Kathir News
Begin typing your search above and press return to search.

"ஊழல்னாலே எனக்கு அலர்ஜி, எனது அரசியலும் ஊழல் இல்லாமல் தான் இருக்கும்" கதிர் செய்திகளுக்கு அண்ணாமலை IPS பேட்டி!

"ஊழல்னாலே எனக்கு அலர்ஜி, எனது அரசியலும் ஊழல் இல்லாமல் தான் இருக்கும்" கதிர் செய்திகளுக்கு அண்ணாமலை IPS பேட்டி!

ஊழல்னாலே எனக்கு அலர்ஜி, எனது அரசியலும் ஊழல் இல்லாமல் தான் இருக்கும் கதிர் செய்திகளுக்கு அண்ணாமலை IPS பேட்டி!

Pradeep GBy : Pradeep G

  |  23 Nov 2020 6:00 PM GMT

கேள்வி: கோவையில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு லக்னோவில் MBA முடித்து உள்ளீர்கள். IPS ஆக வேண்டும் என்ற லட்சியம் சிறுவயதிலிருந்து இருந்த ஒன்றா? அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவம் அல்லது நிகழ்வு உங்களை காவல்துறை பக்கம் ஈர்த்ததா?

பதில்: எனக்கு IPS ஆக வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்ததில்லை. நான் நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவன். பத்தாம் வகுப்பு முடித்த போது வீட்டில் இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்தார்கள். ஒன்று, மருத்துவம், மற்றொன்று இன்ஜினியரிங். அதனால் இன்ஜினீயரிங் படிக்கச் சென்றேன். வாழ்க்கை என்னை எங்கே அழைத்து சென்றதோ, அதனுடனே சென்றேன்.

இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் தான், வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியும், நம்முடைய கல்வி இன்னும் முழுமையடையவில்லை என்ற எண்ணங்களும் தோன்றியது. பயணங்கள் செல்ல வேண்டும், நிறைய அனுபவங்கள் பெற வேண்டும் என்று தான் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு மேற்படிப்புக்கு லக்னோவுக்கு சென்றேன்.

2008-10 வரை நான் உத்தரபிரதேசத்தில் படித்தேன். அந்த இரண்டு வருடங்கள் என்னுடைய வாழ்க்கையை மாற்றி விட்டன. மிகவும் ஆழமான வேரூன்றிய அனுபவங்களை எனக்கு அது கொடுத்தது. மக்கள் படும் கஷ்டங்கள் என்னுடைய மனதை மாற்றியது. தொழில் ஆரம்பித்து, தொழில் முனைவர் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த என்னை, இந்த மாற்றங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் பக்கம் இழுத்துச் சென்றன. 20 வயதுக்கு மேல் தான் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முன்னோக்குப் பார்வை வந்தது.

கேள்வி: IPSல் ரோல் மாடல் என்று யாரேனும் உங்களை ஈர்த்தார்களா?

பதில்: ரோல் மாடல் என்று பொதுவாக யாரையும் நினைத்ததில்லை. ஆனால் வீரப்பன் ஆபரேஷன் நடத்திய திரு. கே.விஜயகுமாரின் ரசிகன் நான். அவருடைய ஆளுமை, தலைமைத்துவம், ஒரு விஷயத்தை அவர் செய்து முடிக்கும் விதம் என்று எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

கேள்வி: கர்நாடகாவை சேர்ந்த உடுப்பியில் IPS ஆக பணியில் இணைந்தீர்கள். அப்பொழுது உங்களுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு அல்லது விசாரணை எதுவும் உள்ளதா?

பதில்: உடுப்பியில் நிறைய உள்ளது. முதல் காவல் துறைப் பணியில் நாம் எல்லாவற்றையும் முதல் முறையாகப் பாப்போம். அது நம் மேல் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் பார்க்கும் முதல் கொலை, பலாத்காரம், விபத்துன்னு நிறைய விஷயங்கள் நம் மனதில் நிறைய தாக்கத்தை உருவாக்கும். உதாரணமாக, காலையில் 'போய்ட்டு வரேன்' என்று சொல்லி விட்டு, பள்ளிக்கு சென்ற பையன் விபத்தில் இறந்து விடுவான் .

