அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்து அல்லாதோர்- புதிய கல்லூரிகள் திறப்பது இதற்குத்தானா ?
By : Shiva
இந்து சமய அறநிலையத்துறை தொடங்க இருக்கும் கல்லூரிகளில் இந்து அல்லாதோரையும் பணியமர்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் போலி கடவுள் மறுப்புக் கொள்கையை இந்துக்களிடமும் கோவில்களிலும் பின்வாசல் வழியாக திணிக்கும் முயற்சியே இது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களுக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் முயற்சியாக கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் கல்லூரிகள் கட்டப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இந்த வகையில் பத்து புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கல்லூரி முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் பணிபுரிய உதவி விரிவுரையாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்த விளம்பரத்தில் அறநிலையத் துறை சட்ட விதிப்படி இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்த்தும் அனைத்து மதத்தினரையும் பணியமர்த்த வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட வீரமணி, இது "அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் விரோதமானது" என்று கூறி இத்தகைய "குறைபாடுகள்" தொடக்கத்திலேயே களையப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், "இது அரசு கல்லூரி; இந்து அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசின் துறை" என்று குறிப்பிட்டு அங்கு படிப்பதற்கும் பணி புரிவதற்கும் அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார். முழுக்க முழுக்க கோவில் சொத்துக்களையும் கோவில் நிதியையும் மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும் இந்தக் கல்லூரிகள் எப்படி அரசு கல்லூரி ஆகும் என்ற கேள்வியை இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.
கோவில்களுக்கு வருமானம் ஈட்டி தருகிறேன் என்ற பெயரில், இந்துக்களின் பணத்தில் கல்லூரிகள் கட்டி அதன் நிர்வாகத்தில் இந்துக்களுக்கு உரிமையில்லை என்று கூறுவது மறைமுகமாக கோவில் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. மேலும் பிற மதத்தினரையும் இந்த கல்லூரிகளில் பணியமர்த்தச் சொல்வது திராவிடர் கழகம் மற்றும் திமுகவின் இந்துக்களை மட்டுமே எதிர்க்கும் போலி கடவுள் மறுப்புக் கொள்கையை பின்வாசல் வழியாக இந்துக்களிடையே திணிக்கும் முயற்சியாகவே தெரிவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதே போன்று தான் 2000 கிலோ கோவில் நகைகளை உருக்கி அதில் வரும் வருமானத்தையும் கோவில்கள் மற்றும் இந்துக்களின் நலனுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக "அரசு" மற்றும் "மதச்சார்பற்ற" திட்டங்களுக்கு அரசு பயன்படுத்துமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
Source: News 18