Kathir News
Begin typing your search above and press return to search.

ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த சீனா- உலக நாடுகள் கண்டனம்!

ஹாங்காங்கின் ஜனநாயகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த சீனா- உலக நாடுகள் கண்டனம்!

Saffron MomBy : Saffron Mom

  |  15 March 2021 1:00 AM GMT

சீனாவின் பாராளுமன்றம் வியாழக்கிழமை அன்று ஹாங்காங்கில் தேர்தல் முறையை மாற்றுவதற்காக வாக்களித்தது. இதில் வேட்பாளர்களை வீட்டோ (Veto) செய்யும் அதிகாரமும் உள்ளடங்கும். அதாவது 'தேசபக்தர்கள்' மட்டுமே தேர்தலிலேயே நிற்க முடியும்.

சமீபத்தில் ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவான பேரணிகளில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களில் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறது சீனா.

ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களை அடக்கி ஆள்வதில் சீனாவுடைய கொடூரத்தை உலகம் முழுவதும் பார்த்தது. கடந்த வருடம் தேசிய மக்கள் காங்கிரஸ் (சீன பாராளுமன்றம்) ஒரு தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இதுதான் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டத்தை தூண்டிவிட்டது.

வியாழக்கிழமை அன்று சீனாவின் பாராளுமன்றத்தில் 2896 உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டுமே ஓட்டளிப்பதில் இருந்து விலகி இருந்ததாகவும் இதுதான் ஹாங்காங் ஜனநாயக இயக்கத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் கடைசி ஆணி என்றும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் முதல் பல போராளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடி அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1997ல் சீனாவிற்கு ஹாங்காங்கை திருப்பி அளித்தது இங்கிலாந்து. இங்கிலாந்துக்கு கீழ் அரசியல் சுதந்திரத்தை அனுபவித்தது ஹாங்காங். சீனாவிற்கு ஒப்படைக்கப்படும் முன் 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் அமைப்பை மாற்ற முடிவு செய்தது சீனா. 'தேசபக்தர்கள்' மட்டுமே ஹாங்காங் மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று சீன பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள்தான் இந்த 'தேச பக்தர்கள்' யார் என்பதை முடிவு செய்வதில் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று மூத்த சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன அரசு ஊடகங்கள் இந்த சட்டத்தின் பிரிவுகளைப் பற்றிய சில முக்கியமான அம்சங்களை விவரித்துள்ளனர். இந்த சட்டம் இன்னும் முழுதாக எழுதப்பட வேண்டியிருக்கிறது. செல்வாக்கு மிக்க தேர்தல் கமிட்டி தான் ஹாங்காங் நகரத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கிறது. ஏற்கனவே இது சீனாவின் விசுவாசிகளால் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது 1200 லிருந்து 1500 பிரதிநிதிகளாக இது உயர்த்தப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் அரசியல் கருத்துக்களை சரி பார்ப்பதற்கென்றே ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் சட்டசபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை 70 லிருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 35 இடங்கள் மட்டுமே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் ஆய்வாளர்கள் கூறுகையில், சீனா எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளின் செல்வாக்கை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சட்டசபையும் கமிட்டியுமே தலைவரே தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டாமினிக் ராப், "இந்தத் திட்டம் ஹாங்காங்கில் ஒரு ஜனநாயக விவாதத்திற்கான இடத்தை முற்றிலும் அழித்து விடும் என்றும் இது சீனா அளித்த வாக்குறுதிகளுக்கு எல்லாம் எதிரானது என்று தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடையே சீனாவின் பொறுப்புகளையும் சீனா மீதுள்ள நம்பிக்கையும் இப்படி ஹாங்காங்கின் தேர்தல் முறையை மாற்றுவது மிகவும் பாதிக்கும் என்று தெரிவித்தார்.




அமெரிக்கா வியாழக்கிழமை அன்று இந்த சீனாவின் செயல்முறையை கடுமையாக விமர்சித்ததோடு ஹாங்காங்கில் ஜனநாயகத்தை நெரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிலிங்கன் கூறுகையில், 1997இல் சீனாவிற்கும் இங்கிலாந்திற்கு இடையிலாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஹாங்காங் மக்களின் உரிமைகளை முற்றிலும் மீறுவதாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.



"இத்தகைய நடவடிக்கைகள் தங்களுடைய சொந்த ஆட்சியிலேயே அவர்களுக்கான குரலை ஒடுக்கி, பிரதிநிதித்துவத்தை குறைத்து, அரசியல் விவாதத்தை நெரிப்பதாக" கூறியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், இந்த நடவடிக்கையினால் ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களை நன்கு உணர்ந்து இந்த முடிவை எடுக்குமாறும், இது ஹாங்காங்கின் ஜனநாயக கொள்கைகள் அடிப்படை உரிமைகளுக்கு எந்த தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

இந்த அமைப்பில், சீனா யாரை 'தேசபக்தர்கள்' என்று கருதுகிறதோ அவர்களை நிரப்புவதற்கான முயற்சி இது என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த புதிய ஏற்பாடுகளின் மூலம் ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கும் யாரும் தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்று கூறப்படுகிறது.


With Inputs from: Samvada World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News