சந்தோசமாக வழியனுப்பி வைத்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும், பையன் சாயந்தரம் வீட்டிற்கு வர மாட்டான் என்று தெரியாது. ஒரு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமியை, பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார்கள்.

அந்த விசாரணை என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைக் குறித்து நிறைய வீடியோக்களில் நான் பேசியிருக்கிறேன். வீட்டிலிருந்து 5கிமீ தூரத்தில் தான் பள்ளிக் கூடம், இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த சம்பவம் தான் என் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேள்வி: காவல் துறைப் பணியில் இருந்து அரசியலுக்கு வரும் பொழுது, உங்கள் சிந்தனை ஓட்டம் எப்படி இருந்தது?

வெளிப்படையாகக் கூறினால், நான் பணியில் இருந்து ராஜினாமா செய்த பொழுது, அரசியலில் இறங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம் கிடையாது. ஒரு மாற்றம் வேண்டும், அடித்தளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து தான் வெளியில் வந்தேன்.

காவல்துறை பணி நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் உயர் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நான், அடித்தளத்திலிருந்து சமுதாயத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் வெளியில் வந்தேன். ஆரம்பத்தில் பெரிதாக திட்டம் என்று ஒன்றும் இல்லை. கடந்த ஒரு வருடமாகத் தான் இந்த புதிய எண்ணங்கள் வடிவெடுத்தன.

ஒரு அறக்கட்டளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் கஷ்டப்பட்டு மக்களுக்கு உதவி செய்கிறோம். அப்போது தான், ஏற்கனவே உருவாகி, அமைப்போடு இருக்கும் ஒரு கட்சியில் சேர்ந்தால் இந்த மாற்றங்களை சீக்கிரமாகவும் எளிதாகவும் கொண்டு வர முடியும் என்று தோன்றியது. அதனால் தான் அரசியலுக்கு வந்தேன்.

கேள்வி: கர்நாடக மக்கள் உங்கள் மீது பொழிந்த அன்பு பற்றி? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: நான் நேட்டிவ் கன்னட மொழி நன்றாகப் பேசுவேன். அந்த மொழி, அந்த ஊருக்குச் சென்ற பின்புதான் கற்றுக்கொண்டது. என்னைக் கடைசி வரை பலரும் கன்னடிகா என்று தான் நினைத்தனர்.

கடவுள் அருளால் பலதரப்பட்ட மக்களின் அன்பு எனக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், நம் கடமையை நாம் ஆத்மார்த்தமாக செய்யும் போது, மக்களிடம் அந்த தொடர்பு கிடைத்து விடும் என்றுதான் நம்புகிறேன். மக்கள் மீது இருக்கும் அன்பில், நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்மால் முடிந்த வரை சிறப்பாக செய்ய வேண்டும்.

யாரையும் உயர்த்தாமலும், தாழ்த்தாமலும், விருப்பு வெறுப்பு இல்லாமல், சட்டம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் தான் இந்த அன்பு எனக்குக் கிடைத்தது என்று நம்புகிறேன்.

கேள்வி: நீங்கள் அரசியல்'தான் ன்னு முடிவு பண்ணியதற்கு பிறகு ஏன் பா.ஜ.க'வ தேர்ந்தெடுத்தீங்க?

பதில்: இது இயற்கையாகவே அமைச்ச ஒரு விஷயம் தான் காரணம் இன்றைக்கு இளைஞர்கள் எல்லாம் பார்க்குற சில முக்கியமான விஷயங்கள் எல்லாமே எனக்கு பா.ஜ.க'ல இருக்குன்னு தோணியது.

