Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் 10 ஆண்டுகளிலேயே காணாமல் போனது ஏன்? ஒரு அலசல்!

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் 10 ஆண்டுகளிலேயே காணாமல் போனது ஏன்? ஒரு அலசல்!

Saffron MomBy : Saffron Mom

  |  11 May 2021 3:35 AM GMT

34 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1977 முதல் 2011 வரை மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி, ஆட்சியை இழந்த 10 வருடங்களுக்குள் ஒரு இடத்தைக்கூட பெற முடியாத அளவிற்கு வலுவிழந்தது ஒரு அரிதான அரசியல் நிகழ்வாகும்.

வலுவான கட்சி கட்டமைப்பை கொண்ட ஒரு கட்சிக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியம் கொடுக்காமல் இருப்பது மற்றொரு அரிய நிகழ்வு. 2009 லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுடைய வலிமையை இழந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி இந்த முறை நிறைவு பெற்றிருக்கிறது.

இது எப்படி நடந்தது?

2006ல் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான இடதுசாரி முன்னணி (LF) 294 சட்டசபை இடங்களில் 236 இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. அந்தத் தேர்தலில் அவர்களுடைய ஸ்லோகன், "விவசாயம் தான் நமது அடிப்படை, தொழில் நமது எதிர்காலம்" என்பதாகும்.

2006 வெற்றிக்குப் பிறகு சிங்கூர் மற்றும் நந்திகிராம் உட்பட பல இடங்களில் பெரிய அளவிலான தொழில்துறை திட்டங்களின் அறிவிப்புகள் வந்தன. இந்த திட்டங்களுக்கான இடங்களை மாநில அரசாங்கம் கைப்பற்றத் தொடங்கிய போது பிரச்சனை வெடித்தது. இதுபோன்ற நில கையகப்படுத்துதல் விவகாரங்களில் மக்களை போராட்டங்களுக்கு வழி நடத்தியே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியோ, மக்கள் எதிர்ப்பையும் மீறி பிரச்சனையை மிகவும் தவறாக கையாளத் தொடங்கியது.

இத்தகைய திட்டங்களுக்கான எல்லா எதிர்ப்பும் 'சதித்திட்டம்' ஆகவோ 'தொழில் எதிர்ப்புக் கோட்பாடு' எனவோக் கூறி ஒதுக்கி வைத்தனர். 'மக்கள் சிறு குழந்தைகளைப் போல், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது' என்று தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பினார்கள். 2008 பஞ்சாயத்து தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட பிறகு கூட, என்ன நடக்கவிருக்கிறது என கட்சித் தலைமை கணிக்க தவறிவிட்டது. சொல்லப்போனால் தங்களுடைய சொந்த தவறுகளை மறைக்க பல யுத்திகளை கையாளத் தொடங்கினர்.

2008 பஞ்சாயத்து தேர்தல்களுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்து வந்த தங்களுடைய ஆதரவை, அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக வாபஸ் வாங்கினர்.

மம்தா பானர்ஜி 2004 மற்றும் 2006 தேர்தல்களில் பெற்ற மோசமான தோல்விகளுக்கு பிறகு இந்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொண்டார். காங்கிரஸுடன் 2009 லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி 42 லோக்சபா சீட்டுகளில் 26-ஐ கைப்பற்றியது. 1977-க்கு பிறகு முதல் முறையாக இடதுசாரி முன்னணி பாதிக்கும் குறைவான இடங்களை பெற்றது. இதற்கு காரணமாக, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவை வாபஸ் வாங்கியது தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இது உண்மையா? 2004 மற்றும் 2006 தேர்தல்களில் இடதுசாரி கூட்டணி 50 சதவிகிதத்திற்கும் மேல் ஓட்டுக்களை பெற்றிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த வாக்காளர்களே அதை விட்டு வெளியேறி 2009 மற்றும் 2011ல் 43 சதவிகிதம் மற்றும் 41 சதவிகிதமாக ஓட்டு சதவீதம் குறைந்து, CPM தோல்வி அடைந்தது.

இதற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சி, நந்திகிராமில் போலீஸ் துப்பாக்கிச்சூடு தவறு என்று ஒப்புக் கொண்டாலும், தங்களுடைய நில கையகப்படுத்தும் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இது திரிணாமுல் காங்கிரசின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

ஒருவழியாக 2011ல் 34 வருட இடது முன்னணி ஆட்சியை தூக்கி எறிந்து மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். உடல்நலக் குறைவாக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா பேசிய ஆடியோ கிளிப்களை வெளியிட்டு இருந்தாலும்கூட அது எடுபடவில்லை. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து தங்களுடைய நில கையகப்படுத்தும் கொள்கைகளை காப்பாற்றி கொண்டே இருந்தனர்.

