே இருக்கின்றது. அமெரிக்க காங்கிரஸில், காஷ்மீர் அல்லது பஞ்சாப் குறித்த விவகாரங்கள் குறித்து மனித உரிமைகள் என்ற போர்வையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த விவகாரங்களில் இந்தியாவில் எதிர்வினைகள் எப்பொழுதுமே உறுதியானதாகவும் திட்டவட்டமாகவும் இருந்திருக்கிறது. இந்தியா உலக அரசியலின் ஓரங்களில் இருந்த பொழுதே இந்தியா நம் உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை. தற்பொழுது இந்தியா ஒரு வலிமையான அரசாங்கத்தை கொண்டு உள்ளது. லட்சியமுடைய மக்களையும் கொண்டுள்ளது. 1980 களிலும் 90 களிலும் இந்தியா மிகவும் பலவீனமான நிலையில் இருந்த பொழுது கூட உலகத்தை எதிர்த்து நிற்க முடிந்தது என்றால் தற்பொழுது அமெரிக்கா நடந்து கொள்ளும் விதத்தை பற்றி இந்தியா கவலைப்படுவதற்கு என்ன அவசியம் இருந்துவிடப் போகிறது?
இன்றைய இந்தியா சீனாவை எதிர்த்து நின்று அதனுடைய திட்டங்களை முறியடிக்க முடியும் என்றால், அமெரிக்காவில் இருந்து வரும் சில பல அறிவுரைகளை, தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு தன்னம்பிக்கை உள்ளது. இந்திய-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து வளர்ச்சியடையும். இந்திய ஜனநாயகம் தன்னுடைய சொந்த வழியில் முன்னேறும். இந்தியாவிற்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது, உள்நாட்டு மக்களிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே. அது தான் வெளிநாடுகளிலிருந்து வரும் அழுத்தங்களையும் கேள்விகளையும் சமாளிக்கும் ஆற்றலைத் தரும்.