முக்கியமா தலைவர்களின் செயல்பாடுகள் ஈர்ப்புதன்மையோட இருக்கனும், அடுத்து இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கனும், நம்ம எண்ணங்களுக்கு இடம் கொடுக்கும் விதமாக அந்த கட்சி இருக்கனும், இது எல்லாவற்றிலும் மேலாக குடும்ப அரசியல் மற்றும் பணம் படைத்தவர்களின் ஆதிக்கம் இல்லாமல் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் கட்சியாக நான் பா.ஜ.க'வ பார்க்குறேன்.

அதுமட்டுமில்லாம பா.ஜ.க'வின் அரசியல் அதிகார தலையீடு இல்லாம கடைசி மனிதனுக்கும் அரசாங்கத்தின் உதவிகள் போகனும்'ன்ற செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டதா இருக்கு இதெல்லாம் தான் நான் பா.ஜ.க'வில் சேர முக்கிய காரணங்கள்.

முக்கியமா ஊழல்'ன்னாலே எனக்கு அலர்ஜி அது போல தான் பா.ஜ.க'வும் ஊழல் இல்லாத கட்சி

கேள்வி: இன்னைக்கு தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் தமிழக பா.ஜ.க'வ மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க உங்களின் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?

பதில்: இன்னைக்கு இருக்க கூடிய அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க'வாகிய நாங்கள் எந்த ஒரு தனி மனிதரையும் புகழ் பாடமாட்டோம், இந்த கட்சியோட சித்தாந்தம், கட்சியோட கொள்கை போன்ற அனைத்தயும் ஒருங்கிணைத்து செயலாற்றுவோம்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 42 சதவீதம் ஒட்டுக்கள் 20 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள்தான் வாக்களிக்க போகிறார்கள் அந்த சூழ்நிலையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் மேல் இளைஞர்கள் கோபமாக இருக்கிறார்கள் மாறாக பா.ஜ.க'வில் இளைஞர் எழுச்சி அதிகளவில் உள்ளது இளைஞர்கள் தானக முன்வந்து பா.ஜ.க'வை ஆதரித்தும், ஐக்கியமாகியும் வருகின்றனர்.

பா.ஜ.க தமிழகத்தில் இளைஞர்களின் கட்சியாகவும், இளைஞர்களுக்கான கட்சியாகவும் மாறிவிட்டது எனவே 2021 தேர்தலில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். முக்கியமாக நரேந்திர மோடியின் திட்டங்கள் விவசாயிகளுக்கான திட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பரவலாக நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இது எல்லாவற்றிலும் மேலாக தி.மு.க'வின் அரசியல் நாடகங்கள் அனைத்தும் பிசுபிசுத்து விட்டது, "கோ பேக் மோடி பிரச்சாரம் வலுவில்லாமல் போய்விட்டது,

"ஹிந்தி தெரியது போடா" பிசுபிசுத்துவிட்டது, "புதிய கல்விக் கொள்கை" மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். இவை எல்லாவற்றிலும் மேலாக தமிழகத்தில் தேர்தல் வேலைகளில் நாம் பூத் வாரியாக "சக்தி கேந்த்ரா" என்ற நடவடிக்கையின் கீழ் மிகுந்த பலத்துடன் உள்ளோம். இதுவரை தடுத்து ஆடிய தமிழக பா.ஜ.க இன்று இறங்கி அடிக்கும் பலத்தில் உள்ளது.

கேள்வி:- தமிழக அரசியல் கட்சிகளில் குறிப்பாக தி.மு.க உங்கள் அரசியல் வருகையையும், நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உங்களிடம் விவாதம் செய்யவே தி.மு.க'வினர் அஞ்சுகின்றனர். இந்த நிலையில் நீங்கள் தி.மு.க'வினருக்கு தரும் பதிலடி என்ன?