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிவிற்கும் மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இந்த இடத்தில் ஒரு வேற்றுமை உள்ளது. 2018ல் கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. தங்களுடைய அரசியல் செல்வாக்கை இதில் பெருமளவில் பயன்படுத்தவும் செய்தது. ஆனால் இது மிகவும் மோசமாக கம்யூனிஸ்ட் கட்சியை பாதித்து, 2019 லோக்சபா தேர்தல்களில் இருபதில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

இதற்கு பிறகு ஒரு பெரிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்த பொழுது, கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. போராட்டங்களின் போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கி சமாதானப்படுத்த முயற்சித்தனர். 2021ல் சமீபத்தில் மறுபடியும் வெற்றி பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றிக்குப் பின்னால் இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.

உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய நிலைப்பாட்டை சபரிமலை விவகாரத்தில் மாற்றிக்கொண்டனரா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஒரு அரசியல் கட்சி உண்மையை உணர்ந்து கொண்டது. தாங்கள் உயிர்ப்புடன் இருக்கவும், கொள்கை முடிவுகளை கொண்டு வரவும் கண்டிப்பாக ஆட்சியில் இருக்க வேண்டும். அந்த ஆட்சியை பிடிப்பதற்கு, தொடர்ந்து தங்களுடைய ஆதரவாளர்களே அந்நியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டனர்.

ஆனால், மேற்கு வங்காள கம்யூனிஸ்ட், 2011-இல் ஆட்சியிழந்த பிறகும் தங்களுடைய நிலையை உணரவில்லை. நில கையகப்படுத்தும் விவகாரம் என்பது ஏற்கனவே இருந்த பெரிய பிரச்சனையை உடனடியாக பூதாகரமாக மாற்றிய ஒரு சிறிய தீப்பொறி தான். ஆனால் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சனைகளுக்கு வேறு பல அரசியல் பொருளாதார காரணங்கள் இருந்தன. அதைக்குறித்து எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

திரிணாமுல் காங்கிரசிற்கும், காங்கிரசுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என கம்யூனிஸ்ட் கட்சி கணக்கிட்டதும் பிழையில் முடிந்தது. தனியாகவே நின்று திரிணாமுல் காங்கிரஸ் 2014 லோக்சபா தேர்தல் மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது. 2016 தேர்தலில் காங்கிரஸுடன் கூட கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அதுவும் எடுபடவில்லை.

மத்தியில் கூட்டணியில் இல்லாத போது மாநிலத்தில் மட்டும் கூட்டணி வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு தவறானது என தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கமிட்டி தெரிவித்தது. ஆனால் இத்தகைய தோல்விக்கு பொறுப்பேற்று யாரும் பதவி இறக்கம் செய்யப்படவில்லை. யாரும் தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

எனவே 2014, 2016, 2019, 2021 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைவதை கிட்டத்தட்ட அனைவருமே எதிர்பார்த்தனர். 2021 சட்டசபை தேர்தலில் ஒரு சட்டசபை தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அவர்களுடைய தேர்தல் கூட்டாளியான 'இந்தியன் செக்யூலர் பிராண்ட்' என்ற ஒரு மதகுரு அறிவித்த கட்சியின் வேட்பாளர் மட்டுமே ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.

இத்தகைய அவமானத்தை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்திருக்கிறது. 2021 தேர்தல் முடிவைப் பற்றி பரிசீலிக்கும் பொழுது, இப்படி ஒரு மதகுருவின் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு உகந்ததா என்பதை பற்றி விவாதம் நடக்குமா என தெரியவில்லை.

இவ்வளவு தூரம் மோசமான பின்னடைவுகளுக்கு பிறகும் மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் கட்சி விவகாரங்களை கையாளும் விதம் குறித்து அங்கே உள்ள தலைமையிடமோ அல்லது அகில இந்திய தலைமையிடமோ எந்தவித பிரச்சனையையோ ஆதங்கமோ சுத்தமாக இல்லை.

தங்களுடைய வலிமை மிகுந்த தளமாக இருந்த ஒரு மாநிலத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியை கூட பெற முடியாத அளவிற்கு பின்னடைவை சந்தித்த பிறகும், எந்த வித விமர்சனமும் முன்வைக்காமல் கட்சிப் பதவிகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்களும் தான் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் என்று குமுறுகின்றனர் காம்ரேட்ஸ்.

மேற்கு வங்காளத்தில் மறுபடியும் கம்யூனிஸ்ட்டால் உயிர்த்தெழுந்து வர முடியவில்லை என்றால் CPM கட்சி என்பது கேரளாவை மட்டும் சேர்ந்த ஒரு பிராந்திய கட்சி ஆகிவிடும். அதன்பிறகு CPM கேரளாவை அடித்தளமாகக் கொண்ட பிராந்தியக் கட்சி மற்றும் குறைந்த அளவு சில இடங்களில் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக மட்டுமே அரசியல் நோக்கர்கள் கணிக்கத் துவங்குவார்கள். பிறகு தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழிவதை தடுக்க முடியாது.

With Inputs from: Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News