"மதம் மாறினால்தான் குழந்தையை பார்க்க அனுமதிப்பேன்" இந்து மருமகனை மிரட்டிய கிறிஸ்தவ மாமனார்! பாய்ந்தது மதமாற்ற தடைச் சட்டம்!

கர்நாடகா: "இந்து மதத்தை மறந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறு, அப்பொழுதுதான் உன் குழந்தையை நீ பார்க்க, நான் அனுமதிப்பேன்" என்று கிறிஸ்தவ மாமனார் ஒருவர், இந்து மதத்தில் இருக்கும் மருமகனிடம் கூறிய மிரட்டல் விடுக்கும் வார்த்தைகள் இவை.
சமீபகாலமாக தென்னிந்தியாவில் கட்டாய மதமாற்றம் முழுவீச்சில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இந்து மத அடையாளங்களை அழிக்கும் நோக்கில், இந்துக்கோயில்கள் தாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் பல ஆண்டுகளாக, இந்து மதத்தில் இருப்பவர்களை பல்வேறு சூழ்நிலைகளுக்குள்ளாக்கி, அவர்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு ஆளாக்கப்படுவது, வருத்தமளிக்கும் சம்பவங்களாக இருந்து வருகிறது.
அதற்குத் தகுந்த உதாரணம், தமிழகத்தின் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரமே, பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கிறிஸ்துவப் பள்ளி, கட்டாய மத மாற்றத்திற்கு வற்புறுத்தியதால், மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிவருகிறது.
இச் சம்பவத்தை எதிர்த்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களும், பல்வேறு இந்து அமைப்புகளும் "தமிழகத்தில் வேண்டும் மதமாற்றத் தடைச் சட்டம் " என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமலிலுள்ளது . இச்சட்டத்தின் வீரியம் தற்போது அம்மாநிலத்திலுள்ள 24 வயது இளைஞனுக்கு அரணாக அமையவுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொசப்பேட்டையை அடுத்துள்ள அரவிந்த் நகரைச் சேர்ந்த "மாரப்பா" என்ற இந்து இளைஞன், அரவிந்த் நகருக்கு அடுத்துள்ள ஜங்கம் காலனியில் வசிக்கும் "சரளா" என்ற பெந்தகோஸ்தே கிறிஸ்தவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்தின் போது அப்பெண்ணின் தந்தை 'வசந்த் குமார்' மாரப்பாவுக்கு, கட்டளை ஒன்றை விடுத்தார்.அது "நீ மதம் மாறினால் தான் உனக்கு என் பெண்ணை திருமணம் செய்து வைப்பேன்" என்று கூறியுள்ளார். அவரது கட்டளையை ஏற்று மாரப்பாவும், பெந்தேகோஸ்தே சபையில் ஞானஸ்நானம் பெற்று, கடந்த 2020 ஆம் ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி சரளாவை மணமுடித்தார். ஆனால் மாரப்பா திருமணத்துக்குப் பிறகு பெந்தகோஸ்தே ஆலயத்துக்குச் செல்லாமல், இந்து கடவுள்களை தொடர்ந்து வணங்கி வந்தார். தன் மருமகன் இந்து மதத்தை பின்பற்றுவதை அறிந்த மாமனார், மாரப்பாவின் வீட்டில் புகுந்து, மாரப்பா வணங்கி வந்த இந்து கடவுள்களின் புகைப்படங்களை அகற்றிவுள்ளார். "இந்துக் கடவுள்களை வணங்கக் கூடாது" என்றும் மாரப்பாவை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்த சரளாவுக்கு கடந்த 18ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை காண தந்தை மாரப்பா சென்றபோது, மாமனார் வசந்தகுமார் "கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் குழந்தையை பார்க்க அனுமதிப்பேன்" என்று தடாலடியாக மாரப்பாவிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது. மாமனார் வசந்தகுமாருடன் இருந்த ஐவர் மாரப்பவை தாக்கினர். மேலும் "3 மாதத்திற்குள் கிறிஸ்தவ சபைக்கு வரவில்லை என்றால் விவாகரத்து செய்ய நேரிடும்" என்றும் மாரப்பாவை எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவத்தை ஹொசப் பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரில் மாரப்பா பதிவு செய்துள்ளார். இதனையடுத்து கட்டாய மத மாற்றத்திற்கு மாரப்பாவை வற்புறுத்திய 6 பேர் மீது மதமாற்ற தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.