பதில்:- .ப்ரதர் என் அரசியல் வன்மம் சார்ந்த அரசியல் கிடையாது, மேலும் தி.மு.க'வின் அரசியல் இதுவரை தனி மனிதனை துதிபாடவும், குடும்ப ஆதிக்கத்தை மையப்படுத்தியும், ஒரே விதமான எதிர்ப்பை காண்பித்து அதை வைத்து அரசியல் செய்து வந்தனர் குறிப்பாக கடவுள் இல்லை, ஆன்மீகம் என்பது தவறானது போன்ற கருத்துக்கள் தான் அவர்களின் அரசியலாக இருந்தது

ஆனால் இன்றைய அரசில் களம் மாறியுள்ளது மக்கள் எதிர்ப்பு அரசியலை விடுத்து சமுதாய முன்னேற்ற அரசியலை எதிர்பார்க்க துவங்கி விட்டனர். இந்த நிலையுலும் தி.மு.க அதனை புரிந்துகொள்ளாமல் எதிர்ப்பு அரசியலை செய்து வருகிறது, உதாரணமாக சில தினங்கள் முன் தி.மு.க ஐடி விங்க தலைவர் என்னை சமூக வலைதளத்தில் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தார் அதுதான் அவர்களுக்கு தெரிந்த அரசியல்.

தி.மு.க'வின் அரசியல் தரம்தாழ்ந்து போய்விட்டது பா.ஜ.க'வின் வளர்ச்சியை கண்டு பயத்தில் செய்வதறியாது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த தரம்தாழ்ந்த அரசியலை, தனிமனித, குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் வெறுக்க துவங்கிவிட்டனர் மாறாக பா.ஜ.க'வின் அரசியலான தனி மனித முன்னேற்றம், வளர்ச்சி சார்ந்த சிந்தனை, இளைஞர்களின் எழுச்சி போன்றவற்றை மக்கள் விரும்ப ஆரமித்துவிட்டனர்.

எல்லாவற்றிலும் மேலாக தமிழகத்தில் எல்.முருகன் தலைவராக வந்த பிறகு மக்களிடத்தில் பா.ஜ.க'வின் மேல் வந்த தனிப்பட்ட மரியாதை இவையெல்லாம் தி.மு.க'வை நிலைகுலைய செய்துவிட்டது.

கேள்வி: காவல்துறை அதிகாரியாக இருந்த போது உங்களது அணுகுமுறைக்கும் தற்போது அரசியலில் நுழைந்த பின் ட்ரோல் செய்பவர்கள், குறிப்பாக உங்களைக் குறிவைத்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகளிடம் உங்கள் அணுகுமுறை வேறுபட்டு இருக்கிறதே? இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. காவல்துறையை பொறுத்த வரைக்கும் ஒரு தெளிவான சட்டம் இருக்கிறது; நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அதை கண்டிப்பாக பின்பற்றுகிறோம். அரசியலுக்கு வந்தபின் என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், தி.மு.க ட்ரோல்ஸ், மீம்ஸ், அல்லது தி.மு.க தலைவர்கள் பேசும் கருத்து அவர்களுடைய இயலாமையைத் தான் காட்டுகிறது.

அது மக்களுடைய கருத்து கிடையாது, மக்கள் அப்படி நினைக்கவில்லை என்பதை அரசியலில் நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். 80% மக்கள் நாகரிகமாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதைத்தான் விரும்புகிறார்கள். மக்களுடைய இந்த எண்ணத்தை அரசியலில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஆட்டுக்குட்டி அண்ணாமலைனு எனக்கு ஒரு அடைமொழி கொடுத்து இருக்கிறார்கள்.

என்னுடைய சமுதாயமும் நான் செய்யும் வேலையும் ஆடு, மாடு இவற்றைச் சார்ந்தது. நாங்கள் அனைவருமே விவசாயம் பண்ணக் கூடிய ஆட்கள். என்னிடம் ரேஞ் ரோவரோ, ஹம்மர் காரோ கிடையாது. நான் அந்த மாதிரி ஒரு காரில் வந்து ஆட்டுக்குட்டி இல்லாமல் போஸ் கொடுத்திருந்தால், அர்களுடைய இளம் தலைவர் மாதிரி நின்றிருந்தால், ஹம்மர் கார் அண்ணாமலை என்று கூப்பிட்டு இருப்பார்கள்.

ஆனால் ஹம்மர் கார் என்பது அவர்களுக்கான அடைமொழி. இந்த மாதிரி அவர்கள் கூப்பிடும்போது அவர்களுடைய அரசியல் சித்தாந்தம் எதை சார்ந்தது என்று தெரிய வருகிறது. பெரிய பெரிய கம்பெனிகள், கார் நிறுவனங்கள், ஆடம்பர வசதி வாழ்க்கையைச் சார்ந்தது‌ என்று தெரிய வருகிறது. நாம் அடித்தட்டு மக்களாக இருக்கும்போது ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று பெயர் வைக்கிறார்கள்.

எனக்கு கொடுக்கப்பட்ட அடை மொழிகளிலேயே இதுதான் சிறந்தது. 'சிங்கம்' அண்ணாமலையை விட 'ஆட்டுக்குட்டி' அண்ணாமலையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் அதுதான் நம்மை சாதாரண மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறது; என் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. அதனால் இதை அவர்களுடைய ஆற்றாமையாகத் தான் நான் பார்க்கிறேன்.

அரசியலில் கோபப்பட என்ன இருக்கிறது. உதாரணமாக மதுரை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக் கொண்டால் அவரைப் பொறுத்த வரைக்கும் அரசியல் என்றால் "என் தாத்தா முதலமைச்சராக இருந்தார்; என் அப்பா இப்படி இருந்தார்; நான் இப்படி இருக்கிறேன். என்னை எதிர்த்து ஒரு சாதாரண மனிதர் ஒரு விவசாயி கேள்வி கேட்கிறதா?" அப்படிங்கறது தான் அவருக்கு கோபம் வருகிறது.

ஐ.டி விங் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து என்னை ட்ரோல் செய்து இருக்கிறார். யார்‌ யாரோ போடுகிற ட்வீட்டெல்லாம் ரீட்வீட் செய்கிறார். இதெல்லாம் எனக்கு நாகரீகமான அரசியலாகல் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது ஆற்றாமையைக் காட்டுகிறார்கள், அவர்களது பயத்தைக் காட்டுகிறார்கள் என்று தான் நான் எடுத்துக்கொண்டேன்.

அவர்கள் அவர்களுடைய ஏசி அறையிலிருந்து, ஹம்மர் காரில் இருந்து, ரேஞ்ச்ரோவரில் இருந்து கீழே இறங்கி, கம்பளம் விரிக்காமல் இறங்கி வந்தார்கள் என்றால் ஆட்டுக்குட்டி அண்ணாமலையை மக்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்று தெரியும்.

கேள்வி : பிரதமர் மோடியிடம் ஒரு‌ தலைவராகவும் அரசியல்வாதியாகவும் நீங்கள் வித்தியாசமாக, புதுமையாகப் பார்ப்பது என்ன?

பதில்‌: மோடிஜி ஒரு Doer. அவர் ஒரு வேலையைத் திறம்பட செய்து முடிக்கக் கூடிய ஒரு மனிதர். ஒரு திட்டம் போடுகிறார் என்றால் அதற்கு ஆரம்பத் தேதியும் சொல்லி விடுவார், இறுதித் தேதியும் சொல்லி விடுவார் . உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் ஸ்வச் பாரத் திட்டம். அதன் முதல் கட்டம் 2019ல் முடிந்து இரண்டாவது கட்டம் 2024ல் முடிக்கப்படவேண்டும் என்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு guts வேண்டும்.

ஒரு அரசியல் தலைவர் ஒரு திட்டத்தை இலக்கு வைத்து data centric ஆக செய்கிறார் என்றால் அதற்கு ஒரு guts வேண்டும். எனக்கு மோடியிடம் பிடித்த விஷயம், இந்தியா மாதிரி ஒரு நாட்டுக்கு data centric திட்டமிடுதல் அவசியம். அதை மோடி அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய திட்டங்கள் எல்லாமே targetted and data-driven. ஒரு திட்டம் போட்டால் அது எப்போது ஆரம்பிக்கிறது, எப்போது முடியும், யாரைப் போய் சேர்கிறது, அதனால என்ன நடக்கிறது என்றெல்லாம் சிந்தித்து செயல்படுகிறார்.

பிற தலைவர்கள் அப்படி அல்ல. அதனால் தான் மோடியின் திட்டங்களில் முதல்முறையாக கண்கூடாகப் பார்க்க கூடிய மாற்றம் தெரிகிறது. எடுத்துக்காட்டாக ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 51 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதே இந்தியா முழுவதும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 2014 அக்டோபர் 2ஆம் தேதியில்(ஸ்வச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்) இருந்து இன்று வரை இத்தனை கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த தரவுகளை நான் எப்படி சொல்கிறேன்? sbm.gov.in என்று ஸ்வச் பாரத் மிஷனுக்கு என்று ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் சென்று பார்த்தால் இன்று வரை, இப்போது வரை எத்தனை கழிவறைகள் கட்டி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம். அவற்றின் புகைப்படங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் வெளிப்படையாக நாம் பார்த்துக் கொள்ளலாம். அதே மாதிரி மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

இதுவும் அதே மாதிரிதான். எந்த இடத்தில இன்னும் மின்சார வசதி கிடைக்காமல் இருக்கிறதென்று நாமே போய்ப் பார்த்துக் கொள்ள முடியும். இது எல்லாமே data centric. விவசாயிகளுக்கும் எல்லாமே செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விவசாயிக்கு 1,60,000 ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை அவரால் எந்த அளவுக்குத் திருப்பி செலுத்த முடியும் என்பதைப் பொருத்து, சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் வெறும் 4% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதையும் கட்ட வேண்டிய சமயத்தில் சரியாகத் திருப்பிச் செலுத்தி விட்டால் 3% வட்டி தள்ளுபடியும் செய்யப்படுகிறது.

இதெல்லாம் மிகத்‌ துல்லியமாக இலக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள். பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இதேமாதிரி ஒவ்வொரு தொகுதிக்கும் கிட்டத்தட்ட 8000, 9000 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் எவ்வளவு பயனாளர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? 5 லட்சம் ரூபாய்க்கு 23,000 மருத்துவமனைகளில் 1,400 வகையான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த மாதிரி நிறைய திட்டங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டைப் பொருத்த வரைக்கும் நிறைய திட்டங்களும் பயனாளர்களும் இருக்கிறார்கள். விவசாயிகளுக்குத் தலா ₹ 2000 வீதம் மூன்று தவணையில் ₹ 6000 வழங்கும் திட்டத்தில்.. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கூட சொன்னார்கள்.. அந்த மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ₹ 150 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம். லட்சக்கணக்கான பெண்கள் இதனால் பயனடைந்துள்ளனர். இதெல்லாம் நான் எதற்கு சொல்கிறேன் என்றால் targetted திட்டமிடல். Target என்ற வார்த்தை இங்கு முக்கியமானது. எந்த திட்டம் யாரைப் போய்ச் சேரவேண்டும் என்று தெளிவான திட்டமிடலுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொருவரின் வீட்டு வாசலுக்கும் வங்கி கணக்குக்கும் நேரடியாக பலன்கள் சென்றடைகின்றன. தனது நிர்வாகத் திறமை மீது நம்பிக்கை கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இதற்கு முன்பு டெல்லியில் திட்டம் போடலாம், ஆனால் அது தமிழ்நாட்டை வந்து அடையாது என்ற நிலை இருந்தது.

ஏனென்றால் இங்குள்ள bureaucratic system அப்படி. மோடியின் திட்டங்கள் சாதாரண மனிதனைக் கூட சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகிறது. இரண்டாவதாக பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி. இன்னும் 15 வருடங்கள் கழித்து இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்துத் திட்டமிடுகிறார்.

பிற அரசியல்வாதிகளைப் பார்த்தீர்களென்றால் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள். நாளைக்கு அரசியலில் ஏதாவது லாபம் கிடைக்குமா என்று மட்டும் பார்க்கும் தலைவர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு கட்சியாக பா.ஜ.கவும் ஒரு தலைவராக மோடியும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள். விவசாயம் முன்னேற நவீன விவசாய மசோதா வந்திருக்கிறது.

சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால், பிரச்சனை ஏன் வருகிறது? எல்லையை ஒட்டிய எல்லா பகுதிகளிலும் சாலைகள் போட்டு விட்டோம்; கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள எல்லா இடங்களிலும் விமான தளங்கள் கட்டியாயிற்று. இதைப் பார்த்து சீனா செய்வதறியாது திகைக்கிறது. இத்தனை நாள் எதுவும் செய்யாமல் இருந்தவர்கள் இப்போது சுரங்கப்பாதை போடுகிறார்கள்; ரோடு போடுகிறார்கள்; விமானதளம் அமைக்கிறார்கள்.

எல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு செய்யப்பட்ட விஷயங்கள். இந்த விஷயத்தில் பார்த்தோமென்றால் வாக்கு வங்கி அரசியலைத் தாண்டி தனது நாட்டுக்காக உண்மையிலேயே நாட்டுப்பற்றோடு செயல்படும் தலைவராக மோடி இருக்கிறார். இந்த இரண்டு விஷயங்கள்தான் எனக்கு அவரிடம் பிடித்தவை.

கேள்வி: கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தல். அதில் எந்த மாதிரியான விளைவுகள் வருவது தமிழ்நாட்டிற்கு நல்லது?

இது ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கப் போகிறது. இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்கப் போகிறார்கள். நீங்கள் கூறியது போல மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாமல் தேர்தல் நடப்பதால் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகியிருக்கிறது.

திரு. ரஜினிகாந்த் அவர்களைக் குறித்தும், பா.ஜ.க மேலும் ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. என்னைப் பொருத்த வரைக்கும், 2021 தேர்தல் என்பது இன்னும் முடிவு செய்யப்படாத ஒன்று. எல்லாக் கட்சிகளுக்கும், குறிப்பாக மாற்று சக்திகளுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.

கேள்வி : பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிகமாக உணரப்படும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள் ஒரு டிஜிட்டல் ஊடகமாக கதிர் செய்திகளின் செயல்பாடு பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : கதிர் செய்திகள் குழு தனித்துவமான ஒரு பணியை செய்து வருகிறீர்கள். தமிழகத்தில் நிலவும் சூழலில் உங்களைப் போன்ற ஊடகங்கள் செயல்படுவது மிகக் கடினம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே உங்களுக்கு எதிராக இருப்பார்கள்.

ட்விட்டர் பக்கம், யூடியூப் பக்கம் என அனைத்தையும் முடக்கப் பார்ப்பார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டில் கதிர் ஒரு வித்தியாசமான அரசியல் கண்ணோட்டத்தோடு செய்திகளை வழங்கி வருகிறது. என்னைப் பொறுத்த வரை கதிர் செய்திகள் ஒரு வளர்ந்துவரும் சக்தி. பெரிய அளவில் வளர்ந்து இருக்கக்கூடிய ஒரு ஊடகம். உங்களது இணையதள பக்கங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பே அதற்கு சாட்சி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை செய்தி வழங்கும் ஊடகங்கள் உள்ளூர் அளவில் பிரபலமாகி வருகின்றன. அதனால் தான் பல யூடியூப் சேனல்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. கதிர் செய்திகளும் அதுபோன்ற நாட்டின் மீது பற்றுக் கொண்ட, சில சமயங்களில் கட்சி சார்பு இல்லாத, உறுதியான நிலைப்பாடு மற்றும் நம்பிக்கையுள்ள பலர் எழுதும் ஒரு ஊடகமாக இருக்கிறது.

அடி மட்டத்தில் இருந்து நீங்கள் செய்திகளை எழுதுவதால் தான் அவை தனித்துவமாக இருக்கின்றன. ஏனென்றால் நீங்கள் சாமான்யர்கள். ஒரு சாமான்யரின் விருப்பம் மற்றும் கோபத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் தான் உங்களது எழுத்து தனித்துவமாக இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News